தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் டிஜிபியாக இருக்கும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக், கூறியுள்ள ஒரு புகார் மாநில அரசு தொடங்கி மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வரை கவனயீர்ப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2024 ஜூலை 29-ஆம் தேதி காலை 11:30 மணி அளவில் சென்னை எழும்பூரில் இருக்கும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தில் ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் அவரது அறையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.இது தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஏசி சர்க்யூட் ஃபால்ட் ஏற்பட்டு தீ விபத்து நடந்தது என அந்த வழக்கை முடித்தனர்.இந்நிலையில், சென்னை முதல் டெல்லி வரை பரபரப்பு தீயை பற்ற வைத்திருக்கிறது. இந்த விவகாரம்.அந்தத் தீ விபத்துக்கு பிறகு இரு வாரங்கள் கழித்து… 2024 ஆகஸ்ட் 14ஆம் தேதி கல்பனா நாயக் டிஜிபி அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார்.
சீரியஸாக கவனிக்கும் மத்திய உள்துறை!
அதில், ‘எனது அலுவலகத்தில் நடந்த தீ விபத்து தற்செயலானது அல்ல. என்னை திட்டமிட்டு கொல்ல முயற்சித்து இருக்கிறார்கள். தேர்வாணையத்தில் நடந்த முறைகேடுகளை நான் தட்டி கேட்டதால் என்னைப் பழி வாங்குவதற்காக திட்டமிட்டு இந்த தீ விபத்து நடத்தப்பட்டுள்ளது” என்று புகார் கொடுத்திருந்தார்.அந்த புகார் பற்றி அப்போது செய்திகள் எதுவும் வெளிவராத நிலையில், பிப்ரவரி 3ஆம் தேதி ஆங்கில நாளிதழான தி ஹிந்து இது குறித்து செய்தி வெளியிட்டு இருக்கிறது
“கல்பனா நாயக் 1998 பேட்ச் அதிகாரி. தமிழ்நாட்டில் எஸ்.பி. யாக தனது பணியைத் தொடங்கியவர்.சில வருடங்கள் ஐஜியாக பணியாற்றி விட்டு சமீபமாக சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வருகிறார். இவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஏடிஜிபி புகார் கொடுத்திருக்கிறார் என்னும்போது அதை டிஜிபி அலுவலகம் லேசாக எடுத்துக் கொள்ளாது. உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டார். அதன் பேரில் சுமார் 30 பேர் வரை டிஜிபி அலுவலகத்தால் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.அலுவலக ஊழியர்கள், அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி, அந்த ஏசி சாம்சங் கம்பெனி என்பதால் அந்த பகுதிக்குரிய சாம்சங் ஏசி மெக்கானிக் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கல்பனா நாயக் அறையில் இரண்டு ஏசிகள் இருந்தன. அவர் காலை அலுவலகத்துக்கு வருவதற்கு முன் 9.45 மணிக்கு எல்லாம் ஏசிக்கள் ஆன் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அவர் அலுவலகத்தை விட்டுப் புறப்பட்ட பின்பு தான் அந்த ஏ.சி.க்கள் ஆஃப் செய்யப்படும். அதனால் தினந்தோறும் காலை 9.45 மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இரண்டு ஏ.சி.க்களும் ஓடிக் கொண்டிருக்கும் என்பது அவரது அலுவலக ஊழியர்களிடம் நடத்திய விசாரணை மூலம் தெரிந்தது.
புகார் கூறியிருக்கும் பெண் அதிகாரி கல்பனா நாயக் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இது தொடர்பாக தேசிய எஸ்சி எஸ்டி ஆணையமும் கவனித்து வருவதாக டெல்லியில் இருந்து தகவல்கள் வருகின்றன.இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.“கல்பனா நாயக் புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடலாம் என சில உயரதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். அதே நேரம் சில முக்கிய அதிகாரிகள், ‘தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை இதை அரசியல் ரீதியாக அணுக வாய்ப்பு இருக்கிறது. விவகாரம் ஐபிஎஸ் உயரதிகாரி தொடர்பானது என்பதால், ஒன்றிய அரசே இதை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே இந்த வழக்கை நாமே சி.பி.ஐ விசாரணைக்கு கொடுத்துவிடலாம் என முதல்வருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம்.