“காங்கிரஸ் ஆட்சியில் CAA இருந்திருந்தால், மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருக்காது” – ரவீந்திரநாத் குமார் அதிரடி!
காங்கிரஸ் ஆட்சியின் போது தேசிய குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்திருந்தால் மும்பை வெடிகுண்டு தாக்குதல் நடந்திருக்காது என்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
குடியுரிமை சட்டம் என்பது அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.
நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இப்போது நடைமுறையில் உள்ள ஒரு சட்டம். இது முழுக்க முழுக்க நமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான சட்டம்.
இதற்கு முன்பு மத்தியில் இருந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் மும்பை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
அப்போது மும்பை தாஜ் ஹோட்டல் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
இப்போது கொண்டுவரப்பட்டுள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டம் அப்போது கொண்டு வந்திருந்தால், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்க முடியாது.
மும்பை தாக்குதலையும் அவர்கள் நடத்தி இருக்க மாட்டார்கள். அதுபோன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவாமல் தடுக்க வேண்டுமானால் தேசிய குடியுரிமை திருத்த சட்டம் கட்டாயம் தேவை.
இதையெல்லாம் ஆலோசித்து தான் பிரதமர் நரேந்திர மோடி இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
இந்த சட்டத்தினால் இங்குள்ள எந்த முஸ்லிமுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இதுதான் உண்மை. இது அனைவருக்கும் தெரியும். மு.க.ஸ்டாலினுக்கும் தெரியும்.
ஆனால் திமுகவும், காங்கிரசும் ஓட்டு அரசியலுக்காக அப்பாவி முஸ்லிம்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகின்றன. எப்படியாவது ஆட்சியில் அமர்ந்து விட வேண்டுமென்று முகஸ்டாலின் துடிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது.
இவ்வாறு ரவீந்திரநாத் குமார் கூறினார்.