குப்தாஸ் தாக்குதலிலும் குளிர் காயும் ’திராவிட ஸ்டாக்கிஸ்டுகள்’!! தாக்கப்பட்டது ’திராவிட ஸ்டாக்கிஸ்டுகள்’-க. கிருஷ்ணசாமி

நிறம் மாறியது; தரம் மாறவில்லை ! சமத்துவம் கிடைத்தது; சம தர்மம் கிடைக்கவில்லை!!
தென் ஆப்பிரிக்க கலவரம் இன ரீதியான போராட்டமா?குப்தாஸ் தாக்குதலிலும் குளிர் காயும் ’திராவிட ஸ்டாக்கிஸ்டுகள்’!!

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா அவர்கள் நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறிவிட்டார் என குற்றம் சுமத்தி தண்டிக்கப்பட்ட நாள் முதல் கடந்த 10 தினங்களாக அங்கு பெரும் கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும்; வெள்ளையினத்தவர் மற்றும் இந்திய வம்சாவளியினரது தொழில் நிறுவனங்கள் பெரும் சேதத்திற்கும், பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

காவல்துறை மற்றும் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடுகளாலும்; போராட்டக்காரர்களுக்கு எதிராக ’தற்காப்பு’ என்ற பெயரில் நடைபெற்ற தாக்குதல்களாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியர்களின் நிறுவனங்கள் சூறையாடப்பட்டது ஒரு பக்கம் வருத்தம் அளிக்கக் கூடியதாக இருந்தாலும், இந்திய வம்சாவளி வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களில் சிலர் கறுப்பின மக்களைச் சுட்டுக் கொல்வதும், அவர்களைப் பொதுவெளியில் அரைகுறை ஆடைகளுடன் அவமானப்படுத்துவதும் எவ்வகையிலும் ஏற்புடைய செயல் அல்ல.

தென்னாப்பிரிக்கா கறுப்பின மக்களின் பூர்வீக பூமியாகும். 1650-களில் டச்சுகாரர்கள் தென்னாப்பிரிக்காவை தன் வசம் வைத்திருந்த போதும், அது 1750-களில் ஆங்கிலேயர்கள் கைக்கு மாறிய பின்னரும், அந்நாட்டு கரும்பு தோட்டங்களிலும்; தங்கம், வைர சுரங்கங்களிலும் பணி புரிவதற்காக இந்தியத் தேசத்தின் தமிழ்நாடு, ஆந்திரா, உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற இந்திய பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு பணியமர்த்தப்பட்டார்கள். அம்மக்களின் வாரிசுகளே அங்குள்ள இன்றைய இந்தியத் தலைமுறையினர் ஆவர்.

தென் ஆப்பிரிக்காவை வளப்படுத்தியவர்களென்ற அடிப்படையிலும்; தங்களது வேர்களை மறந்து அந்நாட்டையே பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டவர்களென்ற அடிப்படையிலும் கறுப்பினத்தவர்களுக்கு சரி நிகராக எல்லா உரிமைகளையும் பெற இந்திய வம்சாவளியினருக்கும் உரிமை உண்டு. இந்தியாவிற்கு அடுத்தபடியாக இந்தியர்கள் அதிகம் வாழும் நாடு தென் ஆப்பிரிக்கா; அதை இரண்டாவது இந்தியா (Second India) என்றும் கூறுவர்.

அதேபோல பல தலைமுறைகள் தாண்டியும் மனங்கமழும் ’இந்தியர்கள்’ என்ற பெருமையோடு அம்மக்கள் வாழ்வதும் பெருமையே.கறுப்பின மக்களை டச்சுக்கரார்களும், ஆங்கிலேயர்களும் எவ்வாறு இன, நிற ரீதியாக ஒடுக்கினார்களோ, அதேபோல இந்தியர்களும் அன்றைய காலகட்டங்களில் எல்லை இல்லா ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகியுள்ளனர். 1800-களில் வெள்ளை இனவெறி ஆட்சி உச்சக்கட்டமாக இருந்த நேரத்தில் குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு அரங்கங்கள், உணவு விடுதிகள், பேருந்துகள், இரயில் போக்குவரத்துகள் உட்பட அனைத்திலும் வெள்ளையினத்தவர், கறுப்பினத்தவர், கலப்பினத்தவர் மற்றும் இந்தியர்கள் என தனித்தும் பிரித்துமே வைக்கப்பட்டு இருந்தனர்.

