ஜனாதிபதி வேட்பாளரின் எளிமை துடைப்பத்தால் கோயிலை தூய்மை செய்து சுவாமி தரிசனம்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரவுபதி முர்மு, ஒடிசாவில் உள்ள கோயிலில் துடைப்பத்தால் தானே தூய்மை செய்து சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம், அடுத்த மாதம் 25ல் முடிவுக்கு வருகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18ல் நடக்க உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்தவரும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார். முதல் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திரவுபதி முர்முவுக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. இன்று (ஜூன் 22) காலை ஒடிசாவில் உள்ள ராய்ரங்பூர் ஜகன்னாதர் கோயிலுக்கு வழிபாடு செய்ய சென்றார். அப்போது கோயில் வளாகத்தைத் துடைப்பத்தால் சுத்தம் செய்த முர்மு, பின்னர் கோயில் மணியை அடித்து சுவாமி தரிசனம் செய்தார். மேலும், அங்கிருந்த நந்தி சிலையை ஆர கட்டித் தழுவினார். ஜனாதிபதி வேட்பாளராக இருந்தாலும் துடைப்பத்தால் தூய்மை செய்து தரிசனம் செய்த முர்முவின் எளிமையை பலரும் பாராட்டியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளன.


Exit mobile version