திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் சனாதன தர்மத்தை கேலி செய்யும் போது பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஏற்படும் கடுமையான வலி குறித்து என்ன சொல்வது? என்றும், அப்போது ஏன் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் இன்ஸ்டாவில் பிரபலமாக உள்ள 22 வயதான ஷர்மிஸ்தா பனோலி என்ற இளம்பெண்னை போலீசார் கைது செய்தனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பாலிவுட் நடிகர்கள் மவுனம் காத்ததாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவில் மத ரீதியாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் அவர் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, நேற்று இரவு ஷர்மிஸ்தா பனோலியை மேற்கு வங்க மாநில போலீசார் கைது செய்தனர். ஷர்மிஸ்தா பனோலி கைதுக்கு மேற்கு வங்கத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணும் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பவன் கல்யாண் கூறியதாவது:- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக சட்டக்கல்லூரி மாணவி, வருத்தமளிக்க கூடிய வகையிலும் சிலரை காயப்படுத்தும் விதமாக சில கருத்துக்களை வெளியிட்டார். தனது தவறை ஒப்புக்கொண்டு அந்த வீடியோவை உடனடியாக டெலிட் செய்தார். மன்னிப்பும் கோரியுள்ளார். அனாலும் மேற்கு வங்க போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர்.ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் சனாதன தர்மத்தை கேலி செய்யும் போது பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஏற்படும் கடுமையான வலி குறித்து என்ன சொல்வது? அப்போது ஏன் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. மத நிந்தனை எப்போதுமே கண்டிக்கப்படக் கூடிய ஒன்றாகும். மதசார்பின்மை என்பது சிலருக்கு கேடயாமகவும் சிலருக்கு வாளாகவும் இருக்கக் கூடாது.
இருபக்கமும் வழி உள்ள ஒரு பாதையாக இது இருக்க வேண்டும். தேசமே பார்த்து கொண்டு இருக்கிறது. மேற்கு வங்க போலீசார் நியாயமாக செயல்பட வேண்டும்” என்று சாடியுள்ளார். அதேபோல கங்கனா ரணாவத்தும் சமூக ஊடக பிரபலம் ஷர்மிஸ்தாவிற்கு ஆதரவு தெரிவித்துள்லார். இது தொடர்பாக கங்கனா ரணாவத் கூறுகையில், “ஷர்மிஸ்தா சில விரும்பதகாத கருத்துக்களை பயன்படுத்தியதை நான் ஒப்புக்கொள்கிறேன். தற்போது பெரும்பாலான இளைஞர்கள் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். தனது கருத்துக்கு அவர் மன்னிப்பும் கேட்டு இருக்கிறார். மேற்கு வங்கத்தை வடகொரியாவாக மாற்ற முயற்சிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.