மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை,தேனி மாவட்டம், தாமரைக்குளம் பகுதி மலை மீது மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலுக்கு அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் சிறிய குடில் போட்டு தர்காவாக பயன்படுத்தி வந்தனர். மேலும் முஸ்லிம்களை புதைக்கும் இடமாகவும் அதை மாற்றினர். சமீபகாலமாக அந்த இடத்தின் மீது பிறைக் கொடியை பறக்க விடுவது, கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை அழைத்து வந்து தொழுகை நடத்துவது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன.

தாமரைக்குளம் பகுதியில் உள்ள பொது மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தை எப்படி தர்காவாக மாற்றலாம். நிலத்தை ஆக்கிரமிக்கும் முஸ்லிம்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தாரிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்துள்ளனர். முதலமைச்சரின் கவனத்திற்கும் கடிதங்களை அனுப்பி உள்ளனர்.

ஆனால் அரசாங்க நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திலிருந்து 150 அடிக்கு அருகிலேயே முஸ்லிம்கள் பிணத்தைப் புதைப்பது, பிறைக்கொடியை பறக்க விடுவது போன்ற சம்பவங்களால் பொது அமைதி பாதிக்கப்படும் என்பதைக் கூட உணராமல் அரசாங்க அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வந்துள்ளனர். தற்போது முஸ்லிம்கள் அந்த இடத்தில் மிகப்பெரிய கூடாரம் ஒன்றையும் அமைத்துள்ளனர். முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக இதை அமைக்கின்றோம் எனவும் கூறியுள்ளனர்.

புதிதாக கூடாரம் அமைப்பது பற்றியும் அரசு நிர்வாகத்திடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் புகார் அளித்தும் அரசு தரப்பிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அங்கு வாழும் இந்துக்கள், முஸ்லிம்கள் ஆக்கிரமித்த இடத்தைப் பற்றி புகார் கூறியதால் திடீரென்று முஸ்லிம்கள் அந்த மலையின் மீது 500 பேருக்கு கறி விருந்து நடத்துகிறோம் என அழைப்பு விடுத்தனர். மிலாடி நபியை ஒட்டி கந்தூரி விழா நடைபெறும் எனவும் சமூக வலைத்தளங்களில் செய்தியை பரப்பினர்.

வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் முஸ்லிம்கள் அசைவ உணவு சாப்பிடுவது இந்துக்களின் மன உணர்வை பாதிக்கும் என்பதை கூட அறியாமல் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அமைதி காத்துள்ளது. எப்போதும் இல்லாமல் திடீரென்று கூடாரம் அமைக்கும் முஸ்லிம்களை எச்சரிக்காமல் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP )தலைமையில் அமைதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பிறகு அசைவு உணவு சாப்பிட வேண்டாம் என முஸ்லிம்களிடம் காவல்துறை கோரிக்கை வைத்தது. ஆனால் முஸ்லிம்கள் அதை உதாசீனப்படுத்திவிட்டு, சொன்ன தேதியில் மலை மீது அசைவ உணவு விருந்து வைப்போம் என வேலைகளை தொடர்ந்தனர்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாத ஊர் பொதுமக்கள், இந்து முன்னணி பொறுப்பாளர்கள், பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் ஆகியோர் போராட்டத்தை அறிவித்து மலையேற தயாரான போது காவல்துறையினரால் தாக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு நிலத்தில் கோயிலுக்கு அருகில் அதுவும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வெங்கடாஜலபதி கோவிலின் அருகில் நில ஆக்கிரமிப்பு செய்தவர்களை விட்டு விட்டு இந்துக்களை அடக்க நினைப்பது தமிழக அரசின் கையாலாகாத் தனத்தையும் சிறுபான்மை பாசத்தையும் காண்பிக்கிறது. வேணுகோபால் கமிஷன் பரிந்துரையின் படி ஒரு வழிபாட்டுத் தலத்தின் அருகில் இன்னொரு வழிபாட்டு தலம் அமையக்கூடாது என்பதையும் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தேனியில் உள்ள தாமரைக் குளம் பகுதியில் மட்டுமல்லாது கடந்த சில நாட்களாகவே திட்டமிட்டு முஸ்லிம்களால் பல இந்து கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. கடந்த ஜனவரி மாதம் திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழிகளை பலியிடுவோம் என‌ முஸ்லிம்கள் சென்றனர். அதை ஆரம்பத்திலேயே காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்டதால், அது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. அந்தப் பிரச்சனைக்கு பிறகு ஏற்பட்ட ஒட்டுமொத்த இந்து எழுச்சியால் முஸ்லிம்கள் நடத்தவிருந்த கந்தூரி விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை சம்பந்தமாக நீதிமன்றத்தில் இன்னும் வழக்குகள் நடந்து வருவதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கடையநல்லூரில் மிகவும் தொன்மை வாய்ந்த அகத்தியர் அருள் புரிந்த அத்ரி மலையை ஆக்கிரமிக்கும் முயற்சியிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த மலையின் மீது முஸ்லிம்கள் விழா நடத்துவதற்காக அந்தப் பகுதியில் பிரசுரம் விநியோகித்தனர்.. சேலம் மாவட்டம், தீவட்டிபட்டியில் இந்து கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள அரசு நிலத்தை முஸ்லிம்களின் ஈத்கா வழிபாட்டிற்காக அரசாங்கமே தாரை வார்த்தது. இப்படி தொடர்ந்து இந்து கோவில்களின் நிலங்கள் பறிபோவதை அரசாங்கம் வேடிக்கை பார்க்கக்கூடாது. திராவிட மாடலின் சிறுபான்மை ஆதரவு நிலைப்பாட்டால் இந்து கோவில்கள் அருகில் வேறு வழிபாட்டுத்தலங்கள் அமைவதை கண்டு இந்துக்கள் கொதிப்படைந்துள்ளனர் .

நேற்று 600 ஆண்டுகால பழமை வாய்ந்த வெங்கடாஜலபதி கோவிலின் புனிதத்தை காக்கப் போராடிய பொதுமக்களையும், இந்து அமைப்பினரையும் காவல்துறையினர் தாக்கியதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. கோவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்பை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Exit mobile version