பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய சீன அரசு பத்திரிகை.. உலகத்தின் சக்தியாக இந்தியா விளங்குகிறது.

PM Modi, President Xi

PM Modi, President Xi

இந்தியாவை பற்றியோ இந்திய அரசினை பற்றியோ சீன ஊடகங்ககளில் வந்தால் அதை இருட்டடிப்பு செய்து விடும் சீன அரசு. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியையும் அவரின் கீழ் இயங்கும் மத்திய அரசையும் பாராட்டி சீன அரசின் ஆதிகாரபூர்வமான நாளிதழான குளோபல் டைம்ஸில் கட்டுரை வந்துள்ளது, இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன அரசின் நாளிதழான குளோபல் டைம்ஸில் அந்நாட்டின் பியூடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய இயக்குநர் சாங் ஜியோடாங் இந்தியா குறித்த கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்தியாவின் அரசியல், பொருளாதார மாற்றம் உள்ளிட்டவை அதில் இடம்பெற்றுள்ளது.

அந்த கட்டுரையில், கடந்த 10 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியா அடைந்த முக்கியத்துவம் பற்றியும், அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக தனக்கான சொந்த அடையாளத்தை இந்தியா உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் ஆட்சியில் பொருளாதாரம், சமூகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், மிகுந்த தன்னம்பிக்கையுடனும், திட்டமிடலுடனும் உலக அரங்கில் இந்தியா வலம் வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், உலக நாடுகளுடனான உறவில் சரிசமமான இடத்தை இந்தியா அடைந்து வருவதாகவும் அந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான வர்த்தக உறவு அணுகுமுறையை மாற்றியுள்ள இந்தியா, முன்பு சீனாவின் இறக்குமதியை குறைப்பதில் கவனம் செலுத்திய இந்தியா, தற்போது ஏற்றுமதியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார். அதேபோல, காலனிய பாதிப்பிலிருந்து விடுபட்டு, சொந்த அடையாளத்தை இந்தியா வலுப்படுத்தி வருவதாகவும், சர்வதேச உறவுகளிலும் இந்தியா மிகுந்த திட்டமிடலுடன் செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் உலக அரங்கில் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும், சர்வதேச உறவில் குறுகியகால கட்டத்தில் இத்தகைய மாற்றம் மிகவும் அரிதானது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version