அயோத்திக்கு நிகராக அபுதாபியில் ரூ.900 கோடியில் இந்து கோவில்… பிரமிப்பூட்டும் சிற்பங்கள் .. நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

BAPS Hindu Mandir, Abu Dhabi

BAPS Hindu Mandir, Abu Dhabi

இஸ்லாமிய நாடான அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்துக்கோவிலான சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவிலை பிப்ரவரி 14ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி 2017ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவில் அயோத்தி ராமர் கோவில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் உள்ள சிற்ப நுணுக்கங்கள் பிரமிக்க வைக்கிறது.

இந்த கோவிலானது ஆன்மிகம், கலாச்சாரம், கட்டிடக்கலை, கலாச்சார ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையாக கட்டப்பட்டுள்ளது. அபுதாபியின் முதல் இந்துக் கோவில் என்ற பெருமையை தாண்டி, மத்திய கிழக்கு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள இந்துக்களின் பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்டுள்ள முதல் கற்கோவில் என்ற பெருமையையும் இந்த கோவில் பெற்றுள்ளது.

கோவிலின் சிறப்புகள்
இந்த கோவில் துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவிற்கு அருகில் உள்ள அபு முரைக்காவில் 27 ஏக்கர் இடத்தில் அமைந்துள்ளது .இந்த மந்திர் 32.92 மீட்டர் (108 அடி), 79.86 மீட்டர் (262 அடி) நீளம் மற்றும் 54.86 மீட்டர் (180 அடி) அகலத்தில் உள்ளது. இந்த பிரம்மாண்ட இந்துக்கோவில் கட்டுவதற்காக அபுதாபி மன்னர் ஷேக் முகம்மது பின் சையத் அலி நஹ்யன், 13.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

இதில் உள்ள சிற்ப வேறுபாடுகள், நுணுக்கமான கைவினை திறன்கள், ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல் கற்களால் ஆன கலை வேலைப்பாடுகள், பளிங்கு கற்களால் ஆன வேலைப்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

ராஜஸ்தானில் இருந்து மணல் கற்கள் கொண்டு செல்லப்பட்டு, இத்தாலி வெள்ளை மார்பிள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு, அபுதாபி கொண்டு செல்லப்பட்டு இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழு நாடுகள் உள்ளன. அதைக் குறிக்கும் வகையில் ஏழு கோபுரங்கள் இந்த கோவிலில் உள்ளன. இது தவிர குவி மாடங்களும் எண்ணற்ற தூண்களும் உள்ளன. தூண்களில் ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, சிவபுராணம் ஆகியவற்றின் கதைகளை விவரிக்கும் காட்சிகள் தத்ரூபமாக சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 2015 இல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் அபுதாபியில் இந்து மந்திர் கட்டுவதற்கு நிலம் வழங்கும் முடிவை அறிவித்தது. 2019 டிசம்பரில் மந்திர் கட்டத் தொடங்கப்பட்டது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இஸ்லாமிய நாடான துபாயின் அபுதாபி பகுதியில் முதன்முறையாக கட்டப்படும் இந்து கோவிலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அமீரகத்தின் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் மற்றொரு மைல்கல்லாக அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இந்துக்களுக்கென்று ஒரு பிரத்யேக இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது .

கோவிலின் அடித்தளத்தில் 300 சென்சார்கள் நிறுவப்பட்டுள்ளது. நில அதிர்வு மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் போன்றவை குறித்து அறியவும் அதிக சென்சார்கள் நிறுவப்பட்டுள்ளன. கோவிலின் கட்டுமான செலவு 400 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 900 கோடிக்கு மேல் ஆகும்.

அமீரகத்தில் சுமார் 35 லட்சம் இந்தியர்கள் வாழ்வதாக சர்வே சொல்கிறது. அந்த நிலையில் அவர்களுக்கு இந்தக் கோயில் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்தக் கோயில் குறித்து கருத்துத் தெரிவித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் அப்துல்நாசிர் அல்ஷாலி, ‘இந்த நிகழ்வை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது’ என்கிறார்.

இந்தக் கோயிலில் கட்டுமானம் முழுக்க முழுக்கப் பண்டைய கட்டுமானக் கலையை அடிப்படையாகக் கொண்டே கட்டப்பட்டுள்ளது. இதில் எங்கும், ‘எஃகு’ (steel) பயன்படுத்தப்பட வில்லை என்கிறார் பாப்ஸ் அமைப்பைச் சேர்ந்த பிரஹாம் பிஹாரி தாஸ்.

பிற அரபு நாடுகளில் பல இந்துக்கோயில்கள் உள்ளன என்றாலும் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள கோயில் அமீரகத்தில் முதல் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version