நீர்வள மேம்பாட்டில் அம்பேத்கரின் பங்களிப்பை புறக்கணித்த காங்கிரஸ் பிரதமர் மோடி ஆவேசம்.

The Prime Minister, Shri Narendra Modi paying homage to Babasaheb Dr. B.R. Ambedkar, during the Maritime India Summit, in Mumbai on April 14, 2016.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு,பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.கூட்டத்தினரிடையே உரையாற்றிய நரேந்திர மோடி, இந்திய, உலக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மத்தியபிரதேசத்தில் முதலமைச்சர் மோகன்யாதவ் தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூர்ந்த நரேந்திர மோடி, இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

கடந்த ஓராண்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, வளர்ச்சிப் பணிகளும் வேகம் பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டமான தௌதான் அணைக்கட்டு, மத்தியப் பிரதேசத்தின் முதலாவது சூரியசக்தி மின் நிலையமான ஓம்கரேஷ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டம் ஆகியவற்றுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

பாரதரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு இன்று குறிப்பிடத்தக்க உத்வேகம் அளிக்கும் நாள் என்று கூறிய பிரதமர், இன்று நல் ஆளுகை, நல்ல சேவைக்கான திருவிழாவைக் குறிக்கிறது என்றார். இது நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது என்றும் அவர் கூறினார். வாஜ்பாயை நினைவு தபால் தலை, நாணயம் ஆகியவற்றை வெளியிட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், பல ஆண்டுகளாக வாஜ்பாய் தம்மைப் போன்ற பல வீரர்களை வளர்த்து வழிகாட்டியதாகக் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்காக அடல் ஆற்றிய சேவை என்றும் நம் நினைவில் அழியாது நிலைத்திருக்கும் என்று பிரதமர் கூறினார்.

1100-க்கும் மேற்பட்ட அடல் கிராம சுஷாசன் சதன் பணிகள் இன்று முதல் நடைபெற்று வருவதாகவும், அதற்கான முதல் தவணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். அடல் கிராம சேவா சதன், கிராமங்களின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.

நல்லாட்சி தினம் என்பது ஒரு நாள் விவகாரம் அல்ல என்பதை வலியுறுத்திய நரேந்திர மோடி,”நல்லாட்சி என்பது நமது அரசுகளின் அடையாளம்”என்றார்.மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்காகவும், மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்காகவும் மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இதன் பின்னணியில் நல்ல ஆளுகை வலுவான காரணியாக உள்ளது என்று கூறினார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், வளர்ச்சி, மக்கள் நலன், நல்லாட்சி ஆகிய அளவுகோல்களின் அடிப்படையில் நாட்டை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அறிவுஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், பிற குறிப்பிடத்தக்க கல்வியாளர்களைப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் மக்கள் நலனையும் வளர்ச்சிப் பணிகளையும் உறுதி செய்வதில் தங்கள் அரசு வெற்றி கண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். “சில அளவுகோல்களின் அடிப்படையில் நாம் மதிப்பீடு செய்யப்பட்டால், சாமானிய மக்களுக்காக நாம் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பதை நாடு காணும்” என்று திரு நரேந்திர மோடி கூறினார் . நமது நாட்டிற்காக ரத்தம் சிந்திய நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க அரசு அயராது உழைத்தது என்றும் அவர் கூறினார். நல்ல நிர்வாகத்திற்கு நல்ல திட்டங்கள் மட்டுமின்றி, அவற்றை திறம்பட செயல்படுத்துவதும் தேவை என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், அரசுத் திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களுக்கு பயனளிக்கின்றன என்பதுதான் நல்ல ஆளுகையின் அளவுகோல் என்று குறிப்பிட்டார். அறிவிப்புகளை வெளியிட்ட முந்தைய அரசுகள், அவற்றை அமல்படுத்துவதில் ஆர்வம், நோக்கமின்மை காரணமாக அதன் பலன்கள் மக்களைச் சென்றடையவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் ரூ. 12,000 மதிப்பிலான பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி போன்ற திட்டங்களின் நன்மைகளை எடுத்துரைத்த அவர், ஜன் தன் வங்கிக் கணக்குகளைத் திறப்பதன் மூலம் இது சாத்தியமானது என்றார். வங்கிக் கணக்குகளைத் தொடங்கி அவற்றை மொபைல் எண்களுடன் இணைக்காமல் இது சாத்தியமில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், மத்தியப் பிரதேசத்தில் லட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தை சுட்டிக்காட்டினார்.

முன்பு, ஏழைகள் ரேஷன் பொருட்களை பெற போராட வேண்டியிருந்தது எனவும், அதே நேரத்தில் இன்று, ஏழைகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இலவச ரேஷன் பெறுகிறார்கள் என்றும் அவர் கூறினார். மோசடியை ஒழிக்கும் தொழில்நுட்பம், ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை போன்ற நாடு தழுவிய வசதிகளை அறிமுகப்படுத்தியதை அவர் எடுத்துரைத்தார்.

