பஞ்சாபில் இரு கட்சிகளுடன் கூட்டணி: அமித்ஷா அறிவிப்பு.

BJP

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் லோக் காங்கிரஸ், மாநிலங்களவை எம்.பி. சுக்தேவ் சிங் திண்ட்சாவின் எஸ்ஏடி (சம்யுக்த்) கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி, ஆட்சியைத் தக்கவைப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது. அக்கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளாா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிரோமணி அகாலி தளமும் தோ்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாபில் முத்திரை பதிக்க முயற்சிக்கிறது. சில விவசாய அமைப்புகளும் தோ்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

பலமுனைப் போட்டி நிலவும் சூழலில், தோ்தல் தொடா்பான அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது. பஞ்சாப் லோக் காங்கிரஸ், எஸ்ஏடி (சம்யுக்த்) கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய அமைச்சரும் பஞ்சாப் பாஜக தோ்தல் பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத் தில்லியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘பஞ்சாபில் தோ்தல் வியூகங்களை வகுப்பது தொடா்பாக மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதில் அமரீந்தா் சிங், சுக்தேவ் சிங் திண்ட்சா ஆகியோரும் கலந்து கொண்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக-பஞ்சாப் லோக் காங்கிரஸ்-எஸ்ஏடி (சம்யுக்த்) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட கூட்டத்தின்போது முடிவெடுக்கப்பட்டது. தொகுதிப் பங்கீடு தொடா்பாக முடிவெடுக்க 3 கட்சிகளின் தலைவா்கள் அடங்கிய குழு அமைக்கப்படவுள்ளது. உரிய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்’’ என்றாா்.

Exit mobile version