நேற்று தமிழக சட்டமன்றத்தில் காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விடக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது வெறும் கண்துடைப்பிற்காக நடத்தப்பட்ட நாடகம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்து சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தது பாஜக. வானதி சீனிவாசன் அவர்கள் கூறியது போலவே திமுகவின் நாடகம் ஒரு வீடியோ மூலம் வெளிவந்தது.
அந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்து திமுகவின் நாடகத்தை தோலுரித்து காட்டியுள்ளார். வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த அண்ணாமலை அதுகுறித்து தனது கருத்தையும் பதிவேற்றியுள்ளார்
திமுகவின் டெல்டா பகுதி நிர்வாகிகள் கூட்டத்தின் காணொளி ஒன்றைக் காண நேர்ந்தது. அந்தக் காணொளியில், வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க, கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போராடுவது போல நடிக்க வேண்டும் என்று நாகை மாவட்டத் திமுக நிர்வாகி ஒருவர் பேசுகிறார். அவர், திமுக நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் என்று அறிகிறேன். மேலும் அந்தக் கூட்டத்தில், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரும் பங்கேற்றுள்ளார்.
இன்றைய தினம் சட்டசபையில், காவிரிப் பிரச்சினைக்காக தீர்மானம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிய திமுக, தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், செய்தியாளர்கள் முன்னிலையில், போராட்டம் நடத்தப் போகிறோம் என்று கூறிவிட்டு, அவர்கள் சென்ற பிறகு போராடுவதைப் போல நடித்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
திமுக காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தமிழக மக்களுக்குத் துரோகங்கள் செய்வதே வரலாறு. காவிரிப் பிரச்சினையில், நாளொரு நாடகம் நடத்தி வரும் திமுக, தற்போது மக்களை ஏமாற்ற, கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்ப்பது போல ஒரு மாயையைக் காட்ட வேண்டும் என்று, போராட்டம் நடத்துவது போல நடிக்கவிருக்கிறது.
இவர்களின் உண்மையான நோக்கம், மக்களுக்கான உண்மையான தீர்வு அல்ல; மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது மட்டுமே என்பதை அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















