₹1,700 கோடி நில அபகரிப்பு.. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.. சிக்கும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

அடி மேல அடி மேல அடி மேல அடி விழுந்துகிட்டே இருக்கும் என்ற வாரிசு பட டயலாக் போல தமிழகத்தில் திமுக முக்கிய தலைவர்கள் முதல் அமைச்சர்கள் வரை சொத்து குவிப்பு வழக்கு, நில அபகரிப்பு வழக்கு என அடி மேல அடி கொடுத்து கொண்டே வருகிறது அமலாக்கத்துறை.

செந்தில் பாலாஜியை கைது செய்து தனது ஆட்டத்தை ஆரம்பித்த அமலாக்கத்துறை வரிசையாக பொன்முடி,அவரது மகன் எம்.பி. கௌதம் சிகாமணி வீட்டில் ரெய்டு என ஆட்டத்தை தீவிரப்படுத்தியது இது ஒருபுறம் இருக்க சென்னை உயர்நீதிமன்றமோ தன் பங்கிற்கு திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறது.

இந்த வரிசையில் திமுகவிற்கு அடுத்த அடியாக அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகனுக்கு பழைய வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது திமுகவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அமலாக்கத் துறையால் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் அரசு வேலை பெறுவதற்கு லஞ்சம் வாங்கிய வழக்கு போலவே ஜெகத்ரட்சகன் மீதான வழக்கும் அமைந்துள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் குரோம் லெதர் என்ற தொழிற்சாலைக்கு சொந்தமாக இருந்த நிலங்கள், 1982-ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் அரசுடைமை ஆக்கப்பட்டன. அந்த நிலங்களை நீராதாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில் 1984-ம் ஆண்டில் அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

இந்த நிலையில் அரக்கோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற எம்பியான ஜெகத்ரட்சகன், கடந்த 1996-ம் ஆண்டு குரோம் லெதர் பேக்டரி நிறுவனத்தின் பங்குகளை குரோம் தோல் தொழிற்சாலை தலைவராக இருந்த தனது அதிகாரத்தின் மூலம் 1.55 ஏக்கர் நிலத்தை முறைகேடாக வாங்கியதாகவும் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி, 41 பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சென்னை குரோம்பேட்டையில் இயங்கிய தோல் தொழிற்சாலை பங்குகளை முறைகேடாக வாங்கி, வீட்டு மனைகளாகவும் – லேஅவுட்களாகவும் சுமார் 1, 700 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்ததாக ஜெகத்ரட்சகன் மீது டாவ்சன் என்பவர் புகாரளித்தார்.

இதுதொடர்பாக, சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஜெகத்ரட்சகன் மனுவை ஏற்று, அவர் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டாவ்சன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றம் உடனடியாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Exit mobile version