பகுத்தறிவு பற்றி பேசும் ’தி-ஸ்டாக்கிஸ்டுகளை’ சம்பவம் செய்த டாக்டர்.கிருஷ்ணசாமி !

பகுத்தறிவு பற்றி பேசும் ’தி-ஸ்டாக்கிஸ்டுகள்’,தமிழகத்தில் நியூட்ரினோ அறிவியல் பகுத்தாய்வு மையம் அமைவதை எதிர்ப்பது ஏன்? தேனி மாவட்டம் – போடி அருகே பொட்டிபுரத்தில் அமைய உள்ள INO என்றழைக்கப்படும் ’INDIAN NEUTRINO OBSERVATORY’ ஆய்வகத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நியூட்ரினோ அணுத்துகளை பற்றியோ, பிற நாடுகளில் உள்ள ஆய்வகங்களை பற்றியோ சிறிதும் கூட ஆய்வு செய்யாமல் மத்திய அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ’புலிகள் சரணாலயம்’ என வரட்டுத்தனமாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

நியூட்ரினோ ஆய்வகங்கள் உலகத்தில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே உண்டு. அதற்கு அடுத்தபடியாக அரிய வாய்ப்பாக இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் 1500 கோடி மதிப்பீட்டில் அமைய வாய்ப்பு கிடைத்துள்ளது; அதற்கும் முட்டுக்கட்டை போட ஆரம்பித்து விட்டார்கள்பெரிய திட்டம் ஒன்று வருகின்ற பொழுது அதனுடைய முழு தன்மையையும் – சாதக பாதகங்களையும் தெளிவாகத் தெரியாத காரணத்தினால் அவைகள் அமைய உள்ள பகுதிகளைச் சார்ந்த மக்கள் தங்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று அச்சத்தில் எதிர்ப்பது என்பது நியாயம். ஆனால், அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக சிலர் எதிர்ப்பது என்பது எவ்விதத்தில் நியாயம்?

தமிழகத்தில் ஜனநாயகம் என்ற பெயரில் மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் எதிர்ப்பது என்ற கொள்கை கொண்ட சில இயக்கங்கள் நியூட்ரினோ ஆய்வகம் அமைவதையும் எதிர்க்கிறார்கள்.தேனி மாவட்டம், போடியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொட்டிபுரம் என்ற கிராமத்திற்கு அருகே உள்ள மலைப்பகுதியில் தான் இந்த ’நியூட்ரினோ ஆய்வு மையம்’ அமைய உள்ளது. பெயரிலேயே அதனுடைய தன்மை என்ன என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. ’Neutral’ என்றால் ’நடுநிலை அல்லது சமநிலை’ என்று பொருள்.

நியூட்ரினோ என்றாலும் அதே பொருள் தான். 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் அணு மட்டுமே பிரிக்கவே முடியாத ’கடைசி மூலக்கூறு’ என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், அந்த அணுவுக்குள்ளும் 12-க்கும் மேற்பட்ட அணுத்துகள்கள் (Atomic Particles) இருப்பதை படிப்படியாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அணுவைப் பிளக்க முடியும் எனவும், அணுவைப் பிளந்ததன் மூலம் அதிலுள்ள சிறிய துகள்கள் என்ன என்பதையும், அதன் ஆற்றல்கள் என்ன? என்பதையும் கண்டுபிடித்தார்கள். இன்று மருத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றங்களுக்கு இத்தகைய கண்டுபிடிப்புகளே காரணம்.உலகத்தில் தொன்றுதொட்டு மனிதர்களுடைய ஆர்வம் இரண்டு கேள்விகளை முன் நிறுத்தியே இருக்கிறது. ஒன்று, இந்த உலகம் அல்லது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? எப்போது தோன்றியது? எதிலிருந்து தோன்றியது? என்பதற்கான தேடல்.

இரண்டாவது, உலகிலுள்ள உயிரினங்கள் எப்படித் தோன்றின? இவைகளுக்கு விடை காண்பதற்காகவே மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது மண்டையைப் போட்டு குழப்பி ஆய்ந்து வருகிறார்கள்; விடையை நோக்கி ஆய்வுகள் தொடர்கின்றன.நாம் வாழக்கூடிய பூமியாகட்டும் அல்லது சூரிய குடும்பமாகட்டும் அல்லது பால்வழியாகட்டும் (Milky-Way) அதில் உள்ள கோடான கோடி சூரிய குடும்பங்கள் அனைத்துமே மிக மிக நுண்ணிய பருப்பொருட்களாலும் (matter), அதனோடு பின்னிப்பிணைந்து இருக்கக்கூடிய ஈர்ப்பாற்றல் (Gravity Force) அல்லது இயக்கத்தால் (matter energy) மட்டுமே அமைந்திருக்கின்றன.

