முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கான தண்டனையை உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததை தொடர்ந்து பொன்முடி எம்எல்ஏவாக மீண்டும் இன்று பதவியேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, இதற்கு தான் ஆளுநர் திடீர் ட்விஸ்ட் வைத்துள்ளார்.தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி செல்வதாக கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
உயர் கல்வி துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டுஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர், விழுப்புரம்மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016 ஏப்ரல் 18-ம் தேதி தீர்ப்பு அளித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில்கடந்த 2017-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இந்தவழக்கை மேலோட்டமாக விசாரித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு, அதாவது 64.90 சதவீதம் அளவுக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளதாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபணமாகியுள்ளன.
எனவே, இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அபராதம் செலுத்த தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். திருக்கோவிலூர் தொகுதியும்ஒரு மாதம் கழித்து காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்துபொன்முடி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து , தான் இழந்த எம்எல்ஏ பதவியை பொன்முடி மீண்டும் பெறலாம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், பொன்முடிக்கு மார்ச் 13 எம்எல்ஏவாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடிவு செய்தார். அதன்படி, பதவிப்பிரமாணம் செய்து வைக்க, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை மாலை கடிதம் எழுதினார் .
இந்நிலையில் இன்று பொன்முடி கட்டாயம் எம்எல்ஏவாக பதவியேற்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்த சூழலில், நாளை டெல்லி செல்வதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்திருக்கிறார். மார்ச் 16-ம் தேதி தான் அவர் சென்னை திரும்புவார் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட பயணம்தான் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆளுநர் நாளை டெல்லி செல்வதால் பொன்முடியின் பதவிப்பிராமணம் தள்ளிப்போகும் எனக் கூறப்படுகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















