சேலம் மாநகரில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், பெரும் திரளென, ஆர்ப்பரிப்புடன் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்தியில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி எழுச்சி உரையாற்றினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது கடவுளை பெண்வடிவில் சக்தியாக, பாரத அன்னையாக வழிபட்ட மகாகவி பாரதியார் வழியில், தாமும் ஒரு சக்தி உபாசகர் என்று குறிப்பிட்ட நமது பிரதமர் , சக்தி வழிபாட்டை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் அழிந்து போனதுதான் வரலாறு என்று குறிப்பிட்டார். மேலும், இந்தி கூட்டணியின் அழிவு,
ஏப்ரல் 19 அன்று முதல் கட்டத் தேர்தல் நடக்கவிருக்கும் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கப்போகிறது என்று உறுதியுடன் தெரிவித்தார்.
திமுக காங்கிரஸ் இந்தி கூட்டணி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கும் கூட்டணி. பெண்களை இழிவுபடுத்தும் கட்சிகள். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை இவர்கள் நடத்தியவிதமே சாட்சி என்று குறிப்பிட்ட நமது பிரதமர் அவர்கள், திமுகவும் காங்கிரஸும் ஊழலும்,
குடும்ப ஆட்சியும் மட்டுமே செய்யும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு, நாடு தொலைத் தொடர்புத் துறையில், 5G தொழில் நுட்பத்தை நோக்கி முன்னேறுகிறது. ஆனால், திமுக, தனது ஐந்தாவது தலைமுறை வாரிசு அரசியலைக் கொண்டு வர முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். திமுக காங்கிரஸ் ஊழல்களைக் கூற ஒரு நாள் போதாது என்று கூறிய பிரதமர், மத்திய அரசு தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகச் செலவிடும் நிதியை எப்படிக் கொள்ளையடிக்கலாம் என்பதே திமுகவின் நோக்கமாக இருக்கிறது என்றும் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்