போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மீதான குற்றப் பின்னணிக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை,” என, இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய ஜாபர் சாதிக் தயாரிப்பில் இயக்குநர் அமீர் நடித்த ’இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படம் பாதியிலே நின்று விட்டது. அதன் பின்னர் பல நாட்கள் கழித்து ’உயிர் தமிழுக்கு’ படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அமீர் கலந்து கொண்ட நிலையில் அவரிடம் சரமாரியான கேள்விகளை பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.
தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இயக்குனர் அமீரிடம், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.இந்நிலையில், ஆதம்பாவா இயக்கத்தில், உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நடித்துள்ள அமீர், சென்னையில் நடந்த படத்தின் முன்னோட்டம் வெளியீட்டில் பேசியதாவது:
ராமாயணத்தில் வரும் சீதையும், நானும் உடன் பிறந்தவர்கள் போல உள்ளோம். சீதை அக்னியில் இறங்கி தன் கர்ப்பை நிரூபித்தார். நானும் அதே நிலையில் தான் உள்ளேன். இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை, 10 ஆண்டுகளாக எனக்கு தெரியும். அவரை பொது வெளியில் தம்பி என்றே அழைத்து வந்தேன்.
ஆனால், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்திற்கும், அதன் பின்னணிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதை நான் எங்கும் தைரியமாக சொல்வேன். ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்ததால், என் மீது சந்தேக நிழல் விழுவது இயல்பு.அதுபற்றி, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், இரண்டு முறை, 21 மணி நேரம் விசாரித்தனர். விசாரணையின் போது, அவர்கள் கேட்ட கேள்விகள் என்னை கலங்கச் செய்தது. அவர்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்; இனியும் அளிப்பேன்.
ஆனால், புலனாய்வு புலிகள் என்று கூறிக்கொள்ளும், ‘யு டியூப்’பர்கள், என் மீது அவதுாறு பரப்புவதை நிறுத்த வேண்டும். என் மீது விழுந்துள்ள சந்தேக நிழல் குறித்து, விசாரிப்பது தவறு என, சொல்ல மாட்டேன். ஆனால், தீர்ப்பு எழுதாதீர்கள். அதற்கு நீதிமன்றங்கள் உள்ளன.என் மீது நீங்கள் பரப்பும் அவதுாறுகளால், என் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். சமூகத்தை சீரழிக்கும் போதை பொருட்களை நான் முற்றிலும் வெறுப்பவன். அது தொடர்பாக, என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஏற்க முடியவில்லை.
நான் குற்றப்பின்னணி உடைய நபருடன் பழக்கம் ஏற்படுத்தி, வாழ வேண்டிய அவசியம் இல்லை. அப்படிப்பட்ட வாழ்க்கையை நான் தேர்வு செய்யவும் இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நான் சினிமாவுக்கு வரவில்லை. மேலும் ஜாபர் சாதிக்கிடம் திடீரென படங்களை தயாரிக்கும் அளவுக்கு பல கோடி ரூபாய் பணம் எப்படி கிடைத்தது என அவருடைய நண்பனாக நீங்கள் ஒருபோதும் கேள்வி எழுப்ப வில்லையா? என்கிற கேள்விக்கு கடுப்பான அமீர் இதே கேள்வியை லைகா நிறுவனத்தைப் பார்த்து எப்போதாவது எழுப்பி இருக்கிறீர்களா? என்றும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் லைகா நிறுவனத்தில் பணியாற்றும் போது அவர்களுக்கு எப்படி காசு வருகிறது, ஐரோப்பாவில் அவர்கள் என்னென்ன வழக்குகளில் சிக்கி இருக்கிறார்கள் என்றெல்லாம் விசாரித்து உள்ளனரா? என கேட்க முடியுமா? என அமீர் கடுப்பாகி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.