நல்ல நிர்வாகம் என்றால், மக்கள் தங்கள் உரிமைகளுக்காக அரசாங்கத்திடம் கெஞ்சவோ அல்லது அரசு அலுவலகங்களைச் சுற்றி அலையவோ கூடாது என்று நரேந்திர மோடி குறிப்பிட்டார். 100% பயனாளிகளை 100% நன்மைகளுடன் இணைப்பதே இந்த அரசின் கொள்கை என்று அவர் எடுத்துரைத்தார். இது தங்களது அரசை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது என அவர் கூறினார். ஒட்டுமொத்த நாடும் இதைக் காண்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், அதனால்தான் சேவை செய்ய அவர்கள் மீண்டும் மீண்டும் வாய்ப்பளித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

தற்போதைய, எதிர்கால சவால்களை சிறந்த நிர்வாகம் எதிர்கொள்கிறது என்று வலியுறுத்திய பிரதமர், முந்தைய அரசுகளின் தவறான நிர்வாகத்தால் துரதிர்ஷ்டவசமாக பந்தேல்கண்ட் மக்கள் பல ஆண்டுகளாக பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்றார். திறமையான நிர்வாகம் இல்லாததால் பந்தேல்கண்டில் பல தலைமுறை விவசாயிகளும் பெண்களும் ஒவ்வொரு சொட்டு நீருக்கும் போராடி வந்ததாக கூறிய அவர், முந்தைய அரசுகள் தண்ணீர் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணவில்லை என்றும் கூறினார்.

இந்தியாவில் நதி நீரின் முக்கியத்துவத்தை முதன்முதலில் புரிந்துகொண்டவர்களில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும் ஒருவர் என்று குறிப்பிட்ட நரேந்திர மோடி, இந்தியாவில் உள்ள பெரிய நதிப் பள்ளத்தாக்கு திட்டங்கள் டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டவை என்றும், அவரது முயற்சிகளால் மத்திய நீர் ஆணையம் நிறுவப்பட்டது என்றும் குறிப்பிட்டார். நீர் சேமிப்பு, பெரிய அணைக்கட்டுத் திட்டங்களில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்புக்காக முந்தைய அரசுகள் அவருக்கு உரிய பெருமையை ஒருபோதும் வழங்கவில்லை என்று பிரதமர் வேதனை தெரிவித்தார்.70 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் பல மாநிலங்களில் இன்னும் நதிநீர் தாவாக்கள் உள்ளன என்பதை நினைவு கூர்ந்த பிரதமர், முந்தைய ஆட்சிகளின் தவறான நிர்வாகம், நோக்கமின்மை ஆகியவை எந்தவொரு உறுதியான முயற்சிகளையும் தடுத்து நிறுத்தின என்று குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் வாஜ்பாய் அரசு தண்ணீர் தொடர்பான சவால்களை தீவிரமாக எதிர்கொள்ளத் தொடங்கியது என்றும் ஆனால் 2004க்குப் பிறகு அந்த அரசு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டிய பிரதமர், நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்கும் இயக்கத்தைத் தமது அரசு தற்போது துரிதப்படுத்தி வருவதாகக் கூறினார். கென்-பெட்வா இணைப்பு திட்டம் நனவாகவுள்ளது என்றும், புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் வளம், மகிழ்ச்சிக்கான புதிய கதவுகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். சத்தர்பூர், டிக்கம்கர், நிவாரி, பன்னா, தாமோ, சாகர் உள்ளிட்ட மத்தியப் பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை அளிக்கும் கென்-பெட்வா இணைப்புத் திட்டத்தின் பலன்களை விளக்கிய திரு நரேந்திர மோடி , இந்தத் திட்டம் பந்தா, மஹோபா, லலித்பூர், ஜான்சி மாவட்டங்கள் உள்ளிட்ட உத்தரப்பிரதேசத்தில் உள்ள பந்தேல்கண்ட் பிராந்தியத்திற்கும் பயனளிக்கும் என்று குறிப்பிட்டார்.

நதிகள் இணைப்பு என்ற மாபெரும் இயக்கத்தின் கீழ் இரண்டு திட்டங்களைத் தொடங்கிய நாட்டின் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் மாறியுள்ளது என்று நரேந்திர மோடி கூறினார். அண்மையில் ராஜஸ்தானுக்கு தாம் மேற்கொண்ட பயணத்தின் போது, பர்பதி – காளிசிந்த்-சம்பல், கென்-பெட்வா இணைப்புத் திட்டங்கள் மூலம் பல்வேறு நதிகளை இணைப்பது உறுதி செய்யப்பட்டது என்றார். இந்த ஒப்பந்தம் மத்தியப் பிரதேசத்திற்கும் கணிசமான அளவு பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Exit mobile version