ஓரு திட்டம் தொடர்பான பணிகள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு அதிகாரியைக் கேட்க தான் செய்தவற்றையெல்லாம் பட்டியலிட்டு அமைச்சருக்கு நேரம் இருந்தால் விரைவில் அது பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதாக அவர் பதிலளித்தாராம்.
‘விரைவில் என்ன , நாளையே பார்க்கலாம்’ என்று அமைச்சர் சொல்ல அரண்டு போய் விட்டார் அந்த அதிகாரி. ஏனெனில் அமைச்சர் இவ்வாறு சொல்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அந்த வேலையை அவர் முழுமையாக முடிக்கவில்லை.
இப்போதெல்லாம் உள்துறை அமைச்சக ஐ ஏ எஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் பணியில் கவனமாக உள்ளனர்.
கோப்புகளை உடனுக்குடன் படித்து தகவல்களைத் தெரிந்து வைத்துக் கொள்கின்றனர்
முன்பெல்லாம் அமித் ஷாவுக்கு நெருக்கமாக இருப்பதில் ஆர்வம் காட்டிய அதிகாரிகள் இப்போதெல்லாம் அவரிடமிருந்து சற்று விலகியே இருக்கின்றனர்.
இது ஷா அவர்களிடம் குரலை உயர்த்திப் பேசியதாலோ ,அவமதித்தாலோ அல்ல. ஷாவின் இனம் புரியாத பார்வை , இமைக்காத கண்கள் , உணர்ச்சிகளைப் பிரதிபலிக்காத முகம் இவற்றால் அவர்கள் கலக்கம் கொள்கின்றனர்..
‘விஷயங்களை விவரிக்கும் அதிகாரியை அவர் தனது நாற்காலியில் உட்கார்ந்து கவனிக்கும் விதம்- – இடது பக்கம் சாய்ந்து , கீழ் நோக்கிய முகமும் , மேல் நோக்கிய பார்வையும் , இடது கையை முகவாய்க்கட்டையின் மீது வைத்தும் – இதைப் பார்க்கும் போது அவர்களுக்குக் கலக்கமாக இருக்கும்’
என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்,
மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் மிகச் சக்தி வாய்ந்த அமைச்சராக அமித் ஷா .உருவெடுத்துள்ளார் .
மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டுமானால் ஆலோசனை கேட்க வேண்டிய ஒருவராக உள்ளார். அவரது தலைமையின் கீழ் பல அமைச்சரவைக் குழுக்கள் இயங்குகின்றன,
இதன் விளைவாக மிக அதிக அளவில் அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே விஷயப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
டில்லி அதிகார வர்க்கத்தினரிடையே பெரிதும் பேசப்படும் ஒரு விஷயமாக இது உள்ளது.
‘விஷயங்களைச் சரியாகத் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை என்றாலோ ,கேள்விகளுக்குச் சரியான பதில்களை அளிக்கவில்லை என்றாலோ அவர் முறைத்துப் பார்ப்பார். அதுவே அச்சத்தை ஏற்படுத்தும்’. என்கின்றனர் அதிகாரிகள்
‘இம்மாதிரி நேரங்களில் அமித் ஷா ஒரு அதிகாரியைக் குத்திட்ட பார்வை பார்க்கிறார் என்றால் அந்த அதிகாரி சொல்வதில் அவருக்குத் திருப்தி இல்லை என்றும் அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொருள், அவரிடம் வெறுமனே வெட்டியாகப் பேச முடியாது; எடுத்தவுடன் அவர் விஷயத்துக்கு வந்து விடுவார். சம்மந்தப்பட்ட அதிகாரி தயாராக இல்லை என்றால் அப்படியே எழுந்து போய் விடுவார்’
‘காவல்துறை எப்படி வேலை செய்கிறது என்பது அவருக்கு மிக நன்றாகத் தெரியும் .
ஏனெனில் அவர் இளைஞராக இருந்தபோது பல முறை காவல் நிலையங்களுக்குச் சென்றுள்ளார். அடிமட்டத்தில் வேலை செய்பவர்களுடன் இணைந்து பணி செய்துள்ளார்.
மற்ற அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைப் போலல்லாமல் அவர் கள நிலைமையை நன்கு தெரிந்து வைத்துள்ளார்.ஆகவே அவரை ஏமாற்ற முடியாது’ என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
‘ஒரு விஷயத்தின் பல்வேறு விவரங்களையும் நுணுக்கமாகப் பார்க்கும் தன்மை கொண்டவர் அவர். .அதிகாரிகளிடம் துளைத்தெடுக்கும் கேள்விகளைக் கேட்பார்.
பல சமயங்களில் கள நிலைமையை அறியாத அதிகாரிகள் அவரது கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறுவார்கள் அடுத்து அவர் என்ன கேட்பார் என்பது அவர்களுக்கு தெரியாது. அதுவே அவர்களுக்கு வயிற்றைக் கலக்கும்’.
‘ எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் சொல்லிவிட்டுத் தப்பிக்க முடியாது. . ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் அதைப் பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்’
ஒரு முறை ஷா ஒரு மூத்த அதிகாரியிடம் திட்ட நெறிமுறை குறித்த ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டார். அதிகாரியால் அதற்குத் தெளிவான பதிலைத் தர இயலவில்லை.ஷா அவரிடம் ‘விட்டுத் தள்ளுங்கள் ;இதைப் பற்றித் தெரிந்த ஒருவரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் ‘என்றார்
அங்கு மயான அமைதி நிலவியது. ஷா அப்படியே எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
‘அவர் எப்போதும் நடைமுறை சாத்தியங்களையே வலியுறுத்துவார். ஒரு செயல் திட்டம் எவ்வாறு மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும்?’ என்று கேட்பார்.
சாதாரண முடிவானாலும் அது எவ்வாறு மக்க்ளிப் பாதிக்கும்.என்று தெரிந்து கொள்ள விரும்புவார் .அது மக்களுக்குப் பயனளிக்கும் என்றால் ,எப்படி ?என்று கேட்பார்.மக்களிடமிருந்து எதிர்வினை அல்லது எதிர்ப்பு இருக்குமா என்று கேட்பார். நாட்டு நலனுக்கு அது எவ்வாறு உதவும் என்றும் அறிய விரும்புவார்.
இதனால்தான் அதிகாரிகள் அவருடன் விவாதிக்க வரும்போது அவரது அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தங்களைத் தயார் செய்து கொண்டு வருவார்கள்.