மதுரையில் பா.ஜ.க ஓபிசி அணி மாவட்டச் செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.
இவர்பா.ஜ.க.வின் ஓ.பி.சி. பிரிவு மதுரை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் வண்டியூர் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது. அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று திடீரென்று சக்திவேலை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்தத சக்திவேல் அவர்களிடம் தப்பிக்க இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு உயிர் பயத்தில் ஓடினார். ஆனால் மர்ம கும்பல் விடாமல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை அண்ணா நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறை சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள அறிக்கை
தமிழக பாஜகவின், மதுரை மாவட்ட OBC அணியை சேர்ந்த சக்திவேல் அவர்களை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வண்டியூர் டோல் கேட் அருகே வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும்.
ஒரு மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் குற்றங்கள் நடப்பது இயற்கை.ஆனால் மாநிலம் முழுவதும் குற்றசெயல்கள் தொடர்ச்சியாக நடப்பதும் அத்தகைய அராஜகங்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் தமிழக மக்களுக்கு இந்த விடியா அரசு கொடுத்த அன்பு பரிசு.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எது வளர்ச்சி அடைந்ததோ இல்லையோ கொலை சம்பவங்களின் எண்ணிக்கை மட்டும் வளர்ச்சியடைந்துள்ளன.
பெண்கள் தனியாக சென்று வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் திமுக எனும் திராவிட மாடலின் சித்தாந்தமா? எப்போது விடியல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் இருந்து வருகின்றனர்.
இப்படி தொடர் அராஜகத்தை செய்து வரும் இந்த விடியா அரசுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார் .