குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் அக்குடியிருப்புகளில் குடியேறி சில மாதங்களே ஆன நிலையில், கை வைத்தாலே சுவர்கள் உதிர்ந்து கொட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூவம், அடையாறு கரையோரம் குடிசையில் வசிக்கும் மக்களை மறு குடியமர்த்த, சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டன.
தற்போது சென்னைபுளியந்தோப்பில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் முழுவதுமாக இடிய துவங்கி விட்டது என்றும் மக்கள் வசிக்க பாதுகாப்பு இல்லாத கட்டிடமாக மாறிவிட்டது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது.
அறப்போர் இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: ” கடந்த அதிமுக ஆட்சியில் சந்தை விலையை விட அதிக விலைக்கு செட்டிங் செய்து கொடுக்கப்பட்ட டெண்டர் மூலம் PST நிறுவனம் கட்டிய கட்டிடம் தான் புளியந்தோப்பு KP park குடியிருப்பு கட்டிடங்கள். இதை கட்டி முடித்த சில மாதங்களிலேயே பூச்சுவேலைகள் இடிந்து விழுவதாக புகார் வந்ததை அடுத்து அப்பொழுது ஆட்சி பொறுப்பை ஏற்றிருந்த திமுக அரசு IIT ஆய்வுக்கு உத்தரவிட்டது. அந்த ஆய்வறிக்கையில் இந்த குடியிருப்பில் பயன்படுத்தப்பட்ட பூச்சு வேலை 90% தரமற்றது என்று முடிவு வெளியிடப்பட்டது.
ஆய்வறிக்கை அடிப்படையில் கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை பாயும் என்று வீர வசனம் பேசிய அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அன்பரசன் ஆகியோர் அந்த அறிக்கை வந்த பிறகு இந்த கட்டிடம் குறித்து வாய் திறக்கவே இல்லை. தற்பொழுது அந்த கட்டிடம் முழுவதுமாக இடிய துவங்கி விட்டது. மக்கள் வசிக்க பாதுகாப்பு இல்லாத கட்டிடமாக மாறிவிட்டது.
தினமும் அங்கே மக்கள் உயிர் பயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அங்கிருந்து வெளியேறி போக அவர்களுக்கு வேறு இடமும் கிடையாது. ஆனால் இந்த தரமற்ற கட்டிடத்தை கட்டி கோடிக்கணக்கில் சம்பாதித்த PST நிறுவனம் கோடிகளில் புரள்கிறது. திமுக ஆட்சியிலும் அரசு பணிகளை டெண்டர் எடுத்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.
இந்த தரமற்ற கட்டிடத்தை கண்காணிக்க தவறிய அரசு ஊழியர்கள் மக்கள் பணத்தில் எந்த வித கூச்சமும் இல்லாமல் சம்பளமும் கிம்பளமும் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். நடவடிக்கை எடுப்பதாக சட்டசபையில் முழங்கிய அமைச்சர் அன்பரசன் இதை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்? தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?
PST நிறுவனம் Blacklist செய்யப்பட வேண்டும். அவர்கள் மீதும் இதை கண்காணிக்க தவறிய அரசு ஊழியர்கள் மீதும் FIR போடப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
என கேள்வி கேட்டுள்ளது..
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















