ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா? தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

கூட்டாட்சி முறை அல்லது ஒற்றையாட்சி முறை என்று, அரசியலமைப்பில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பில், மத்திய அரசு சில அதிகாரங்களைக் கொண்டு, நாடு முழுமைக்கும் அதை செயல்படுத்துகிறது.

அந்நாட்டில் இருக்கும் மாநில அரசு கள், அந்த மாநிலத்திற்குள் தங்கள் அதிகார வரம்பைக் கொண்டுள்ளன. ஒற்றையாட்சி முறையில், பெரும்பாலான அல்லது அனைத்து ஆட்சி அதிகாரங்களும், மத்திய அரசின் வசம் இருக்கும். இந்தியாவில் இருப்பது கூட்டாட்சி முறை.

அமெரிக்கா உண்டான விதம்

அமெரிக்காவில், பல மாகாணங்களாக பிரிந்து இருந்தவை, ஒரு வலிமையான அரசாக மாறுவதற்காக ஒன்றாகச் சேர்வது என்று முடிவு செய்தன. அதற்கு ஒவ்வொரு மாகாணமும் ஒப்புதல் அளித்தன. தங்கள் மாகாணங்களில் நடைமுறையில் இருந்த அவரவர் அரசியலமைப்பு சட்டம், ஒன்றிணைந்த நாட்டிற்கு சரி வராது என்று உணர்ந்தன.

இருக்கும் அரசியலமைப்பு சட்டங்களை திருத்துவதை விட, முற்றிலும் வேறு விதமாக சட்டங்களை எழுத முடிவெடுத்தன. இப்படி மாற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டமே, அமெரிக்கா என்ற ஒன்றிணைந்த மாகாணங்களின் கூட்டமைப்பான, ஒரு நாட்டை உருவாக்கியது. இப்படி உருவான தேசம் அல்ல இந்தியா.

ஒன்றான இந்தியா

கடந்த 1947ல் சுதந்திரம் பெற்ற போது, இந்தியாவில் 571 தனித்தனி ராஜாக்களால் ஆளப்பட்டு வந்த ராஜதானிகள் என்ற மன்னராட்சி பரப்புகள் இருந்தன. சர்தார் வல்லபபாய் படேலின் பெருமுயற்சியால் அவை ஒன்றிணைக்கப்பட்டு, 27 மாநிலங்களாக உருவாகின. அந்த நேரத்தில், மாநிலங்களின் சேர்க்கையானது, மொழி அல்லது கலாசார வேற்றுமைகளை விட, அரசியல் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் செய்யப்பட்டது. ஆனால், இது ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருந்தது.

பன்மொழி இயல்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையில் இருந்த வேறுபாடுகள் காரணமாக, மாநிலங்கள் நிரந்தர அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை இருந்தது. அமெரிக்கா போன்று இந்தியாவின் ஒவ்வொரு ராஜதானியும், தனக்கென ஒரு அரசியலமைப்பு சட்டத்தை கொண்டிருக்கவில்லை. இந்த ராஜதானிகள் ஒன்றாக கூடி, ஒரு வலிமை யான நாட்டை உருவாக்குவோம் என்றும் ஒன்று சேரவில்லை.

இந்தியாவை ஒன்றாக்கியது, பாரத நாட்டின் விடுதலை உணர்வும், ‘மக்களாட்சியை கொண்டு வர வேண்டும்’ என்று அப்போது இருந்த தலைவர்களின் நினைப்புமே. பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த பெரும் நாட்டை, அத்தலைவர்களின் பெருமுயற்சியே மறுபடியும் ஒரு நாடாக மாற்றியது.

கடந்த 1946ல் அரசியலமைப்பை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட பார்லிமென்டும், இப்போது இருக்கும் பார்லிமென்டும் வேறுபட்டவை. அப்போது இருந்த ராஜதானிகள், பகுதி ஏ, பி, சி, டி, என்று பிரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15, 1947 அன்று நடைமுறைக்கு வந்தன.

பின், அடுத்த மூன்றாண்டுகளில், சட்ட மேதை அம்பேத்கர் போன்றவர்களால் நம் அரசியலமைப்பிற்கு ஒரு சரியான வடிவம் கொடுக்கப்பட்டது. 1948ல் அமைக்கப்பட்ட கலந்தாய்வும், அன்றைய தலைவர்களின் தலையீட்டாலும், மொழிவாரி மாநிலமாக இந்த நாடு பிரிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

உருவான தமிழகம்

கடந்த 1956 ஆகஸ்ட் 31ல் இயற்றப்பட்டு, 1956 நவம்பர் 1ல், மாநில மறுசீரமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. ‘மெட்ராஸ் பிரசிடென்சி’ என்று வழங்கி வந்த பகுதி, மெட்ராஸ் மாநிலம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி – யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.கடந்த 1962ல், தனி திராவிட நாடு கேட்டு, ராஜ்யசபாவில் அண்ணாதுரை பேசினார்.