நாம் வாழும் பூமி எப்படித் தோன்றியது? சூரிய குடும்பம் எப்படித் தோன்றியது? இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? என்று அறிந்து கொள்வதற்கான ஆராய்ச்சியின் ஒரு ஆய்வகமே போடி அருகே அமைய உள்ள ’நியூட்ரினோ ஆய்வு மையம்’ (INO) ஆகும். இது எவ்வித கதிர்வீச்சோ, மின்னாற்றலோ அற்றது. அதனால் எவ்வித பாதிப்பும் கிடையாது.ஒவ்வொரு அணுவுக்குள்ளும் புரோட்டான் (PROTON), எலக்ட்ரான் (ELECTRON), நியூட்ரான் (NEUTRON) என்ற மிக முக்கியமான மூன்று மூலக்கூறுகள் உண்டு. புரோட்டான் அணுவின் மையப் பகுதியில் உள்ள கருப்பகுதியாகும் (Nucleus). அதற்கு நேர் காந்த அல்லது மின்னாற்றல் (+) உண்டு.

புரோட்டானை சுற்றி வருகின்ற எலக்ட்ரான் என்ற அணுத்துகளுக்கு எதிர் காந்த மின்னாற்றல் (-) கொண்ட கூறு ஆகும். நியூட்ரான் எவ்வித மின்னாற்றலற்ற நடுநிலைத் தன்மை ’neutral’ கொண்டதாகும். இதுபோன்று 12-க்கும் மேற்பட்ட துகள்கள் அணுவில் உண்டு. அதில் ஒன்றுதான் மின் ஆற்றலற்ற நியூட்ரினோ துகள் (NEUTRINO) ஆகும்.நமக்கு சூரியனிலிருந்து ஒளி வருகிறது. அது வெப்பத்தோடும் சேர்ந்து வருகிறது. அதேபோல சூரியனுக்கு அப்பாலுள்ள நட்சத்திரங்களிடமிருந்தும் ஒளி வருகிறது. ஆனால், அதனுடைய தூரம் மிக மிக அதிகம் என்ற காரணத்தினால், வெப்பம் நம்மை வந்து அடைவதில்லை. ஆனால், இந்த பிரபஞ்சம் முழுமைக்கும் எல்லா இடங்களிலும் பரவலாக உள்ள ஒரு அணுத்துகள் ’நியூட்ரினோ’. மிக மிகச் சிறிய அளவிலான எடை (நிறை) மட்டுமே கொண்டது ஆகும்.

எனவே தான், ஒளி புக முடியாத பொருட்களுக்குள்ளும் கூட ’நியூட்ரினோ துகள்கள்’ எளிதில் ஊடுருவிச் சென்று விடுகின்றன.நமது உடலில் ஏற்படும் நோயின் தன்மைகளை அறிவதற்காக எக்ஸ்-ரே எடுப்போம். எக்ஸ்-ரே கதிர்கள் சிதறும் தன்மை கொண்டவை. எக்ஸ்-ரே டெக்னீசியன்களின் உடலில் அவை ஊடுருவி அவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் உண்டாக்கி விடக் கூடாது என்பதற்காக ’காரீயம்’ (lead) என்ற உலோகத்தாலான ஆடையை உடுத்தி தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால், நம்முடைய கதாநாயகனான ’நியூட்ரினோவோ’ எக்ஸ்-ரே கதிர்கள் நுழைய முடியாத காரீய (lead) உலோகத்திற்குள்ளும், பாறைக்குள்ளும் கூட ஊடுருவிச் சென்று விடும். அந்த அளவிற்கு அது மிக மிக நுண்ணியது.

