மதுரையில் கோவிலை கழிப்பிடமாக மாற்றிய தி.மு.க! தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் செ.போஸின் அராஜகம்!

நன்றி: தினமலர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பழமையான காசிவிஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியில் நவீன கழிப்பிடம், குளியறைகளை கட்டி வாடகைக்கு விட்ட தி.மு.க., மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் செ. போஸ் உட்பட 12 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மதுரை சிம்மக்கல் திருமலைராயர் படித்துறை வைகை ஆற்றின் கரையில் பழமையும், புராதன சிறப்பும் மிக்க காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. கோயிலுக்குள் இருக்கும் பழமையான கல் மண்டபம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது. கல் மண்டபம் மற்றும் கோயிலை சுற்றிலும் 30 சென்ட் நிலம், அறநிலைத்துறையின் ஊழல் அதிகாரிகள் சிலரால் பல ஆண்டுகளுக்கு முன்பு மாத வாடகையாக வெறும் ரூ.32 நிர்ணயம் செய்து பலருக்கு கை மாற்றப்பட்டது. 1998 க்கு பின் வாடகை ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மீண்டும் புதிய நபர்களுக்கு வாடகைக்கு விட கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

தி.மு.க., மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினரும், மாநகராட்சி 82வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான செ.போஸ், பாலு, ராஜாராம், அருண், போஸ், மதுரை வீரன், ஜாபர், கதிரேசன், ராஜேந்திரன், ஐயப்பன், நாகராஜன், சீனிவாசன் ஆகியோருக்கு பல்வேறு காலகட்டங்களில் கோயில் நிர்வாகம் வாடகைக்கு விட்டது. கோயிலுடன் இணைந்த கல் மண்டபத்தில் தடுப்புச்சுவர் எழுப்பி, கல் மண்டபத்தில் நவீன கழிப்பறைகள், குளியலறைகளை கட்டி செ.போஸ் கட்டணம் வசூலித்தார். எனினும், கோயிலுக்கு செலுத்த வேண்டிய குறைந்தபட்ச வாடகையை செலுத்தவில்லை.

இவரை போலவே காலி இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு எடுத்த 11 பேரும் உள் வாடகைக்கு விட்டு கோயிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் ஏப்பம் விட்டு வந்தனர். இதில் செ.போஸ் மட்டும் ரூ.22 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். கோயில் இணை கமிஷனர் நடராஜன் கோயில் இடத்தை உள் வாடகைக்கு விட்ட 12 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்தார். நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிலத்தில் இருந்து காலி செய்யும்படி, நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் ஆசாமிகள் அசரவில்லை. கோயில் நிர்வாகம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டது.

கல் மண்டபம், கடைகளை காலி செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விளக்குத்துாண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி, எஸ்.ஐ.,க்கள் பாண்டிராஜன், கண்ணன் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் நேற்று கல் மண்டபம் மற்றும் கடைகள் காலி செய்யப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. கோயில் இணை கமிஷனர், உதவி கமிஷனர்கள் முல்லை, விஜயன் உடனிருந்தனர்.

கல் மண்டபத்தை புனரமைப்பு செய்து மீண்டும் கோயிலுடன் இணைத்து தர்ப்பணம் செய்ய பயன்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. செ.போஸ் உள்ளிட்டோரிடம் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்க அவர்களது சொத்துக்களை நீதிமன்றம் மூலம் பறிமுதல் செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து செ.போஸிடம் விளக்கம் கேட்பதற்காக அவரது அலைபேசியை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.

Exit mobile version