கோவாவில் நடைபெற்ற பாஜக மகளிரணி செயற்குழு கூட்டத்திற்கு சென்ற கொங்கு தமிழச்சி வானதி சீனிவாசன் கோவாவை பற்றி விரிவான கட்டுரையினை எழுதியுள்ளார்! அந்த கட்டுரையானது;
இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள கொங்கன் மண்டலத்தில் அமைந்துள்ள இயற்கை அழகு சூழ்ந்த மாநிலம் கோவா. பரப்பளவில் (3,702 சதுர கிலோ மீட்டர்) இந்தியாவிலேயே மிகச் சிறிய மாநிலம். மக்கள் தொகையும் குறைவு.
கொங்கணி, மராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் போர்ச்சுகீய மொழியும் இங்கு பேசப்படுகிறது. வடக்கில் மகாராஷ்டிரம், கிழக்கில் கர்நாடகம், மேற்கில் அரபிக் கடலும் இம்மாநிலத்தை சூழ்ந்துள்ளன. தலைநகர் பனாஜி, வாஸ்கோடகாமா, மார்கோ ஆகியவை முக்கிய நகரங்கள்.
16 ஆம் நூற்றாண்டில் வியாபாரத்திற்காக இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் இப்பகுதியைக் கைப்பற்றி தங்கள் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தனர். இதனால் போர்ச்சுகீசிய கலாச்சாரத்தின் தாக்கத்தை கோவா மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இன்றும் காண முடிகிறது. போர்ச்சுகீசிய கட்டடக்கலையின்படி கட்டப்பட்ட பிரம்மாண்டமான கட்டிடங்கள், கத்தோலிக்க தேவாலயங்கள் வியக்க வைக்கின்றன.
1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோதும் கோவா நம் நாட்டுடன் இணையவில்லை.1961டிசம்பர் 12ஆம் தேதி 36 மணிநேர நேரடி ராணுவ நடவடிக்கை மூலம் கோவா, டாமன் டையூ ஆகிய பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. யூனியன் பிரதேசமாக இருந்த கோவா,1987 மே 30-ம் தேதி நாட்டின் 25-வது மாநிலமாகியது.
மண்டோலி, சுஹாரி, தெர்கோல், சோப்ரா, சல் என்று மலைச் சரிவுகள், பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்தோடும் ஆறுகள் உலக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. கடற்கரைகள், மலைச்சரிவுகள், ஆறுகள் மட்டுமல்லாது அடர்ந்த காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், தோப்புகள் என்று கோவாவுக்கு இயற்கை அன்னை அழகை வாரி வழங்கியிருக்கும் அழகைக் காண கண்கள் கோடி வேண்டும்.
கோவா மாநிலம் வடக்கு கோவா, தெற்கு கோவா என்று இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு கோவாவில் மகாராஷ்டிர மாநிலத்தின் தாக்கமும், தெற்கு கோவாவில் கர்நாடக மாநிலத்தின் தாக்கமும் உள்ளது. பல்வேறு மொழிகள், கலாச்சாரங்களை கொண்ட இம்மாநிலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்கின்றனர்.
தேவநாகரி எழுத்து வடிவில் கொங்கணியை எழுதி வந்தவர்கள், இப்போது ஆங்கிலத்தில் அம்மொழியை எழுதி வருகிறார்கள் பல்வேறு மொழிகள் பேசும் மக்களும், பல்வேறு சமூகங்களும், கிறிஸ்தவ மதத்தினரும் அதிகமாக வாழும் பன்முகத் தன்மை கொண்ட கோவா மாநிலத்தில் தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
அனைத்து மதங்கள், மொழிகள், கலாச்சாரங்களைக் கொண்ட மக்களை அரவணைத்துச் செல்லும் கட்சி பாஜக என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. பாஜகவில் கத்தோலிக்கர்கள் அதிக அளவில் இருப்பதும், கத்தோலிக்க எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பாஜகவில் இருக்கிறார்கள்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த மனோகர் பாரிக்கர் கோவாவின் முதல்வராக இருந்தவர். புற்றுநோயால் அவர் உயிரிழக்க, இப்போது டாக்டர் பிரமோத் சாவந்த் முதல்வராக இருக்கிறார்.
அடுத்த 6 மாதங்களில் கோவா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் கோவா மாநில பாஜக மகளிரணி செயற்குழு கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. மறைந்த மனோகர் பாரிக்கர் மீது கோவா மக்கள் பேரன்பு கொண்டுள்ளனர். வயதில் இளையவராக இருந்தாலும் முதல்வர் பிரமோத் சாவந்த்திற்கும் மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளதை உணர முடிந்தது.
