மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நான்கு சக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வாகனம் மாற்றுப்பணிக்கு ஒதுக்கப்பட்டடதால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அலுவலகம் சென்றுள்ளார் டிஎஸ்பி சுந்தரேசன். அண்மையில் 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்ததால் டிஎஸ்பி சுந்தரேசன் சென்று வந்த கார் பறிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் சட்டவிரோத சாராயம் மற்றும் மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்துள்ளதுடன், சட்டவிரோத சாராயம் மற்றும் மதுபான கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களில் 700 பேரை டிஎஸ்பி சுந்தரேசச் சிறையில் அடைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. தொடர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இப்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மது கடத்தல்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் டிஎஸ்பி சுந்தரேசனின் நான்கு சக்கர வாகனம் மாவட்ட காவல்துறையால் பறிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.. முதலமைச்சர் வருகைக்கு முன்னர் அமைச்சர் எஸ்கார்டு செல்வதற்கு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை கேட்டு கொடுக்க மறுத்ததால், அவரை பாதுகாப்பு பணிக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்த மாவட்ட காவல்துறையினர், மீண்டும் பணிக்கு வந்தவுடன் வாகனத்தை அனுப்பாமல் பறித்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் டி.எஸ்.பி சுந்தரேசன் சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் பணிகளுக்கு சென்று வந்ததாகவும், அந்த வீடியோ காவல்துறை குரூப்பில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டி.எஸ்.பி சுந்தரேசன் இன்று தனது வீட்டில் இருந்து மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு பணிக்கு நடந்து சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மது, சாராயம் உள்ளிட்ட போதைப் பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நேர்மையான டிஎஸ்பியை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பந்தோபஸ்து டியூட்டி என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்லுமாறு தூக்கி அடிப்பதும், பணிக்குத் திரும்பிய டிஎஸ்பிக்கு வாகனத்தை வழங்காமல் நடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
முன்னதாக மாநில மனித உரிமை கமிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன், காஞ்சிபுரம் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலைவழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுன்டர்களில் விசாரணை அதிகாரியாக சுந்தரேசன் பணியாற்றியுள்ளாராம். அப்போது அவர் காவல்துறையினரின் தவறுகளை தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்று புகார்கள் எழுந்துள்ளன. டிஎஸ்பிக்கு வாகனம் வழங்கப்படாதது குறித்து மாவட்ட காவல்துறையில் விளக்கம் கேட்டபோது, அவரது வாகனம் பழுது காரணமாக ரிப்பேர் செய்ய அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஸ்டாலின் மீது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் உளவுப்பிரிவு ஐஜி செந்தில்வேல் ஆகியோர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
டிஎஸ்பி சுந்தரேசனின் அதிர்ச்சிப் பேட்டி
இந்நிலையில், மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பேட்டியில் கூறியதாவது:
“காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்தூரியின் கொலை வழக்கில் எனது விசாரணை அறிக்கையை மாற்ற வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில்வேல் ஆகியோர் தீவிரம் காட்டுகின்றனர். அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு எனக்கு மன உளைச்சலைக் கொடுக்கிறார்.
நேர்மையான காவல் அதிகாரியான எனக்கு நான்கு மாதங்களாகச் சம்பளமே வழங்கப்படவில்லை. இதனால் நான் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் நான் ஓய்வூதியம் கூட பெறக் கூடாது என்பதற்காக சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கைகளில் எஸ்பி ஈடுபட்டுள்ளார். நான் லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்டால் அலுவலக வாசலிலேயே தற்கொலை செய்யத் தயார். எனக்கு என் உயிர் முக்கியமில்லை. ஆனால் எனது குடும்பத்திற்கு எனது உயிர் முக்கியம்.
வளைந்து செல்லாவிட்டால் ஒடுக்கப்படுவீர்கள் என்று ஆபாசமான விரல் சைகை காட்டி எஸ்பி மிரட்டுகிறார். நான் தற்போது தன்னிச்சையாகப் பேட்டி அளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்யப்படுவேன் என்பதைத் தெரிந்துதான் இந்தப் பேட்டியை அளிக்கிறேன். இங்கு போலீசாருக்கும் பாதுகாப்பில்லை, காவல் துறைக்கும் பாதுகாப்பில்லை. நேர்மையாக இருப்பது ஒரு குற்றமா? கள்ளச்சாராய வழக்கில் 700 பேரைக் கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டுள்ளேன். உயரதிகாரிகளின் கட்டளைப்படி திருப்புவனம் அஜித்குமாரை தாக்கிய போலீசாரின் குடும்பத்தினர் தற்போது அவதியடைந்து வருகிறார்கள்.”
சுந்தரேசனின் கடந்தகால பணிகள்
தமிழக மனித உரிமை ஆணையத்தின் துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சுந்தரேசன், ஓய்வு பெற்ற காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுன்ட்டர் ஆகியவற்றின் விசாரணை அதிகாரியாக இருந்துள்ளார். இவர் நடத்திய விசாரணையில் காவல்துறை தரப்பில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்பி ஸ்டாலின் மறுத்துள்ள நிலையில் வேறு காவல் உயர் அதிகாரிகள் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















