ஆந்திராவில் தரமான சம்பவம் செய்த மோடி! யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கதான்!

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் பாஜக தெலுங்கு தேசத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 தொகுதிகளில் இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான விழாவில் பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அமைச்சரானார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

விழாவிற்கு வருகை புரிந்த நரேந்திர மோடி ஆந்திர முதல்வராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடுவை கட்டியணைத்து வாழ்த்துகளையும் அன்பையும் வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து விழா மேடையில் அமைச்சராக பதவி ஏற்ற ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் மற்றும் நாரா லோகேஷ் ஆகியோரையும் பிரதமர் மோடி ஆரத்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

பின்னர் மேடையில் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை நிகழ்த்தினார் பிரதமர் மோடி . அந்த நிகழ்வுதான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி பவன் கல்யாண் மற்றும் அவரது சகோதரரான நடிகர் சிரஞ்சீவி ஆகிய இருவரையும் இரண்டு பக்கத்திலும் நிறுத்தியப்படி அவர்களின் கைகளை உயர்த்தியவாறு மேடையில் நின்று தொண்டர்களை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.இதை பார்த்த அங்கிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட தொடங்கினார்கள் சத்தம் விண்ணை பிளந்தது.

இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு பின்னால் இருந்தபடியே நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் பாலகிருஷ்ணா ஆகியோரை காட்ட உடனே பிரதமர் மோடி அவர்களிடம் கைக்குலுக்கி நலம் விசாரித்தார். நடிகர் பாலகிருஷ்ணாவையும் நலம் விசாரித்த பிரதமர் மோடி, பின் இருக்கையில் அமர்ந்திருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தையும் அழைத்து அவரையும் நலம் விசாரித்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது . குறிப்பாக சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் ஆகிய இருவரையும் தனக்கு இரு புறத்திலும் பிரதமர் மோடி அவர்களின் கையை உயர்த்துப் பிடித்தது பெரும் பேசு பொருளாகி உள்ளது. ஆந்திர அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக பவன் கல்யாண் வளர்ந்து வரும் நிலையில் மோடியின் இந்த செய்கையை அவரது தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Exit mobile version