காஷ்மீர் பள்ளத்தாக்கின் ரத்த சரித்திரமும் காஷ்மீரி பண்டிட்களின் துயரமும்- வானதி சீனிவாசன் பகிர்ந்து கொண்ட அனுபவம்!

சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்பது ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அம்மாநிலம் ஜம்மு – காஷ்மீர் , லடாக் என்று இரு தனித்தனி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பயங்கரவாதிகளின் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. பள்ளத்தாக்கின் பூர்வகுடிகளான காஷ்மீரி பண்டிட்டுகள் விரட்டி அடிக்கப்பட்டு அகதிகளாக ஜம்முவில் அதிகம் பேர் வசிக்கின்றனர். கத்ரா சந்திப்பின்போது அவர்களில் சிலருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மது என்ற காஷ்மீரி பண்டிட் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் என்னிடம் உரையாடினார்.

“சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளால் தற்போது நிலைமை சீராகி வருகிறது. எனவே நீங்கள் உங்கள் தாயகமான காஷ்மீர் பள்ளத்தாக்கு செல்வீர்களா?” என்று கேட்டேன்.” தாய் மண்ணில் வசிக்க யாருக்குதான் ஆர்வம் இருக்காது? ஆனால் அது சாத்தியமா என்ற சந்தேகமும், பயமும் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் எங்கள் மண்ணை விட்டு வெளியேறி 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இப்போது மீண்டும் அங்கு சென்றால் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வோம்? பிரதமர் மோடியின் முயற்சியால் எங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும். வேலை வாய்ப்புகளும் கிடைக்கலாம்.

அப்போது அங்கு குடியேறும் நிலையும் வரலாம். ஆனால் பாதுகாப்பு இருக்குமா என்ற அச்சம் எங்களை வாட்டி வதைக்கவே செய்கிறது நாங்கள் அணியும் ஆடைகள், அணிகலன்களை வைத்து பண்டிட் பெண்கள் என்று கண்டறிந்து எங்களை தாக்குவார்கள். அடித்து விரட்டுவார்கள். சிலநேரங்களில் துப்பாக்கியால் சுட்டு கொலையும் செய்வார்கள். இவற்றை எல்லாம் நாங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பே அனுபவித்து விட்டோம். அந்த ரணம் இன்னும் எங்களிடம் இருக்கிறது. எங்கள் அடையாளத்துடன் நாங்கள் வாழ முடியுமா என்ற அச்சத்துடனேயே இருக்கிறோம்” என்று அவர் கூறியபோது என் கண்கள் குளமாகி விட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கின் ரத்த சரித்திரத்திற்கு மதுவின் இந்த சில வரிகளே சாட்சி.

ஆனால் காஷ்மீரி பண்டிட்டுகள் மீண்டும் சொந்த மண்ணிற்கு திரும்பினால் தான் அங்கு நிலைமை மாறும் அரசாங்கம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை கொண்டு வர முடியும் என்பதை எடுத்துக் கூறியபோது அவர்கள் அதை புரிந்து கொண்டனர் காஷ்மீரி பண்டிட்டுகள் சிலருக்கு அச்சம் இருந்தாலும் பலர் சொந்த மண்ணுக்கு செல்லும் ஆர்வத்துடன் உள்ளனர். தங்கள் வீடு நிலங்களை மீட்க வேண்டும் என்ற ஆவல் அவரிடம் இருப்பதையும் அறிந்து கொண்டேன்.

கத்ரா சந்திப்பு முடிந்ததும் ஜம்மு திரும்பினேன். ஜம்முவில் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ரகுநாத் ஆலயத்திற்கு சென்று வழிபட்டேன். அந்த ஆலயத்தின் கர்ப்பகிரகத்தில் சீதா தேவி சிலைக்கு பின்னால் குண்டுகளால் தூளாக்கப்பட்ட ஓட்டைகள் இன்றும் இருக்கின்றன. அதனைப் பார்த்தபோது மனம் வேதனை அடைந்தது. ஜம்முவில் எங்கு பார்த்தாலும் பயங்கரவாத வரலாற்றுக் காட்சிகள் அப்படியே தான் இருக்கின்றன. ரகுநாத் கோயில் தரிசனம் முடிந்ததும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் அமைச்சர் பிரியா சேத்தி இல்லத்திற்கு சென்றேன் அவரது கணவர் பாஜக மாநிலத் துணைத் தலைவராக இருக்கிறார். இருவருடனும் நீண்டநேரம் உரையாடினேன்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், தேர்தலுக்கு எப்படியெல்லாம் தயாராகி வருகிறது, தொகுதி மறுசீரமைப்பு எப்படி நடக்கிறது, நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்து பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டேன். அவை ஆச்சரியமாகவும், வியப்பாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும், வேதனை அளிப்பதாகவும் என்று கலவையாக இருந்தன.ஏலக்காய் பட்டை குங்குமப்பூ சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் காஷ்மீரின் தெவ்ஹா என்ற தேனீரின் சுவை எனக்கு மிகவும் பிடித்து போனது எங்கு சென்றாலும் அதனை கேட்டு கேட்டு பருகினேன்.
ஜம்முவில் இருந்து திரும்பும் வழியில் பல நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினேன். அவர்களது அனுபவங்கள், கட்சிப் பணிகள், தாங்கள் சந்திக்கும் இன்னல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.

அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசும் வாய்ப்பு அமைந்ததை எண்ணி பெருமிதம் அடைந்தேன். காஷ்மீர் பெண்கள் காட்டிய அன்பும் பரிவும் பாசமும் பயணக் களைப்பை இல்லாமல் செய்துவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும. சொந்த மண்ணில் இருந்து 3,000 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறோம் என்ற எண்ணத்தையும் இல்லாமல் செய்துவிட்டது எனது ஜம்மு பயணம் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். – வானதி சீனிவாசன் MLA, தேசிய மகளிரணி தலைவர் பா.ஜ.க

Exit mobile version