கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்ற பிறகு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். முதல் முறையாக அமைச்சரான பிடிஆருக்கு முக்கியமான துறையான நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை இலாகாவை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறிருக்க அவர் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று 2023-ல் சமூக வலைத்தளங்களில் கசிந்தது. அந்த ஆடியோவில் உதயநிதி மற்றும் சபரீசன் குறித்து இருந்தது. அதன்பின்னர், அந்த ஆடியோ முற்றிலும் போலியானது என்று பழனிவேல் தியாகராஜன் மறுத்தார். இருப்பினும், அடுத்த சில நாள்களிலேயே, நிதித்துறை இலாகா அவரிடமிருந்து தங்கம் தென்னரசுக்கு மாற்றப்பட்டு, தகவல் தொழில்நுட்பத்துறைக்கு பழனிவேல் தியாகராஜன் அமைச்சராக்கப்பட்டதால், அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2024 -25 ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. வினா விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இன்று சட்டமன்றக் கூட்டத்தில், தனது தொகுதி மேம்பாடு குறித்து அதிமுக எம்.எல்.ஏ ஜெயசீலன் கேள்வி எழுப்பினார்.
அதிமுக எம்.எல்.ஏ எழுப்பிய கேள்வி
“எனது கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனங்களும் இல்லை. எனவே, எனது தொகுதியில் சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்காவினை அமைத்துத் தருவதற்கு அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்” என்று கேள்வி எழுப்பினார் அதிமுக எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன்.
அமைச்சர் பிடிஆர் பதில்
அதற்கு பதில் அளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “இந்த கூட்டத் தொடரிலேயே என்னுடைய துறையில் இருக்கின்ற சிக்கல்களை நான் கூறியிருக்கிறேன். நிதியும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல எல்லா தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் செயல்படுவதில்லை. தொழில் பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே தகவல் தொழில்நுட்பத்துறை வசம் இருக்கிறது.
நிதி, அதிகாரம் இருப்பவர்களிடம் கேளுங்கள்
டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவைகள் தொழில்துறை வசம் இருக்கும் அசாதாரண நிலையே 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடர்கிறது. எனவே, யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். எங்களிடம் அது இல்லை” என்று கூறினார்.
குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு
அமைச்சரின் இந்தப் பதிலை சற்றும் எதிர்பாராத சபாநாயகர் அப்பாவு, “இது எல்லாம் உள்ளுக்குள்ளே முதல்வரிடம் பேசி முடிவெடுக்க வேண்டியது. பாசிட்டிவாக பதில் சொன்னால் எம்.எல்.ஏ-க்களுக்கு நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார். இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியுடன் இருப்பதும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று திமுக நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தலுக்கு முன்பு கட்சிக்குள்ளே இருக்கும் உட்கட்சி பூசல், மூத்த நிர்வாகிகள் இடையேயான சிக்கல் ஆகியவற்றை கட்சித் தலைமை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