ஆனால், ஆபத்தானது அல்ல.அண்டம் முழுமைக்கும் இந்த நியூட்ரினோ துகள்கள் வினாடிக்கு 100 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி நியூட்ரினோக்கள்) தினமும் நமது உடம்பின் வழியாக உள்ளே சென்று வெளியே செல்கின்றன. அப்படி என்றால் நமது வாழ்நாளில் எத்தனை கோடான கோடி நியூட்ரினோக்கள் நமது உடலுக்குள் சென்று வெளியே செல்லும் என்பதை நாம் யூகித்துப் பார்க்கவேண்டும். ஒரு வினாடிக்கு 100 லட்சம் கோடி நியூட்ரினோக்கள் வீதம் நாம் வாழ்நாளெல்லாம் உடம்பிற்குள் சென்றும் கூட இதுவரையிலும் நமது உடலில் எவ்வித பாதிப்பையும் உண்டாக்காத அச்சிறிய நியூட்ரினோ துகள்கள் ஆய்வின் போது மட்டும் என்ன பாதிப்பை ஏற்படுத்தி விடப் போகிறது?

அது நமக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள எந்த உயிரினங்களுக்கும் எவ்விதமான பாதிப்பையும் உண்டாக்காது. நாம் நியூட்ரினோவுடன் பிறந்து, அதனுடனேயே வாழ்ந்தும் வருகிறோம்.அந்த அதிசயத்தக்க அணுத்துகள்களின் தோற்றம் என்ன? அது என்ன தான் இந்த பிரபஞ்சத்தில் செய்கிறது? (Origin and Properties) என்பதை கண்டறிவது தான் நியூட்ரினோ ஆய்வகங்களின் நோக்கமாகும். இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? என்பது குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் உண்டு. அதில் ஒன்று பெருவெடிப்பு (Big Bang) அதாவது இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பாக, அணுகுண்டை போன்று ஒன்று வெடித்துச் சிதறி கோடான கோடி நட்சத்திரங்களாகவும், பால்வழி அண்டங்களாகவும் மாறி இருக்கின்றன என்பது ஒரு கோட்பாடு. அந்த பெருவெடிப்புக்கே இந்த நியூட்ரினோதான் காரணமா? நியூட்ரினோவின் மூலம் தான் என்ன?

என்பதை கண்டறியும் நோக்கத்திலேயே உலகெங்கும் மிக முக்கியமான நாடுகளில் மட்டும் இதற்கான ஆய்வகங்கள் இருக்கின்றன. அந்த ஆய்வகத்தில் ஒன்றுதான் தேனி பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகம்.நியூட்ரினோ ஆய்வு மையம் தரையிலே அமையக் கூடியது அல்ல. மலையின் முகட்டிலிருந்து கீழே 1.2 கி.மீ ஆழத்தில் தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டி, 120 மீட்டர் நீளத்தில், 36 மீட்டர் அகலத்தில் ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். எனவே, இந்த ஆய்வகத்திலிருந்து வேறு எவ்வித கதிர்வீச்சும் வெளியே சென்று மக்களுக்கோ, கால்நடைகளுக்கோ, வேறு உயிரினங்களுக்கோ, வன விலங்கினங்களுக்கோ எவ்விதமான பாதிப்பையும் உண்டாக்கப் போவதில்லை.நியூட்ரினோ ஆய்வகம் அமையக்கூடிய பகுதி தரையிலிருந்து மிக ஆழத்தில் அமைகின்ற காரணத்தினால் அப்பகுதி மக்களின் விவசாயத்திற்கோ, நீர் நிலைகளுக்கோ கூட எவ்வித இடையூறும் ஏற்படப்போவதில்லை. அதேபோல உலகம் முழுவதும் பெரும் நகரங்களில் பூமிக்கு அடியில் தானே மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன. அதற்கு மேலே மக்கள் வாழ வில்லையா? போக்குவரத்துகள் இயங்க வில்லையா?

ஆனால், இந்த நியூட்ரினோ ஆய்வகத்திற்கு மட்டும் ஏன் அஞ்ச வேண்டும்? இது போன்ற திட்டங்கள் வருகின்ற பொழுது அது மத்திய அரசோ, மாநில அரசோ அதற்கான முன்னேற்பாடுகளை முழுமையாகச் செய்வதில்லை.குறிப்பாக ஆய்வக திட்ட அதிகாரிகள் அந்த திட்டங்களின் உண்மைத்தன்மையை மக்களிடத்தில் எடுத்துச் சொல்வதே இல்லை. அதிகாரிகள் மக்களைச் சந்திப்பதற்கு அஞ்சி ஓடி விடுகின்றனர். எனவே திட்டத்தின் சாதக அம்சங்களை முறையாக எடுத்துச் சொல்வதற்கு முன்பாகவே எதிர்க் கருத்துக்கள் அதிகம் பரப்பப்பட்டு விடுகின்றன. தமிழகத்தினுடைய பல திட்டங்கள் அவ்வாறுதான் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