மாநிலங்களவைக்கு அப்போது தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தியா என்ற நாடு எது என்பதை பற்றி ஒரு உரை நிகழ்த்தினார். இந்த நாட்டின் மேன்மையும், வளர்ச்சியும், அதன் ஒற்றுமையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். மேலும், தேச பக்தர்கள் பலர் தங்கள் இன்னுயிரை கொடுத்தது, ஒரு பிராந்தியத்தின் சுதந்திரத்திற்காக அல்ல; நாட்டின் சுதந்திரத்திற்காக என்றும் அவர் கூறினார்.

அதுபோல, 1962ல் சீன போர் மூண்ட நேரத்தில், ஒரு பலமான இந்தியா இருந்தால் தான், வளமான தமிழகம் இருக்க முடியும் என்பதை உணர்ந்த அண்ணாதுரை, திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார்.கடந்த 1967ல், அப்போதைய மாநில அரசு, இந்த மாநிலத்தின் பெயரை, ‘மெட்ராஸ்’ என்றிருந்ததை, ‘தமிழ்நாடு’ என்று மாற்றியது. அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என்ற பெயர் அப்போது நடைமுறைக்கு வந்தது.பின், மாநில தலைநகரான மெட்ராஸ், 1996ல், தெலுங்கு ஆட்சியாளர் சென்னப்பாவின் நினைவாக, ‘சென்னை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அழியாத கூட்டாட்சி

இந்தியாவை, ‘அழியாத கூட்டாட்சி’ என்று அம்பேத்கர் சொல்கிறார். இதன் அர்த்தம் என்ன என்றால், ஒரு நேசமைப்பு அல்லது தளர்வான கூட்டமைப்பால் ஆன கூட்டாட்சி போல, எந்தவொரு இந்திய மாநிலமும், இந்தியாவில்இருந்து பிரிந்து செல்ல முடியாது. ஆனால், மறுபுறம், அரசியலமைப்பின் பிரிவு 3ல் காணப்படுவது போல, எந்தவொரு மாநிலத்திற்கும் அழிந்து போகக்கூடிய, மாற்றப்படக்கூடிய தன்மை உள்ளது.

அதை செய்யும் அதிகாரம் கூட்டாட்சிக்கு உள்ளது.இது, மக்கள் தங்கள் சொந்த மாநிலத்தை உருவாக்குவதற்கு இடமளிப்பதற்கும், நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பராமரிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.

பிரிவு 3 சொல்வது என்ன?

1 மாநிலத்தின் பெயர், எல்லைகள் மற்றும் பிரதேசங்களை மத்திய அரசால் மாற்ற முடியும்.

2 அதைச் செய்ய, அந்த மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை. எடுத்துக்காட்டு: தெலுங்கானா மாநில உருவாக்கம்.

அமெரிக்கா – இந்திய அரசியலமைப்பு வேறுபாடுகள்

1 அமெரிக்காவில் உள்ள மாகாணங்களை போல, இந்திய மாநிலங்களுக்கு தங்களை பிரித்துக் கொள்ள அதிகாரங்கள் இல்லை.

2 அமெரிக்காவை போல, இந்தியாவில் ‘அழிக்க முடியாத மாநிலங்கள்’ என்ற கருத்து இல்லை.

3 இந்திய கூட்டாட்சிக்கு அத்தகைய சக்தி இருந்தாலும், நியாய மான காரணங்கள் இல்லாமல், அதிகாரத்தைப் பயன்படுத்துவதை அரசியலமைப்பு குறிக்கவில்லை.

4 மேலும் மத்திய அரசிற்கும், மாநிலங்களுக்கும் உள்ள உறவு பற்றி, அரசியலமைப்பு சட்டம் பிரிவு 246(4), ‘இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் எந்தவொரு விஷயத்திற்கும் சட்டங்களை உருவாக்க பார்லிமென்டிற்கு அதிகாரம் உண்டு’ என்றும் சொல்கிறது.

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 246, மத்திய அரசிற்கும், மாநிலங்களுக்கும் உள்ள உரிமைகளை பட்டியலிடுகிறது. மாநிலங்களுக்கு விவசாயம், தொழில் துறை, மீன் வளம், சுரங்கம், காவல் துறை முதலான, 66 விதமான உரிமைகளை பட்டியலிடுகிறது.இவை யாவையும் கொண்டே, எந்தவொரு மாநிலமும் நல்ல முன்னேற்றம் அடைய முடியும்.

