தமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …

 ”தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ. ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது” என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேசினார்.

எழுத்தாளர் சுப்பு எழுதியுள்ள ‘திராவிட மாயை’ ஆங்கில நுால் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. அதில் அண்ணாமலை நுாலை வெளியிட ‘வின்’ தொலைக்காட்சி தலைவர் தேவநாதன் யாதவ் பெற்றார்.

அண்ணாமலை பேசியதாவது: திராவிடம் என்பது உடைந்து விட்டது. திராவிடம் என்று 70 ஆண்டுகளாக கூறி வரும் பொய்யை உடைத்து வருபவர்கள் பலர் உண்டு. குழப்பங்கள் நிறைந்தாக திராவிட கொள்கை உள்ளது.தமிழகத்தில் 2019ல் தீண்டாமை அதிகம் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 626 ஆகவும்; 2022ல் 400க்கும் மேற்பட்ட கிராமங்களும் இருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் வெளியாகின.

அதில் 2019ல் உன்னிப்பாக பார்க்கும் போது 156 கிராமங்கள் திருவாரூர் மாவட்டத்தில் இருந்தன.தீண்டாமை அதிகம் உள்ள கிராமங்களில் முதலிடத்தில் இருந்த திருவாரூர் தான் தமிழகத்தின் ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவரின் மாவட்டம்.இதை மாயை என்று சொல்லவில்லை என்றால் எதை சொல்ல முடியும்?

தமிழகத்தில் ஜாதி அடிப்படையிலான ஆணவ கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் ஜாதி இல்லை என்று சொல்கின்றனர்.தி.மு.க.வை வீழ்த்துவது மிகவும் எளிது. தி.மு.க.வின் முதல் அடுக்கில் இருப்பவர்கள் அறிவாளிகளாக காட்டி கொண்டு பொய்யை மட்டும் பேசி வருபவர்கள்.

பெரிய வெங்காயம் போல அவர்களை உரித்து விட்டால் இரண்டாவது அடுக்கில் இருப்பவர்கள் ஆபாசமாக பேசுபவர்கள்.அதையும் உரித்து விட்டு மூன்றாவது அடுக்கில் சென்றால் குறுநில மன்னர்கள் இருப்பர். அவர்களை பாதுகாப்பது தான் முதல் இரண்டு அடுக்குகளில் இருப்பவர்களின் பணி.முதல் இரண்டு அடுக்குகளை உரித்து விட்டால் மூன்றாவது இருப்பவர்களால் பேச முடியாது.அந்த அடுக்கை உரித்து பார்த்தால் கருணாநிதியின் குடும்பம் இருக்கும்.

அதையும் உரித்து விட்டால் உள்ளே ஒன்றும் இல்லை. இந்த மாயையை வைத்து தான் இத்தனை ஆண்டுகள் ஏமாற்றி வருகின்றனர்.தமிழகத்தில் பா.ஜவுக்கு நல்ல சூழல் அமைந்துள்ளது. அனைத்து மக்களும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். சமூக ஊடகங்களால் திராவிட மாயையும் தி.மு.க.வும் வேகமாக உடைந்து வருகிறது.

தமிழகத்தில் 2024ல் பா.ஜ.வுக்கு மைல் கல்லாக இருக்கும். அது பா.ஜ.வின் மாடல் பிரதமர் நரேந்திர மோடியின் மாடல்.தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பா.ஜ. வேகமாக வளர்ந்து வருகிறது. மாற்று கட்சிகளில் இருந்து பலரும் பா.ஜ.வில் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் 2026ல் பா.ஜ. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நிச்சயமாக ஆட்சி அமைந்தே தீரும்.இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி தினமலர்.

Exit mobile version