கொரோனா வைரஸை அழிப்பதற்கோ உடலில் தொற்றாமல் முன்கூட்டியே தடுப்பதற்கோ மருந்துகள் இல்லாத நிலையில் நமக்கு இருக்கும் ஒரே வழி நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதே ஆகும். நோய் எதிர்ப்பாற்றல் திறம்பட செயல்பட்டால் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பை பெருமளவில் குறைத்துவிட முடியும். உணவு, மருந்து மற்றும் உடற்பயிற்சி மூலம் நமது நோய் எதிர்பாற்றலை அதிகரிக்க முடியும். சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான பண்டைய மருத்துவ முறை ஆகும். சித்தர்கள் கூறிய மருந்துகள், வாழ்க்கை முறைகள், மூச்சுப் பயிற்சிகள் முதலானவை எல்லாம் முறையாகத் தொகுக்கப்பட்டு தற்போது இந்திய மருத்துவ முறைக்ளில் ஒன்றாக சித்த மருத்துவம் விளங்கி வருகிறது. ஆயுஷ் அமைச்சகத்தின் ஒரு மருத்துவ முறையாகவும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பல முறைகளிலும் நமது உடலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆயுஷ் அமைச்சகமும் இந்த தொற்றுக் காலத்தில் இந்திய மருத்துவ முறைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசும் ஆரோக்கியம் என்ற திட்டத்தின் மூலம் ஆயுர்வேத, சித்த மருந்துகளை பரிந்துரைத்து உள்ளது. நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் இரண்டும் சித்த மருத்துவ முறையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் மருந்துகள் ஆகும்.
இந்தியாவில் சித்த மருத்துவத்திற்கான உயர்நிலை அமைப்பாக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (CCRI) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. மருந்து ஆராய்ச்சி மற்றும் மூலிகை ஆராய்ச்சிகளில் இந்தக் குழுமம் ஈடுபட்டு உள்ளது. இந்தக் குழுமத்தின் கீழ் 8 மருத்துவ நிலையங்கள் / ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை, மேட்டூர், பாளையங்கோட்டை என தமிழ்நாட்டில் மட்டும் 3 மையங்களும் திருவனந்தபுரம், பெங்களூர், புதுச்சேரி, திருப்பதி, புதுடெல்லி ஆகிய இடங்களில் 5 மையங்களும் செயல்படுகின்றன.
கொரோனா வைரசை எதிர்கொள்வதில் சித்த மருத்துவத்தின் பங்கு என்னவென்று புதுச்சேரியில் உள்ள மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய மருத்துவர்களிடம் கேட்டோம். அவர்களின் கருத்துகள் கீழே தொகுத்துத் தரப்படுகின்றன.
டாக்டர் ஆர்.ராஜேந்திரகுமார், ஆராய்ச்சி அலுவலர்(சித்தா) / நிர்வாக அதிகாரி – நம்மிடையே மறந்து போன நறுமணப் புகை போடுதல், ஆவி பிடித்தல் ஆகிய இரண்டையும் நாம் திரும்பவும் கடைபிடிக்க வேண்டும். வீடுகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குங்கிலியப் பவுடர் அல்லது நொச்சி இலைகளைப் பயன்படுத்தி புகை போட வேண்டும். இது சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளைக் கொல்வதற்கும் தாக்கத்தைக் குறைப்பதற்கும் உதவும். அதே போன்று தினமும் நொச்சி, தும்பைப் பூ / இலை, விரலி மஞ்சள், கற்பூரவள்ளி இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொதிநீரில் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். இது சுவாச மண்டலத்தை சீராக்கும்.
டாக்டர் இர.இரத்தினமாலா, ஆராய்ச்சி அலுவலர்(சித்தா) – கடுமையான கோடைக்காலத்தில் நாம் கொரோனா வைரசோடு போராடிக் கொண்டு இருக்கிறோம். இந்த சமயத்தில் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும். கோடை வெப்பத்தால் தலைபாரம், நீரேற்றம், உடல்சோர்வு, தலைவலி ஆகியன ஏற்படும். கற்பூரத்தையும் சீரகத்தையும் துணியில் பொட்டலமாகக் கட்டி அடிக்கடி முகர்ந்து வரலாம்.
