அரசு மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லாததால் மக்கள் தொடர்ந்து அவதிபட்டு வருகின்றார்கள். மேலும் சில மருத்துவர்களின் அலட்சியமும் அரசு மருத்துவமனைகள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை குறைத்துள்ளது, அரசு மருத்துவமனையின் சீர்கேட்டினால் ஏழை எளிய மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு மருத்துவமனை அலட்சியத்தால் தமிழகத்தில் உயிர் பலி சம்பவமும் நடைபெற்றது.
அப்படி இருந்தும் இன்னும் மருத்துவமனைகளை சீரமைக்க திமுக அரசு முன் வரவில்லை. விளம்பரங்களில் கவனம் செலுத்தும் தி.மு.க மக்களின் அத்தியாவசிய தேவையான மருத்துவமனைகளை கண்டு கொள்ளவில்லை.விளம்பரம் செய்வதிலும் உதயநிதியை முதல்வராக்குவதிலும் மும்முரம் கொண்டு வேலை செய்து வருகிறார்கள்
சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவனையில் மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனைவயில் வயிறு வலியால் துடித்து வந்த பெண் நோயாளிக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் நக்கலாகவும், திமிர்த்தனமாகவும் அரசு மருத்துவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மக்களின் வரிப்பணத்தை ஊதியமாக பெற்றுக் கொண்டு, அந்த மக்களையே அலட்சியமாக நடத்தும் அந்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் மொகரம் (39). இவருக்கு நேற்று இரவு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, இரவு 11 மணியளவில் அவரது உறவினர்கள் அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு இரவுப் பணியில் மருத்துவர் கார்த்திகேயன் என்பவர் இருந்துள்ளார். ஆனாலும், அவர் வெளியே வந்து மொகரமை பரிசோதித்து பார்க்கவில்லை எனத் தெரிகிறது. அங்கிருந்த கம்பவுண்டர் தான் அவருக்கு வயிற்று வலிக்கான ஊசியை செலுத்தினாராம்.
ஆனால் ஊசி போட்டு ஒன்றரை மணிநேரமாகியும் கூட மொகரத்துக்கு வயிற்று வலி குணமாகவில்லை. இதையடுத்து, அவரது உறவினர்கள் மருத்துவரை வெளியே வந்து பரிசோதிக்குமாறு வலியுறுத்தினர். இதனால் கோபமடைந்த மருத்துவர் கார்த்திகேயன், வெளியே வந்து, “நீங்க அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த மொகரமும், அவரது உறவினர்களும், “ஒரு சாதாரண வயிற்று வலிக்கு கூட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மாட்டீங்களா? இதற்கு நாங்கள் அடுக்கம்பாறை வரை செல்ல வேண்டுமா?” என்று கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், நக்கலான முகபாவனையை வைத்துக் கொண்டு, “ஏம்மா உனக்கு தானே வயித்து வலி.. வயித்து வலிக்கான ஊசி போட்டாச்சு. இங்க பிரச்சினை பண்ணிட்டு இருக்கக் கூடாது.. போங்க.. அடுக்கம்பாறைக்கு போ..” எனக் கூறியுள்ளார்.
மேலும், தான் ஆர்த்தோ (எலும்பு நோய்) மருத்துவர் என்றும், வயிறு வலிக்கு எல்லாம் தன்னால் வைத்தியம் பார்க்க முடியாது எனவும் கூறியதாக தெரிகிறது. மருத்துவரின் இந்த அலட்சிய பேசசால் அதிருப்தியடைந்த மொகரம், “இங்க பாருங்க.. இந்த உனக்கு எனக்கு அப்படி எல்லாம் பேசக்கூடாது. நான் உங்களை நீ நான் என பேசட்டா. டாக்டர் தானே நீங்க. மரியாதையா பேசக்கூட உங்களுக்கு தெரியாதா? வயிறு வலிக்கு வைத்தியம் பார்க்க தெரியாதுனா எதுக்கு நைட் டியூட்டி வர்றீங்க” என்று கேள்வியெழுப்பினார். ஆனாலும், மருத்துவர் கார்த்திகேயன், மொகரம் பேச பேச, அவரை நக்கல் செய்வது போல முகபாவனைகளை வைத்துக் கொண்டிருந்தார். மேலும், எவ்வளவு வேணும்னாலும் வீடியோ எடுத்துக்க.. யாருக்குனாலும் அனுப்பு” என்றும் கூறினார். தற்போது இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நோயாளியிடம் அநாகரீகமாகவும், அலட்சியமாகவும் பேசும் இந்த மருத்துவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.