ரூ.73,000 கோடி ஒதுக்கீடு அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிடும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கொரோனா எதிரான போராட்டத்தில் நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள், நுகர்வோரின் செலவு செய்யும் திறனை அதிகரிக்க 73000 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசிய அவர், அரசு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்டத் துறைகளின் ஊழியர்கள், தங்கள் சேமிப்பை அதிகப்படுத்தி இருப்பதாகவும், அவர்கள் அதனை நல் முறையில் செலவு செய்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் பொருட்டு, அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக் கூறினார்.

இன்றைய தீர்வு நாளைய பிரச்சினை ஆகிவிடக்கூடாது என்று தெரிவித்த அவர், வருங்காலத்தில் பொதுமக்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தோடு அரசு செயல்பட்டு வருவதாக் கூறினார்.

2018-21 ஆண்டுகளுக்கான விடுமுறை பயணச் சலுகைக்குப் பதிலாக பணப் பட்டுவாடா மற்றும் விடுப்பிற்கு ஈடான பணம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்கள் இந்தத் திட்டத்தை ஏற்க விருப்பம் தெரிவித்தால் அதன் மூலம் அரசிற்கு ரூபாய் 5675 கோடி ரூபாய் செலவாகும் என்று அவர் குறிப்பிட்டார். மாநில அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அரசிதழில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறா அலுவலர்களுக்கு, சிறப்புப் பண்டிகைக் கால முன்பணத் திட்டம் புதுப்பிக்கப்படுவதாகவும் அப்போது அவர் கூறினார். இதன்படி மத்திய அரசு ஊழியர்கள் ரூபாய் பத்தாயிரம் வட்டியில்லா முன் பணம் பெற்று அதை அவர்கள் 2021 மார்ச் 31ம் தேதிக்குள் செலவழிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த வட்டி இல்லா முன் பணத்தை அவர்கள் அதிகபட்சமாக 10 தவணையில் திரும்பச் செலுத்த வேண்டும்.

உள்கட்டமைப்பு மற்றும் சொத்துக்களை உருவாக்குவதற்கு செலவழிக்கும் பணம் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் என்ற அடிப்படையில், அரசு மூலதன செலவிற்காக மாநிலங்களுக்கு ரூபாய் 12,000 கோடி, ஐம்பதாண்டு கால வட்டியில்லாக் கடன் வழங்க முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் கூறினார். இதன்படி 8 வடகிழக்கு மாநிலங்கள் தலா ரூபாய் 200 கோடி பெறும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். உத்தரகண்ட் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களும் தலா ரூபாய் 450 கோடி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். ஏனைய மாநிலங்கள் 15 வது நிதி ஆணையத்தின் பகிர்வின்படி ரூபாய் 1500 கோடி பெறும் என்றார்.

மூலதனச் செலவிற்காக 2020 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்த ரூபாய் 4.13 கோடிக்குக் கூடுதலாக மேலும் 25000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version