ஜூலை முதல் வாரத்தில் திமுக.,வின் 21 பேர் அடங்கிய சொத்துப்பட்டியலின் 2ம் பாகம் வெளியிடப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு ஓராண்டில் 3 முறை ஆவின் பால் விலையை உயர்த்தியுள்ளது. அதேநேரத்தில் பாலில் உள்ள கொழுப்பு அளவையும் குறைத்துள்ளது. திமுக.,வின் நாசரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதை பா.ஜ., வரவேற்கிறது. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை புதிய அமைச்சர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
அதிக அளவில் நிறுவனங்களை நடத்தி வரும் குடும்பம் என்பதால் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? டி.ஆர்.பாலு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது நகைப்புக்குரியது. இதனால் அவர் மீது நான் வைக்கும் குற்றச்சாட்டு ஒரு சதவீதம் கூட குறையாது, மேலும் அதிகமாக குற்றச்சாட்டை வைப்பேன். இதுவரை மொத்தம் ரூ.1461 கோடி நஷ்டஈடு கேட்டு என் மீது திமுக.,வினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பலமுறை முதல்வர் ஸ்டாலின் பாராட்டிய அமைச்சர் தியாகராஜனை தற்போது வேறு இலாக்காவிற்கு மாற்றியதற்கான காரணம் என்ன? தவறு செய்தது திமுக.,வின் குடும்பம், அதனைப்பற்றி பேசியதற்காக இவரை மாற்றுகின்றனர். முழு ஆடியோ ஆதாரத்தையும் நான் நீதிமன்றத்தில் சமர்பிப்பேன். ஜூலை முதல் வாரத்தில் 21 பேர் அடங்கிய திமுக.,வின் சொத்துப்பட்டியலின் 2ம் பாகம் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.