கப்பலோட்டிய தமிழன் வ.‬உ.சி பிறந்த தினம்! கப்பல் வைத்திருந்தவர் இறுதியில் கடன்காரராக இறந்த வ.உ.சி !

வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, செப்டம்பர் 5 1872 ல் பிறந்தார் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

கப்பலோட்டிய இந்தியன் வ.‬ உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் இறுதி காலம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது வருந்தத்தக்கது. 1908 ஆம் ஆண்டு சிறை சென்ற வ.உ.சி அவர்கள் 1912 டிசம்பர் மாதம் விடுதலையானார்.எந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து கப்பல் விடப்பட்டதோ அந்த ஆங்கிலேயே கம்பெனியிடமே சுதேசி கப்பலை விற்றுவிட்டார்கள்.

அச்சமயம் மகாகவி பாரதியார், ‘சிதம்பரம் மானம் பெரிது! மானம் பெரிது! ஒரு சில ஓட்டை காசுகளுக்காக எதிரியிடமே கப்பலை விற்று விட்டார்களே. அதைவிட கப்பலை சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்காள குடாக்கடலில் மிதக்கவிட்டாலாவது எனது மனம் ஆறியிருக்குமே’ என்று கடுஞ்சினத்துடன் வ.உ.சி-யிடம் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், என பல்வேறு இடங்களில் குடியேறினார்.சென்னை, கோவை, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, என பல்வேறு ஊர்களில் வாழ்ந்து பார்த்தார்.ஆனால் வறுமை அவரை வாழ விடவில்லை.சென்னை, மயிலாப்பூரில் பரிபூரண விநாயகர் கோயில் தெருவில் வாழ்ந்த வ.உ.சி. வீட்டு வாடகை உயர்த்தப்பட்டதால் குறைவான வாடகை தேடி பெரம்பூர் பகுதியில் சுடுகாட்டுக்கு அருகில் வசித்துள்ளார்.

சுடுகாட்டுக்கு வரும் பிணத்தை எரிக்கும்போது வெளிவரும் வாசனை தாங்க முடியாமல் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் சில காலம் வாழ்கிறார்.அச்சமயம் தன் வாழ்நாள் ஜீவனத்தை நடத்த வேண்டி மளிகைக்கடை, நெய்க்கடை, மண்ணெண்ணெய் கடை போன்ற பல தொழில்களில் ஈடுபட்டாலும் வாழ்க்கை ஜொலிக்கவில்லை.

அரிசி விற்றார், மண்ணெண்ணெய் விற்றார், ஆனால் தன்மானத்தை விற்கவில்லை.யாரிடமும் கையேந்தவில்லை.சுயராஜ்ய நிதியிலிருந்து திலகர் மாதந்தோறும் அனுப்பி வைத்த 50 ரூபாய் அவருக்கு ஓரளவு உதவியாக இருந்தது.தென் ஆப்ரிக்க தமிழர்கள் இதனை கேள்வி பட்டு ஒரு தொகையை வ.உ.சி யிடம் சேர்க்குமாறு காந்தியிடம் கொடுத்தனுப்பினர்.ஆனால் ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை.
“இப்போது இருக்கும் நிலையில் அந்த பணம் வேண்டாம் என்று நான் சொல்லப்போனால் அது நான் எனக்கும் என் குடும்பத்தார்க்கும் இழைத்த தவறாகிவிடும் “ என்று வெட்கத்தை விட்டு காந்திக்கு கடிதம் எழுதும் அளவிற்கு வ.உ.சி இருந்தார்.

அவர் இறுதி காலத்தில் எழுதி வைத்த உயில் கண்ணீர் வரவழைக்கும்.
தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்பதை சொல்லியிருந்தார்.அந்த உயிலில் தனது கடன்களைக் குறிப்பிடுகிறார்.
வீட்டு வாடகை பாக்கி ரூ.135, துணிக்கடை பாக்கி ரூ.30, எண்ணெய்க்கடை பாக்கி ரூ.30, சில்லறைக் கடன் ரூ.50, தனிநபர்களுக்குத் தரவேண்டிய கடன் ரூ.86 என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த தேசத்திறக்காக கப்பல் விட்டவர் இறுதியில் மளிகை கடை பாக்கி கூட தர இயலாத கடன்காரனாக செத்து போனார்…..??

குடும்பத்தை காப்பாற்ற மளிகைக்கடை நடத்தினார். மண்ணெண்ணெய் விற்றார். வெள்ளையர்களை எதிர்த்துக் கப்பல் நிறுவனத்தை நடத்திய வ.உ.சி-க்கு வணிக வியாபாரம் செய்ய தெரியவில்லை.
இந்த இக்கட்டான சூழலில் வ.உ.சி-க்கு வழக்கறிஞர் உரிமையை மீட்டுத் தந்தவர் வெள்ளையர் நீதிபதி வாலஸ். அவரின் உதவிக்கு நன்றிக் கடனாகத் தனது மகனுக்கு ‘வாலேசுவரன்’ என்று பெயரிட்டார் வ.உ.சி.
இந்திய விடுதலைக்கு போரிட்டவருக்கு உதவ ஒரு வெள்ளையன் முன் வந்த தருணத்தில் நம் விடுதலைக்கு காரணமான அவருக்கு உதவி செய்ய ஒரு இந்திய குடிமகன் கூட வரவில்லை என்பது மிகவும் வெட்கி தலை குனியவேண்டிய ஒரு தருணம்.கப்பலோட்டிய இந்தியன் வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம் இன்று..

Exit mobile version