டெல்லி முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து வந்துள்ளவர் என்றும், டெல்லியின் வளர்ச்சிக்காக முழுவீச்சில் பாடுபடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இது இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது.
ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக (MLA) தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா டெல்லியின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இங்கு பாஜக 70 இடங்களில் 48 இடங்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
ரேகா குப்தா 1974 இல் ஹரியானா மாநிலத்தில் உள்ள நந்த்கரில் பிறந்தார். ரேகா குப்தா டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (DUDU) முன்னாள் பொதுச் செயலாளராக இருந்தவர். பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். பாஜகவின் டெல்லி மாநிலப் பிரிவின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
தற்போது சாலி மார் தொகுதியில் ஆம் ஆத்மியின் பந்தனா குமாரியை எதிர்த்து போட்டியிட்டு 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அரசியலில் திருப்புமுனையை எற்படுத்தினார். 27 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த பாஜக மீண்டும் தற்போது ஆட்சிக்கு வந்ததில் களவேலைகளை பார்த்ததில் ரேகா குப்தாவும் ஒருவர் என்பதால் பாஜக மேலிடம் முக்கியத்துவம் தந்துள்ளது.
ரேகா குப்தா, 1996-1997 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 2007 ஆம் ஆண்டில் டெல்லி மாநகராட்சியில் உள்ள உத்தரி பிடம்புரா (வார்டு 54) இல் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2012 ஆம் ஆண்டில் உத்தரி பிடம்புராவில் (வார்டு 54) இருந்து கவுன்சிலர் ஆனார். கவுன்சிலராக இருந்தவர், டெல்லியின் ஷாலிமார் பாக் தொகுதியில் முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இன்று முதல்முறையாக எம்எல்ஏவாக இருந்த போதும் டெல்லி முதல்வராகி உள்ளார்
டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவி ஏற்றுள்ளதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டெல்லி முதல்வராகப் பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு வாழ்த்துக்கள். அவர் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து, கல்லூரி வளாக அரசியல், மாநில அளவிலான கட்சிப் பொறுப்பு, நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டு, இப்போது எம்.எல்.ஏ.வாகவும், முதல்வராகவும் உள்ளார். டெல்லியின் வளர்ச்சிக்காக அவர் முழு வீரியத்துடன் பாடுபடுவார் என்று நான் நம்புகிறேன். அவரது பதவிக்காலம் பலன் அளிக்க எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.இதேபோல், டெல்லி அமைச்சர்களாக பதவியேற்றுள்ளவர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டெல்லி அரசில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள பர்வேஷ் சாஹிப் சிங், ஆஷிஷ் சூத், மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்தர் இந்திரஜ் சிங், கபில் மிஸ்ரா, பங்கஜ் குமார் சிங் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். வீரியமும், அனுபவமும் அழகாகக் கலந்த இக்குழு, டெல்லிக்கு நல்லாட்சியை உறுதி செய்யும். அவர்களுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “வஞ்சகம் மற்றும் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு இலக்கணமாக விளங்கும் பாஜகவை டெல்லி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசாங்கத்தில் முதல்வராக இன்று பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கும் மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லியின் தாழ்த்தப்பட்டோர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்காக பிரதமர் மோடி உருவாக்கிய வளர்ந்த டெல்லி என்ற தொலைநோக்குப் பார்வை உங்கள் அனைவரின் திறமையான தலைமையின் கீழ் நிச்சயமாக நனவாகும். பாஜக அரசு டெல்லியை தூய்மையான, அழகான மற்றும் வளமான நகரமாக மாற்றுவதன் மூலம் உலகின் சிறந்த தலைநகராக மாற்றும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்
மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “டெல்லி முதல்வராக பதவியேற்றுள்ள ரேகா குப்தா, அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும்பான்மையை வழங்கியதன் மூலம், இரட்டை இன்ஜின் அரசாங்கத்திற்கு டெல்லி மக்கள் தங்கள் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வழங்கியுள்ளனர்.
பாஜக அரசு, பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் பொதுமக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப டெல்லியின் விரிவான வளர்ச்சியை மேற்கொள்வதன் மூலம் மக்கள் நலப் பணிகளை துரிதப்படுத்தும். உங்கள் தலைமையின் கீழ் டெல்லியை மேம்படுத்துவதே எங்கள் உறுதி” என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதல்வராகப் பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சந்தீப் தீட்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தனது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.