இந்தியாவுக்காக 5 தங்கங்களை வென்று சாதனை படைத்த நடிகர் மாதவன் மகன் வேதாந்த்!
தமிழ் திரையுலகில் தனக்கென்று ரசிகர் ரசிகைகள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் மாதவன் அவரது மகன் வேதாந்த் இவருக்கு விளையாட்டுத் துறை மீது ஆர்வம் அதிகம். மாதவனும் தன மகனுக்கு என்ன பிடிக்கிறோதோ அதற்காக தொடர்ந்து அவருக்கு ஊக்கமளித்து வந்தார். மாதவனின் மகன் வேதாந்த் சிறுவயது முதல் நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றுவருகிறார். 17 வயதான அவர் தற்போது இந்தியாவின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் விளையாட்டு போட்டியில் பங்கேற்று வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். மாதவன் மகன் வேதாந்த் மகாராஷ்டிரா அணிக்காக நீச்சல் போட்டியில் பங்கெடுத்து 5 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் மாதவன் கூறியுள்ளதாவது, ”மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியன் இன்விடேஷனல் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் நீச்சல் விளையாட்டு போட்டியில் கடவுளின் ஆசிர்வாதத்தாலும் உங்கள் வாழ்த்துக்களினாலும் வேதாந்த் இந்தியாவுக்காக 50மீ, 100மீ, 200மீ,400 மீ மற்றும் 1500 மீ ஆகிய பிரிவுகளில் 5 தங்க பதக்கங்களை வென்றிருக்கிறார். பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் “ அவரை ஊக்கமளித்து நல்ல நிலைக்கு ஆளாக்கிய உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.!” என தெரிவித்துள்ளார்.