பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் கோவை சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் குஜராத் மகளிரணி செயற்குழு கூட்டத்திற்கு கலந்து கொண்டு குஜராத் மொழியில் பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். மேலும் குஜராத் அனுபவங்கள் குறித்து அவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவானது:
பிரமிக்க வைக்கும் காந்தி நகர் அறிவியல் நகரம் பாஜக மகளிரணி தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் வாய்ப்பு அமைந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரம், டாமன் -டையூ யூனியன் பிரதேசம், பிஹார், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்தேன்.
அந்த அனுபவங்களை முகநூலில் பகிர்ந்திருந்தேன்.அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பு எனக்கு பெரும் உற்சாகத்தை அளித்து வருகிறது. அந்த உற்சாகமே நேரமின்மைக்கு இடையிலும் நேரத்தை கண்டுபிடித்து பயண அனுபவங்களை எழுத தூண்டுகோலாக இருக்கிறது.
குஜராத் மாநில பாஜக மகளிரணி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜூலை 24-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆமதாபாத் வந்தடைந்தேன். விமான நிலையத்தில் மகளிரணி நிர்வாகிகளின் அன்பான வரவேற்புக்குப் பிறகு தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தேன்.
சிறிது ஓய்வுக்குப் பிறகு குஜராத் முதலமைச்சர் திரு. விஜய் ரூபானியை சந்திக்க புறப்பட்டோம். காந்தி நகரில் உள்ள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்திற்குள் நுழைந்ததும் எனது நினைவுகள் 2013-ஆம் ஆண்டிற்கு திரும்பியது.
2013-ஆம் ஆண்டில் இன்றைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இதே இல்லத்தில் அவரை சந்திக்கும் பெரும் பாக்கியம் எனக்கு வாய்த்தது.சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்காக விவசாயிகளிடமிருந்து இரும்பு, மணல் சேகரிப்பதற்காக அனைத்து மாநிலங்களிலும் குழு அமைக்கப்பட்டிருந்தது.
அக்குழுவின் தமிழகப் பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டிருந்தேன். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்கள், ஒன்றியங்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் இருந்து கலப்பை, மண்வெட்டி, கதிர் அறுக்கும் அரிவாள் போன்ற விவசாயிகள் பயன்படுத்தும் இரும்பு பொருள்களை சேகரித்திருந்தோம்.
இந்த நிகழ்வோடு ‘உள்ளந்தோறும் மோடி, இல்லந்தோறும் தாமரை’ என்ற பிரச்சார இயக்கமும் அன்றைய தமிழக பாஜக தலைவர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன்
2013-ஆம் ஆண்டில் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிக்காக காந்தி நகர் சென்றிருந்த நான் அன்றைய முதல்வர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தேன். சர்தார் வல்லபாய் படேல் சிலைக்காக தமிழகத்தில் எந்தெந்த கிராமங்களில் எவ்வளவு இரும்பு சேகரிக்கப்பட்டது என்று புள்ளிவிவர அறிக்கை, தேனியில் இருந்து ஏலக்காய் மாலை, ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து கையில் கட்டும் கயிறு ஆகியவற்றோடு மோடியை முதல் முறையாக சந்தித்தேன்.
அப்போது தமிழர்களின் தாய் மொழிப் பற்று, தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்தெல்லாம் மோடி என்னுடன் உரையாடியது, ஒரு சகோதரியாக அவரது கையில் ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில் கயிறு கட்டியது ஆகியவை நினைவுக்கு வந்தது.
இந்த நினைவுகளோடு முதலமைச்சர் திரு. விஜய் ரூபானியை சந்தித்தேன். அவரை சந்திப்பது முதல் முறை என்பதால் என்னைப் பற்றிய விவரங்களை ஆவலோடு கேட்டு தெரிந்து கொண்டார். இருவரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மூலம் அரசியலுக்கு வந்தவர்கள் என்பது தெரிந்ததும் பல்லாண்டுகள் பழகிய நண்பர்கள் போல சகஜமாக பேசத் தொடங்கினோம்.
1972 முதல் 1980 வரை ஏபிவிபியில் இருந்தபோது நடந்த நிகழ்வுகள், 1975 முதல் 1977 காங்கிரஸ் அரசின் நெருக்கடிகால கொடுமைகளை எதிர்கொண்டது என்று தனது ஆரம்பகால பொது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
வாராணசி ஏபிவிபி மாநாட்டில் மறைந்த மத்திய நிதியமைச்சர் திரு. அருண் ஜெட்லி போன்றவர்கள் எப்படி கதாநாயகர்களாக கொண்டாடப்பட்டார்கள் என்பதையெல்லாம் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். நாட்டுக்காக பெரும் தலைவர்களை உருவாக்கி அளித்த ஏபிவிபி இயக்கம்தான் என்னையும் இந்த உயரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது என்பதை அப்போது நினைத்துக் கொண்டேன்.