மற்ற கடற்கரை மாநிலங்களைப் போல கோவாவிலும் அரிசியும், மீனும் முக்கியமான உணவாக உள்ளது. மீன் இல்லாமல் சாப்பாடு இல்லை என்கிற அளவுக்கு விதவிதமான மீன் வகைகளை ருசித்து, ரசித்து சாப்பிடுகிறார்கள், கோவா மக்கள்
திங்கள்கிழமை (ஆகஸ்ட் 9) முதல் சிரவண மாதம் தொடங்குவதால் முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை கோவா முழுவதும் அனைத்து வீடுகளிலும் விதவிதமாக அசைவ உணவுகளை சாப்பிடுகிறார்கள். சிரவண மாத தொடக்கத்தில் இருந்து 40 நாட்களுக்கு கோவா மக்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள் என்பது தான் இதற்கு காரணம்
தமிழகத்தைப் போல கோவாவிலும் வாழை இலையில் சாப்பிடும் பழக்கம் உள்ளது நாம் வாழை இலையை வலது இடது பக்கமாக போட்டு சாப்பிடுவோம். ஆனால் கோவாவில் நீளவாக்கில் வாழை இலையை போட்டு இலையின் நுனி அவர்களின் எதிரில் இருப்பது போல சாப்பிடுகிறார்கள்.
கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என்று மகளிர் அணி மாநில செயற்குழுவில் அரங்கமே நிறைந்து வழியும் அளவுக்கு திரண்டிருந்தனர். கோவா மாநிலம் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் கோவா மாநிலத்தில் பாஜக அரசு செயல்படுத்தி உள்ள மக்கள் நலத்திட்டங்களையும், கடந்த 7 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு கோவா மாநிலத்திற்கு நிறைவேற்றியுள்ள திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு மகளிரணி நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டார் வானதி
‘சுயம் பூரண கோவா’ என்ற பெயரில் மக்கள் சந்திப்பு இயக்கம் கோவாவில் நடைபெற்று வருகிறது மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். மாதவி என்ற ஒரு பஞ்சாயத்து தலைவர் இந்த இயக்கத்தின் மூலம் தனது பஞ்சாயத்தில் உள்ள மக்கள் அனைவரையும் சந்தித்து இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.
கோவாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் தலா ரூ. 2 லட்சத்தை கோவா மாநில பாஜக அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால்உயிரிழந்த முன் களப்பணியாளர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் நிலையில் கோவாவில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
அதுபோல கோவாவில் அரசுப்மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏற்படும் செலவுகள் அனைத்தையும் மாநில அரசே ஏற்றுக் கொள்கிறது.
5ஆம் வகுப்பு வரை மராத்தி மற்றும் கொங்கணியில் படிக்கிறார்கள். பிறகு ஆங்கில வழிக் கல்விக்கு மாறுகிறார்கள். இப்போது தாய்மொழியில் படிப்பது குறைந்து வருவதாக முதல்வர் வருத்தப்பட்டார். பள்ளிக் கல்வியை அனைவருக்கும் உறுதி செய்வதில் கோவா மாநில பாஜக அரசு காட்டும் ஆர்வமும் அர்ப்பணிப்பு உணரவுடன் செயல்பட்டு வருகிறது.
கோவாவில் சுற்றுலா இந்த முக்கியமான தொழிலாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பாஜக அரசு சுற்றுலாவை மேம்படுத்த எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளது பாலங்கள், சாலைகள், ஹோட்டல்கள் என்று சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை செய்துள்ளது. ஆறுகளின் குறுக்கே பாலங்களை கட்டி அதில் ஹோட்டல்களை அமைத்தும் வருகிறார்கள்.
அப்படி கட்டப்பட்ட ஒரு பாலத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை நினைவு கூரும் வகையில் ‘அடல் சேது’ என்று பெயரிட்டுள்ளனர். இதுபோன்று சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல்வேறு திட்டங்கள் அங்கு நடைபெற்று வருவதைக் காணமுடிந்தது.
கோவாவில் 20 சதவீதம் பழங்குடியின மக்களும், 3 சதவீதம் பட்டியல் இன மக்களும் உள்ளனர் இவர்களை பூமிபுத்ரா அதாவது மண்ணின் மைந்தர்கள் என்று அழைக்கின்றனர். கோவாவில் குறைந்தது 15 ஆண்டுகள் வசித்தால் தான் அங்கு அரசு வேலைக்கு செல்ல முடியும்.
இது போன்ற பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளனர். கோவாவில் இருந்து இதுவரை ஒரே ஒருவர் மட்டுமே ஐஏஎஸ் அதிகாரியாகி இருக்கிறாராம். இந்த தகவல் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. அதிகமான நபர்களை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதல்வர் பிரமோத் சாவந்த் என்னிடம் தெரிவித்தார்.
கோவாவில் ஒரு ஐஐடி ( இந்திய மேலாண்மை நிறுவனம்) அமைக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது ஆனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு எழுந்துள்ளதால் அதற்கான நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பல ஆச்சரியங்களும் சிக்கல்களும் நிறைந்த கோவாவில் இருந்து விடை பெற்றேன்.