காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழ்நாட்டிலுள்ள பல லட்ச விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு கூறி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இது தொடர்பாகத் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, அங்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார். இருப்பினும் கர்நாடக அரசு அணை கட்டுவது உறுதி என்றே தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மிக விரைவில் மேகதாதுவில் அணைக் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்தார்
விவசாயிகள் ஆலோசனை இந்த நிலையில் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி மேகதாதுவில் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். இதனிடையே கர்நாடக காங்கிரஸ் கட்சியினரின் இப்போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாகையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் போராட்டம் கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராகவும், மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிஆர்.பாண்டியன் கூறுகையில் ; மேகதாதுவில் அணைக்கட்ட வலியுறுத்தி வருகிற ஜனவரி 9 ஆம் தேதி பாதயாத்திரை சென்று ஜனவரி 19 ஆம் தேதி மேகதாதுவில் காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.
அழகிரிக்கு கண்டனம் ஜனவரி 18 ஆம் தேதி திருவாரூரில் இருந்து சேலம் – தர்மபுரி – ஓசூர் மேகதாது சென்று எதிர்ப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். தமிழக அரசு ராசிமணலில் அணைக்கட்ட வேண்டும், காங்கிரஸ் கட்சி போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், தமிழக காவிரி விவசாய சங்கத்தையும், தமிழக விவசாயிகளையும் கொச்சைப்படுத்தி பேசியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ்.அழகிரிக்கு கண்டனமும் தெரிவித்தார்.