டாக்டர் பா.சித்ரா, ஆராய்ச்சி அலுவலர்(சித்தா) – கோவிட்-19க்கு சித்த மருத்துவத்தில் என்ன மருந்து சொல்லப்பட்டு இருக்கிறது என்ற கேள்வி பொதுவாக கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கொரோனா வைரசுக்கு என்று தனிப்பட்ட முறையில் மருந்து ஏதும் இல்லை. நோய்தடுப்பு மருந்தாக நிலவேம்புக் குடிநீரை காலை மற்றும் இரவு என இரண்டு வேளை 14 நாட்கள் குடிக்கலாம். நோய் அறிகுறிகள் தெரிந்தால் கபசுர நீர் குடிக்கலாம். தொற்று ஏற்பட்டது உறுதியானால் இணை மருந்தாக ஆடாதொடை மணப்பாகு எடுத்துக் கொள்ளலாம். எதுவாயினும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உட்கொள்ள வேண்டும்.
டாக்டர் அ.ஃபரிதா, இணை ஆராய்ச்சியாளர் – சித்த மருத்துவம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக யோகப் பயிற்சிகளையும் ஆசனங்களையும் பரிந்துரைத்து உள்ளது. நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பதால் தூக்கமின்மை, செரிமானமின்மை மற்றும் மன உளைச்சல் ஆகியன ஏற்படும். வஜ்ஜிராசனம் போன்ற எளிய ஆசனங்களையும் ஓங்காரப் பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளையும் செய்தால் உடலும் மனமும் கொரானாவை எதிர்க்க தயார் நிலையில் இருக்கும்.
டாக்டர் லாவண்யா, ஆராய்ச்சி அலுவலர்(சித்தா) – உணவே மருந்து; மருந்தே உணவு என்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படை ஆகும். காலையில் காஃபி, தேநீர் குடிப்பதற்குப் பதில் சித்தரத்தை அல்லது துளசி தேநீர் / சுக்குக் காஃபி குடிக்கலாம். முற்பகலில் இஞ்சித் தேனூறல் மிகவும் நல்லது. தமிழர்களின் வாழ்வில் ரசம் மிகவும் இன்றியமையாத உணவாகும். தூதுவளை, வேப்பம்பூ போன்றவைகளால் செய்யப்படும் ரசம் உடலுக்கு மிகவும் நல்லதாகும். மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு முசுமுசுக்கை, கல்யாண முருங்கை, வாதநாராயணன் போன்ற இலைகளைக் கொண்டு தின்பண்டங்கள் செய்து தரலாம்.
டாக்டர் காயத்ரி குணாளன், ஆராய்ச்சி அலுவலர்(உயிர் வேதியியல்) – கொரோனா வைரசுக்காக யாரும் பயப்படத் தேவையில்லை. மத்திய மாநில அரசுகள் வகுத்துள்ள பரிந்துரைகளை பின்பற்றினாலே போதும்.
டாக்டர் நித்யா, ஆராய்ச்சி அலுவலர்( நோயியல்)– கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவிகிதம் நபர்களுக்கு தானாகவே குணமாகி விடுகிறது. ஆறில் ஒருவருக்கு மட்டுமே மருத்துவக் கண்காணிப்புத் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் ஆகியவற்றைப் பார்த்து எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.
கொரோனா வைரஸ் நமது உடல் மீதான அக்கறையை அதிகரித்துள்ளதோடு பாரம்பரிய உணவு மற்றும் பாரம்பரிய மருத்துவம் மீது நமது கவனத்தைக் குவித்துள்ளது. உடலுழைப்பின் அவசியம் பல வகைகளில் நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இன்றைய நவீன வாழ்க்கை முறையின் பாதகமான அம்சங்களைக் கண்டறிந்து அவற்றில் இருந்து மீள்வதுதான் கொரோனா கற்றுத் தந்த பாடமாக இருக்க வேண்டும்.
டாக்டர் ராஜேந்திர குமார், ஆராய்ச்சி அலுவலர் (சித்தா) & நிர்வாக அதிகாரி
டாக்டர் அ.ஃபரிதா, ஆராய்ச்சி அலுவலர் (சித்தா)
டாக்டர் பா.சித்ரா, ஆராய்ச்சி அலுவலர் (சித்தா)
டாக்டர் இ.நித்யா, ஆராய்ச்சி அலுவலர் (நோயியல்)
டாக்டர் அ.லாவண்யா, ஆராய்ச்சி அலுவலர் (சித்தா)
டாக்டர் இர.இரத்தினமாலா, ஆராய்ச்சி அலுவலர் (சித்தா)
டாக்டர் காயத்ரி குணாளன், ஆராய்ச்சி அலுவலர் (உயிர் வேதியியல்)