கடந்த 2019 ல் நாடளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது கதிர் ஆனந்தின் ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் வருமானவரித்துறையினர் 2 முறை கதிர் ஆனந்த் ஆதரவாளர்கள் வீடு மற்றும் அவர்கள் நிறுவனங்களில் சோதனை நடத்தினார்கள்.
மேலும் துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.10 லட்சமும், அவரது ஆதரவாளர்களான திமுக விவசாயஅணி துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோரது வீடுகளில் இருந்து ரூ.11.48 கோடி பணமும் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் காட்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதன்பிறகு வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் 2019 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது.
அதில் மீண்டும் திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டதிர் ஆனந்த் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.இந்நிலையில், மக்களவைத் தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட பணம் விவகாரம் தொடர்பாக காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பத்திலுள்ள பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கதிர் ஆனந்த் தில்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் உளவுத்துறை அதிகாரிகள் எனக்கூறிக் கொண்டு சிலர் அத்துமீறி நுழைந்து தன்னை மிரட்டியதாக அவர் மக்களவை தலைவரிடம் புகார் அளித்திருந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக தில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கதிர் ஆனந்தின் ஆதரவாளரான பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பெயரும் அடிபட்டுள்ளதால் அவரின் பதவிக்கு ஆபத்து நேரிடும். இதனால் திமுக சற்று குழப்பத்தில் உள்ளது. மேலும் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் கனிமொழி வழக்கு கதிர் ஆனந்த் ஆ.ராசா ஜெகத்ரட்சன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கிடுக்கிப்பிடி இறுகுவதால் திமுக அச்சத்தில் உள்ளது. இந்த நால்வரும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தகுதி நீக்கம்செய்யப்பட்டால் திமுகவின் மீது மக்கள் அதிருப்தி அடைவார்கள் இதன் காரணமாக மத்திய அரசுக்கு தூது அனுப்புகிறது திமுக என்ற செய்தியும் வெளிவர தொடங்கியுள்ளது.