பிளவுவாதத்தை முன் நிறுத்துகிறதா குடியுரிமை திருத்தச் சட்டம்.. எளிய விளக்கம்.! காங்கிரஸ் ஆட்சி vs மோடி ஆட்சி!

CAA

Citizenship (Amendment) Act, 2019

குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு அமல்படுத்தியது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது.

பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது.அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது.

கடந்த 1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.இந்தச் சட்டத்தில் திருத்தத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் .மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த சட்டத்தில் உள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். ஒன்று அரசே இஸ்லாமிய அரசாக இருக்கிறது, அல்லது அங்கு இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை, அதற்காக இயற்றப்பட்ட சட்டம் இதில் எங்கிருந்து வருகிறது சமூக பிளவு?

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் பயன் அடைந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?
1972 முதல் 1991ஆம் ஆண்டு வரை வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்த மக்கள் எத்தனை பேர் என்று பார்ப்போம். வங்கதேசம் – 11,97,299 பாகிஸ்தான் – 1,40,271 ஆப்கானிஸ்தான் – 7,788 என சுமார் 13,45,358 பேர் இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்தனர்.

1992 முதல் 2011ஆம் ஆண்டு வரை வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்த மக்கள் எத்தனை பேர் என்று பார்ப்போம். வங்கதேசம் – 4,41,914 பாகிஸ்தான் – 81,459 ஆப்கானிஸ்தான் – 5,808 என மொத்தமாக 5,29,180 பேர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். இப்படியாக கடந்த 1972 – 2011 வரையிலான 40 ஆண்டுகளில் சுமார் 18.7 லட்சம் மக்கள் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் அடைக்கலம் தேடி வந்துள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த 2014 ஆண்டு வரையில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்த 566 இஸ்லாமிய மக்களுக்கும் அதன்பின் 2016 – 2018 ஆண்டு காலகட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் 1,595 பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் 391 ஆப்கானிஸ்தான் இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது என்று ஜனவரி 2020ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறி இருந்தார் என்பது குறித்தும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்.

ஆக, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதிப்பும் இல்லை. இந்தியாவில் இருந்து யாரும் வெளியேற்றப்படப் போவதும் இல்லை என்பது தான் உண்மை.

Exit mobile version