அதை நிறுத்தியவர்கள் பெரும்பாலும் அந்நிய நாட்டிலிருந்து நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களாகவோ அல்லது வேறு ஏதாவது விதத்தில் அத்தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களாகவோ மட்டுமே இருக்கின்றனர். அவர்கள் தேச நலனைக் கணக்கில் கொள்ளாமல் குறுகிய எண்ணங்களுடனேயே செயல்படுகின்றனர்.இன்றும் நாம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்தனையில் வாழ்கிறோமே தவிர, இன்றைய சிந்தனையில் வாழ்வதே இல்லை. வேறு நாட்டவர் எதையாவது கண்டுபிடித்தால் அதை அனுபவிக்கத் தயாராக இருக்கிறோமே தவிர, நாம் புதிய கண்டுபிடிப்புகளுக்காக எந்த சிரமத்திலும் பங்கெடுக்க தயாராக இல்லை. அதன் காரணமாகவே நாம் இன்னும் பின்தங்கி இருக்கிறோம். இப்போது போடி – பொட்டிபுரத்தில் அமைய உள்ள ’நியூட்ரினோ ஆய்வு மையம்’ இந்த அண்டமே எப்படித் தோன்றியது? என்பதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு அரிய ஆய்வு மையம்.இதில் நாம் மட்டும் ஈடுபடப் போவதில்லை.

பல நாட்டு விஞ்ஞானிகளும் இங்கு வந்து அமர்ந்து ஆய்வு செய்யப் போகிறார்கள். இதில் ஏதாவது ஒரு சிறிய அளவிலான புதிய கண்டுபிடிப்பு கண்டறியப்பட்டால் கூட, அது சர்வதேச அளவில் பேசப்படக் கூடியதாகவும், அது தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கக் கூடியதாகவும் இருக்கும். உலகம் இந்தியாவை நோக்கி – தமிழகத்தை நோக்கி – தேனி, பொட்டி புரத்தை நோக்கித் திரும்பும். இது வெறும் நியூட்ரினோ ஆய்வுக்காக மட்டும் பயன்படப் போவதில்லை. அதையும் தாண்டி தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பன்முக ஆராய்ச்சி கூடமாகவும் பயன்படப் போகிறது. இப்போதே அங்கு பல மாணவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.தேனி நியூட்ரினோ ஆய்வகம் அமைவதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ’படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்” என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்ப திமுகவினர் பெரியாரைப் பற்றி, விஞ்ஞானத்தைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், பெரியார் பேசிய அறிவியலுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

திமுக அரசு முற்போக்கு பேசினால் மட்டும் போதாது. நடைமுறையில் முற்போக்காகவும் விஞ்ஞான ரீதியாகவும் இருந்திட வேண்டும். நியூட்ரினோ ஆய்வகம் முழுக்கமுழுக்க விஞ்ஞானத்தைச் சார்ந்தது. எந்த ஒரு நாட்டில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வருகிறதோ, விஞ்ஞானம் வளர்ச்சி அடைகிறதோ, அந்த நாடுதான் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முன்னேறும்; உலகளவில் ஆதிக்கம் செலுத்தும்.மாநில அரசுக்கு சில அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்திற்காகவே அதைத் தவறாகப் பயன்படுத்தி அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு விடக்கூடாது.தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே,அரசியல் அதிகாரத்திற்கான கூட்டணி அமைத்துக் கொள்ளுங்கள்!

அதற்காக அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும்கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து விடாதீர்கள்!பெரியார் – பகுத்தறிவு பற்றி பேசும் ’தி-ஸ்டாக்கிஸ்டுகள்’,தமிழகத்தில் நியூட்ரினோ அறிவியல் பகுத்தாய்வு மையம் அமைவதை எதிர்க்கலாமா?பகுத்தறிவு பேசினால் மட்டும் போதாது! பகுத்தறிவுடனும் செயல்பட முற்பட வேண்டும்!நியூட்ரினோ மீதான அச்சத்தைப் போக்க பொட்டிபுரம் மக்களிடத்தில் பேசுங்கள்!அறிவியல் ஆய்வுக்கூடம் தமிழகத்தில் அமைவதை ஆதரியுங்கள்!தமிழகம்-தேனி-போடியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய கரம் கொடுங்கள்.! உங்கள் எதிர்ப்பை கைவிடுங்கள்!

டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,நிறுவனர் – தலைவர்,புதிய தமிழகம் கட்சி.

Exit mobile version