பின்னர் குஜராத் அரசின் திட்டங்கள் குறிப்பாக பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். ‘முதலமைச்சர் உத்கர்ச யோஜானா’ என்ற திட்டம் மூலம் 10 பேர் கொண்ட மகளிர் சுய உதவிக் குழுவுக்கு எந்த உத்தரவாதம் இல்லாமல் ரூ. 1 லட்சம் கடன் கொடுக்கப்படுகிறது. இதுவரை 10 லட்சம் குழுக்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களின் வாழ்வில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதை முதலமைச்சர் விளக்கமாக எடுத்துக் கூறியபோது மகிழ்ச்சியாக இருந்தது.
முதலமைச்சர் உடனான சந்திப்புக்குப் பிறகு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அறிவியல் நகரத்தை காண்பதற்காக மகளிரணி நிர்வாகிகளுடன் சென்றிருந்தேன். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருப்பதுபோல தண்ணீருக்குள் அமைக்கப்பட்டுள்ள மீன் அருங்காட்சியகம் பிரமிக்க வைத்தது.
இந்த அறிவியல் நகரத்தை கண்டபோது பிரதமர் மோடிக்கு அறிவியல் மீதுள்ள அக்கறையை உணர முடிந்தது.
மீன்கள் அருங்காட்சியகத்தில் உலகம் முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட 118 வகையான 11,600 மீன்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒன்றரை அடி கண்ணாடி சுவரில் உலகத் தரத்தில் இந்த அறிவியல் நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி காந்தி நகர் செல்பவர்கள் இந்த அறிவியல் நகரத்திற்கு செல்லாமல் திரும்ப முடியாது. அந்த அளவுக்கு சில நாட்களிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த அறிவியல் நகரம்.
புடவைகள் உள்ளிட்ட பாரம்பரிய ஆடை வகைகளுக்கு புகழ் பெற்ற மாநிலம் குஜராத் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அறிவியல் நகரத்தை பார்த்த பிரமிப்பு அகல்வதற்குள் மகளிரணி நிர்வாகிகள் புடவைகள் விற்பனை செய்யும் கடை வீதிக்கு அழைத்துச் சென்றனர். தமிழகத்தில் ‘காஞ்சி’ பட்டு போல குஜராத்தில் ‘பட்டோலா’ பட்டுச் சேலை புகழ்பெற்றது. குஜராத் வந்தவர்கள் ‘பட்டோலா’ பட்டுப் புடவை இல்லாமல் செல்லக் கூடாது என்று கடைக்காரர் ஒருவர் அன்பு கட்டளையிட அது வியாபார தந்திரம் என்றறிந்தும் நானும் மகளிரணி நிர்வாகிகள் சிலரும் பட்டோலா பட்டுப் புடவைகளை வாங்கினோம்.
இந்த பயணங்களின்போது குஜராத் பற்றி மகளிரணி நிர்வாகிகளோடு உரையாடும் வாய்ப்பு அமைந்தது. குஜராத்தில் நள்ளிரவிலும்கூட பெண்கள் தனியாக பயமின்றி செல்ல முடியும். அந்த அளவுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாறியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் மதுவிலக்கு என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.
ஆமதாபாத் விமான நிலையம் சென்னை விமான நிலையத்தை விட சிறியதாக இருந்தாலும் விமானப் போக்குவரத்து அதிகமாக இருப்பதை காண முடிந்தது. இந்த பயணத்தின்போது குஜராத்தில் சாலை வசதிகள் சிறப்பாக இருந்ததை குறிப்பிட்டே ஆக வேண்டும்.தமிழகத்தை விட பரப்பளவில் பெரிய, நீர் வளம் மிகமிகக் குறைந்த, மிகவும் பின்தங்கிய மாநிலமான குஜராத், கடந்த கால் நூற்றாண்டு கால பாஜக ஆட்சியில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
ஆமதாபாத்தில் பயணிக்கும்போது நர்மதைக் கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டோடும் காட்சியைக் காண முடிந்தது. நர்மதை கால்வாய்த் திட்டம் நரேந்திர மோடியால் நிறைவேற்றப்பட்ட உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டம் பற்றியும், ஜூலை 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகளிரணி மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டது பற்றியும் அடுத்தடுத்த நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்…
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















