காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் மரத்தில் காய்த்த ரூ. 1 கோடி…!

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும், காங்., வேட்பாளரின் சகோதரர் வீட்டு மரத்தில் கட்டி தொங்க விடப்பட்டிருந்த, 1 கோடி ரூபாயை வருமானவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவில், இங்கு வரும், 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், தட்சிண கன்னடா மாவட்டம், புத்துார் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ராய், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய, பணத்தை அவரது சகோதரர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக, வருமானவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மைசூரில் உள்ள அசோக் ராயின் அண்ணன் சுப்பிரமணிய ராய் வீட்டில், நேற்று முன்தினம் இரவு வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், வீட்டில் பணம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, அங்கிருந்து புறப்பட முயன்றனர்.

அப்போது, வீட்டு வளாகத்தில் இருந்த மாமரத்தை சுப்பிரமணிய ராய் குடும்பத்தினர் ‘குறுகுறு’வென பார்த்தனர். இதனால், வருமானவரி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மரத்தின் அருகே சென்று பார்த்தனர். அப்போது, மரக்கிளையில் ஒரு அட்டை பெட்டி கட்டி தொங்க விடப்பட்டு இருந்தது. பெட்டியை எடுத்து பார்த்த போது, அதற்குள் கட்டு கட்டாக 1 கோடி ரூபாய் இருந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மரத்தில் பணம் கட்டி தொங்க விடப்பட்டு, அதை அதிகாரிகள் பறிமுதல் செய்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Exit mobile version