சென்னை: சென்னையில் மெத்தாம்பிட்டமைன் போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த ராகுல், காதர் மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான காதர் மொய்தீனிடம் நடத்திய விசாரணையில் சுல்தான் என்பவரிடம் இருந்து வாட்ஸ் அப் குழு மூலம் போதைப்பொருள் வாங்கியதாக வாக்குமூலம். போதைப்பொருளைக் கைப்பற்றி வடக்கு கூடுதல் ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழகத்தில் தாராளமாக கிடைக்கும் போதை மாத்திரை, போதை ஊசி, ெஹராயின், மெத்தாம்பெட்டமைன், கோகைன், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்தி சிறுவர்களும் இளம் தலைமுறையினரும் சீரழிந்து சாலைகளில் உருளும் காட்சிகள் சகஜமாகி வருகின்றன.
தி.மு.க.,வில் அயலக பிரிவு நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் என்பவர், அரசியல் மற்றும் திரை உலக தொடர்புகளை பயன்படுத்தி சர்வதேச போதை பொருள் கடத்தல் தொழிலை நடத்தி வந்த கதைகள், ஒவ்வொன்றாக அம்பலமாகும் நிலையில், போதை சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தில் தமிழ் சமுதாயம் சீரழிந்து வருவது குறித்து சமூக ஆய்வாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.அரசு நடத்தும் டாஸ்மாக் வாயிலாக தமிழர்கள் மது போதைக்கு அடிமையாகி, வாழ்க்கையை தொலைக்கின்றனர் என்பதே, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக அக்கறை கொண்டவர்களின் ஆதங்கமாக இருந்தது.
மதுவுக்கு சவால் விடும் விதமாக குட்கா, மாவா உள்ளிட்ட மலிவு விலை போதை பொருட்கள் தமிழகத்தில் ஊடுருவியபோது அரசு அதிகாரிகள் உயர் போலீஸ் அதிகாரிகள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் கணிசமான பங்கு கிடைத்ததால், அந்த போதை பொருட்களின் வியாபாரத்தை முடக்க முழுமையான முயற்சிகள் எடுக்கவில்லை.அந்த மெத்தன போக்கும் சுயலாப சிந்தனையும் இன்று தமிழகத்தை போதை நாடாக புரட்டிப் போடும் அளவுக்கு, தீயசக்திகளை உரமிட்டு வளர்த்துள்ளன.
மலிவு விலை போதை பொருட்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, விலை உயர்ந்த கோகைன், மெத்தாம்பெட்டமைன், கஞ்சா எண்ணெய் என ஆடம்பர போதை வஸ்துகள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதுவரை மேலை நாடுகளில் மட்டுமே பார்த்த அலங்கோலங்கள் தமிழக வீதிகளிலும் அரங்கேறுகின்றன.மேல்தட்டு, மத்திய வர்க்கம், ஏழை என்ற சமூக பாகுபாடு இல்லாமல், போதை தலைக்கேறிய இளம் தலைமுறையினர் சாலை ஓரங்களில் அரை மயக்கத்தில், கொக்கி போல் வளைந்து நிற்பது, சுவரில் சாய்ந்து கிடப்பது, தரையில் உருண்டு கிடப்பது போன்ற காட்சிகளை சென்னை மட்டுமின்றி பல நகரங்களில் காண முடிகிறது.
மத்திய வருவாய் புலனாய்வு துறையின் தனிப்படை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கத்தார் விமானத்தில் வந்த பயணியரை கண்காணித்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாரத் வசிஷ்டா, 28, என்ற பயணி, மற்றொரு விமானத்தில் டில்லி செல்வதற்காக விமான நிலையத்திற்குள் சென்றார்.அவரை மறித்து சோதனை நடத்தியபோது, ஒரு கிலோ போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். ஆய்வகத்தில் பரிசோதித்தபோது, அது விலை உயர்ந்த கோகைன் என்பது தெரிந்தது.அதன் மதிப்பு 28 கோடி ரூபாய். கைதானவர் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என தெரிய வந்துஉள்ளது.