உங்களுக்கு தெரியுமா இன்று நிழல் இல்லாத நாள்! கொடைக்கானல், திண்டுக்கல்லில் இன்று நிகழும் அதிசியம்!

சூரியஒளியினால் உண்டாகக் கூடிய ஒரு பொருளின் நிழலைக் கொண்டு நம்மால் சூரியனின் இயக்கம், சூரிய ஆரம், பூமியின் நேரம், நாம் இருக்கக்கூடிய இடத்தின் அட்சரேகை அமைப்பு ஆகியவற்றை கண்டறியலாம்.

பொதுவாக, சூரியனால் உருவாகும் ஒரு பொருளின் நிழல் சூரிய உதயத்தில் அதிக நீளத்தோடு இருக்கும். இந்த நிழலானது நீளத்தில் குறைந்து கொண்டே வந்து உச்சி வேளையில் மிகக்குறைந்து, பின் மீண்டும் சூரியன் மறையும் வரை வளர்ந்து அதிகமாகிக் கொண்டே செல்லும்.

ஆனால், ஓர் வருடத்தின் இரண்டு நாட்களில் மட்டும் பொருளின் நிழலானது அப்பொருளுக்கு மிகச் சரியாக கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலைக் உச்சி மதிய வேளையில் கூட காண இயலாது. அந்த நாட்கள் நிழல் காணஇயலா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்றழைக்கப்படுகிறது.

கொடைக்கானல், திண்டுக்கல்லில் நிழல் இல்லாத நாளை இன்று காண முடியும் என கொடைக்கானல் வானியற்பியல் மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையத்தின் விஞ்ஞானி எபினேசர் கூறியதாவது:
நிழல் இல்லாத நாள் என்பது பூமியின் சுழல் பாதையை புரிந்து கொள்வதற்கான நாளாகும். கொடைக்கானல், பெரியகுளத்தில் இன்று மதியம் 12.22 மணிக்கும், திண்டுக்கல்லில் 12.20 மணிக்கும், ஆகஸ்ட 27 மதுரையில் 12.19 மணிக்கும், தேனியில் 12.22 க்கும், சிவகங்கையில் 12.18 மணிக்கும், திருநெல்வேலியில் ஆக.,30 12.20 மணிக்கும், கன்னியாகுமாரியில் செப்டம்பர்1 ல் 12.20 மணிக்கும் நிழல் இல்லாத சூரியனை காணமுடியும்.

கொடைக்கானலில் அட்சரேகை 10 டிகிரியில் இன்று 13 நிமிடங்கள் சூரியன் நேர் உச்சியில் வருவதால் நமது நிழல் பூமியில் விழாது. சுற்றுகிற பம்பரம் நிற்பதற்கு தலையை ஆட்டுவது போல் பூமி 23.5 டிகிரி கோணச்சரிவில் நீள்வட்டப்பாதையில் சூரியனைசுற்றுகிறது. இதனால் பருவ காலம் ஏற்படுகிறது.

இதில் ஆண்டில் இருமுறை நமக்கு நேர் உச்சிக்கு வரும்போது நிழல் இல்லாத நாள் நிகழ்வு நடைபெறும். மேலும் இதுகுறித்த சிறந்த புகைப்படங்களுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது. அதனை இணைய தளமான outreach@iiap.res.in என்ற முகவரியில் அனுப்பலாம், என்றார்.

Exit mobile version