மேலும், ராணுவம், அதன் சார்ந்த நிறுவனங்கள், நாட்டின் வெளியுறவு, ரயில்வே, துறைமுகம், நாட்டின் பாதுகாப்பு போன்ற முக்கியமான உரிமைகளை மத்திய அரசு தன்னிடம் வைத்துள்ளது. தேச நலன் காக்க, இந்தியாவின் இறையாண்மையை போற்ற, ஒவ்வொரு மாநிலமும் முன்னேற்ற பாதையில் வேகமாகச் செல்ல, இந்த உரிமைகளில் இருக்க வேண்டிய வேறுபாடு எளிதில் விளங்கும்.

இப்போது மட்டும் ஏன் ஒன்றியம் என்ற சொல் ?

பிரதமர் மோடி, இதற்கு முன் இருந்த எந்த பிரதமரை விடவும் தமிழகத்தையும், அதன் கலாசாரத்தையும், அதன் இலக்கியத்தையும், அதன் சான்றோர்களின் பெருமையையும், தமிழர்களின் தனி குணங்களையும் உலகமெங்கும் பறைசாற்றி வருகிறார்.தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி, பல தமிழர்களின் வாழ்வில் நன்மைகளை சேர்த்திருக்கிறார்.பெண்களுக்கான திட்டங்கள், தொழில் துவங்குவோருக்கான திட்டங்கள், மாநிலத்தின் உரிமைகள் என எல்லாவற்றிற்கும் துணை நின்று வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.கருணாநிதி எதிர் இந்திய யூனியன் என்ற வழக்கில், ‘அமெரிக்க அரசியலமைப்பின் சூழலில் பயன்படுத்தப்படும் கூட்டமைப்பு அல்லது சுயாட்சி போன்ற சொற்களின்அர்த்தத்தை, நம் அரசியலமைப்பிற்கு பயன்படுத்துவது முற்றிலும் நம்மை தவறாக வழி நடத்தும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘சார்பற்ற, தனி இறையாண்மை அல்லது தன்னாட்சி கொண்ட மாநிலங்கள், சில படி நிலைகளின் அடிப்படையில், கூட்டமைப்பில் இணைந்தன என்று கூறுவது பயனற்றது’ என்றும் கூறுகிறது.’அத்தகைய எந்தவொரு மாநிலமும் இதுவரை இல்லை அல்லது கூட்டமைப்பில் எந்தவொரு மாநில மும் அப்படி சொல்லி சேரவும் இல்லை’ என்று, அந்த வழக்கின் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதி தலைமையிலான மாநில அரசு, 2006 முதல், 2011 வரை, காங்கிரஸ் ஆளும் போது, ‘மத்திய அரசு’ என்றே கூறி வந்தது.இப்படியிருக்க, ‘ஒன்றியம்’ என்று இப்போது திடீரென்று கூறுவதும், ‘ஜெய்ஹிந்த்’ என்று சொல்ல கூசுவதும் எதனால்… இதன் மூலம் இவர்கள் சாதிக்க நினைப்பது என்ன?

கொரோனா காலகட்டத்தில் தேவையற்ற சர்ச்சையை கிளப்பி, தங்கள் இயலாமையை மறைக்கப் பார்க்கின்றனரா? இந்திய மாநிலங்களால் ஒருபோதும் தனிநாடோ, தான் விரும்பும்படி மாநில எல்லைகளையோ உருவாக்கிக் கொள்ள முடியாது. அரசியலமைப்பு சட்டப்படி, எந்தவொரு மாநிலத்திற்கும் அதற்கான அதிகாரம் இல்லை.அந்த அதிகாரம், மத்திய அரசுக்குத் தான் உள்ளது. மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளால், அவர்கள் தாங்கள் விரும்பும் முன்னேற்றப் பாதையில் மட்டுமே செல்ல முடியும்.

நல்ல திட்டமிடுதலால், செயல் திறனால், மக்கள் நலன் பொருட்டு, மத்திய அரசுடன் சேர்ந்து உழைப்பதால், நாம் தமிழகத்திற்கு நல்ல பல விஷயங்களை செய்ய முடியும்.தமிழக ஆட்சியாளர்களின் வெறுப்பால், தவறான சித்தாந்தங்களால் தமிழக மக்கள் சிக்கல்களை சந்திக்கக் கூடாது.இந்த கொரோனா காலகட்டத்தில், செல்ல வேண்டிய துாரமும், அடைய வேண்டிய இலக்குகளும் கண் முன் தோன்ற வேண்டுமே தவிர, மக்களை குழப்பும், வெறுப்பை வளர்க்கும் சொற்கள் தேவையில்லை.

அமெரிக்கா போன்று பல மாகாணங்கள், தங்கள் நலன் காக்க சேர்ந்த நாடு இல்லை இந்தியா. சுதந்திர வேள்வியில் உருவாகி, மக்களாட்சியில், மாநிலங்களின் ஒற்றுமையில் நிற்கும் ஒரு உன்னத நாடு இந்தியா!ஜெய்ஹிந்த்.

கே.அண்ணாமலை, மாநில பா.ஜ.க துணை தலைவர்

Exit mobile version