பிரதமர் மோடி குறித்த எனது தவறான கருத்தை மாற்றிக்கொண்டேன்;முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ கவுடா.

மத சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவ கவுடா செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில் கூறியதாவது: 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது, நீங்கள் (பா.ஜ.க.) 276 இடங்களில் வெற்றி பெற்றால் நான் ராஜினாமா செய்வேன். மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கலாம் ஆனால் தனிப்பெரும்பான்மையுடன் 276 இடங்களில் நீங்கள் வெற்றி பெற்றால் நான் ராஜினாமா செய்வேன் என்று அவரிடம் (மோடியிடம்) நான் சொல்லியிருந்தேன்.

பா.ஜ.க. தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடி எனக்கு கடிதம் அனுப்பினார். பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, மக்களவையிலிருந்து (எம்.பி. பதவி) ராஜினாமா செய்வதற்காக அவரை (மோடி) சந்திக்க நேரம் கேட்டேன்.

பின்பு பிரதமர் மோடியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க அவரது இடத்துக்கு சென்றேன். மோடி எப்படிப்பட்ட நபராக இருந்தாலும், அன்று என் கார் போர்டிகோவிற்கு வந்ததும், அவரே அங்கு வந்து எனக்கு முழங்கால் வலி இருப்பதால், என் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றார்.

அதன் பிறகு நான் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தபோது, தேர்தலில் பேசப்பட்ட விஷயங்களை ஏன் இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறீர்கள்? என்று பிரதமர் மோடி என்னிடம் கேட்டார். சூழ்நிலை எழுந்தால் உங்களின் ஆலோசனைகளை நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். அன்று முதல் பிரதமர் மோடி குறித்த எனது தவறான கருத்தை மாற்றிக்கொண்டேன்.

Exit mobile version