நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, பொதுவாழ்வில் கண்ணியத்தைக் காப்பாற்றி, இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழுமாறு மக்கள் பிரதிநிதிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
பெங்களூருவில் உள்ள எம் எஸ் ராமையா குழுமத்தின் தலைவர் திரு எம் ஆர் ஜெயராமுக்கு ‘சர் எம் விஸ்வேஸ்வரய்யா நினைவு விருதை’ வழங்கிய பிறகு, மாநிலங்களவை தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் குடியரசு துணைத் தலைவர், அண்மையில் நாடாளுமன்றத்திலும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் ஏற்படும் நிகழ்வுகளால் தாம் மிகுந்த வருத்தம் அடைந்ததாகக் கூறினார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், ஒரு சில உறுப்பினர்களின் மோசமான நடவடிக்கையால் தாம் மிகவும் கவலை அடைந்ததாகத் தெரிவித்தார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடையூறு அளிக்கும் செயல்பாடுகளைக் கண்டித்த திரு நாயுடு, நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் விவாதம் மேற்கொள்ளவும், ஆலோசனை நடத்தவும், முடிவுகளை மேற்கொள்வதற்குமான தளமே தவிர இடைஞ்சல்களை ஏற்படுத்துவதற்கான இடமல்ல என்று கூறினார். மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கும் அதே வேளையில் மக்களின் தீர்ப்பிற்கும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “உடல் ரீதியாக எவரையும் உங்களால் நிர்ப்பந்திக்க முடியாது”, என்றார் அவர்.
சர் எம் விஸ்வேஸ்வரய்யா போன்ற மாபெரும் நபர்களை உத்வேகமாகக் கொண்டு, நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான யோசனைகளை மேற்கொள்ளுமாறு இளம் தலைமுறையினரை அவர் கேட்டுக்கொண்டார். தற்சார்பு இந்தியாவை நோக்கி முன்னேறும் வேளையில், வறுமையை ஒழிக்கவும், மண்டல ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், வலுவான நாட்டை கட்டமைக்கவும் இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறப்பாக செயல்படவும் பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெங்களூருவின் விதான் சவுதாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மாநில ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மக்களவை உறுப்பினர் திரு பி சி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.