இதில் கடற்கரைகள் கூட தப்பவில்லை, வெள்ளையர்களுக்கென தனியாகக் கடற்கரைகளே உருவாக்கப்பட்டிருந்தன. பல நேரங்களில் கறுப்பினத்தவரைக் காட்டிலும் இந்தியர்களே அதிகமான துயரங்களைச் சந்திக்க வேண்டிய நிலை இருந்தது.அன்றைய காலகட்டத்தில் இக்கொடுமைகளையெல்லாம் கேட்டறிந்த இங்கிலாந்தில் ’பாரிஸ்டர்’ பட்டத்தை முடித்திருந்த காந்தியார் அவர்கள் 1893 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்குப் பயணமானார். இந்தியர்களின் மீதான நிற வெறிக்கு எதிராக போராடச் சென்ற ’பாரிஸ்டர்’ பட்டம் பெற்ற காந்தியார்அவர்களையே தென் ஆப்பிரிக்காவின் முக்கிய நகரான டர்பனிலிருந்து மற்றொரு நகரான பிரிட்டோரியாவுக்குச் செல்லும் இரயிலில் முதல் வகுப்பிற்கான பயணச்சீட்டு பெற்றிருந்தும் கூட ’இந்தியர்களுக்கு முதல் வகுப்பில் பயணம் செய்ய அனுமதி இல்லை’ என்று ஓடும் இரயிலிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டு, அவரும் நிற வெறிக்கு ஆளானார்.

ஒரு வருடத்திற்கு ஒப்பந்தத்தில் மட்டுமே பணியாற்றச் சென்ற காந்தியார் அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட அந்த அவமானத்தைச் சவாலாக ஏற்றுக் கொண்டு தொடர்ந்து 1893 ஆம் ஆண்டிலிருந்து 1914 ஆம் ஆண்டு இந்தியா திரும்பும் வரை வரை ஏறக்குறைய 21 ஆண்டுக் காலம் அங்கேயே தங்கி தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் உரிமைகளை மீட்டெடுக்கத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அவர் மட்டுமல்ல இந்தியர்களுக்கு எதிரான நிற வெறியை ஒழித்திட ’தில்லையாடி வள்ளியம்மை’ என்ற பெண்மணி போன்றவர்கள் போராடிய வரலாறுகளையும் நாம் அறிவோம்.

தென் ஆப்பிரிக்கா இயற்கை வளங்களை மிக அதிகமாகக் கொண்டது; அது மட்டுமின்றி தங்கம், வைரம் போன்ற கனிம வளங்களையும் மிதமிஞ்சிக் கொண்டிருந்த நாடு. தென் ஆப்பிரிக்காவின் ’கிம்பர்லி’ இன்றுவரை பிரசித்தி பெற்ற வைர சுரங்கமாகும். இவ்வளவு வளமிக்க அந்த நாட்டின் மக்கள் தொகையில் 90% பேர் பூர்வீக கறுப்பின மக்கள் ஆவர். 4% பேர் இந்திய வம்சாவளியினர், 4% பேர் கலப்பின மக்கள், எஞ்சியுள்ள 2% பேர் மட்டுமே வெள்ளையினத்தை சார்ந்தவர்கள் ஆவர். ஆனால் அந்த 2% வெள்ளையர்களிடத்தில் தான் தென் ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி விளைநிலங்களும்; விலை மதிப்பற்ற தங்கம், வைர சுரங்கங்களும்; நாட்டின் அதிபர் முதல் அடிமட்டம் வரை ஆட்சி அதிகாரங்களும் இருந்தன.

ஆப்பிரிக்கன் தேசிய காங்கிரஸ்(ANC), கம்யூனிஸ்ட் கட்சிகள், இங்கிதா போன்ற அமைப்புகள் தொடர்ந்து நடத்திய போராட்டங்கள்; கறுப்பின மக்களின் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களின் 27 ஆண்டுகள் சிறைவாசம்; இந்தியா உட்பட பல உலக நாடுகளின் பொருளாதார பகிஷ்கரிப்பு ஆகியவற்றின் காரணமாக அன்றைய பிரதமராக இருந்த டி-கிளார்க் அவர்கள் நெல்சன் மண்டேலா அவர்களை விடுதலை செய்யவும், தென் ஆப்பிரிக்காவிற்கு முழு சுதந்திரம் அளிக்கவும் முன் வந்தார்.

இனவெறிக்கு எதிராக நெல்சன் மண்டேலா அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு நீதி மன்றத்தில் அவர் தனக்காக வாதாடிய போது, தான் செய்த செயலை மறுக்காமல் ’தன்னை காலம் விடுதலை செய்யும்’ என்று முழங்கிய வார்த்தைகள் இந்திய- தமிழக மண்ணில் மட்டுமின்றி, உலகெங்கும் மண்ணுரிமை-மனித உரிமை-அடையாள மீட்பு போன்ற உரிமைகளுக்காகப் போராடக்கூடிய அனைத்து போராளிகளுக்கும் அது மிகப்பெரிய உந்துதல் முழக்கமாகவே இருந்தது என்று சொன்னால் மிகையாகாது.

அவர் விடுதலைக்குப் பின் 1994-ஆம் ஆண்டு ஜனநாயக ரீதியாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார். ஆப்பிரிக்க அரசின் நிறவெறிக்கு எதிராக எல்லா தளத்திலும் அதிகமாகக் குரல் கொடுத்த நாடு இந்தியா. அதன் அடையாளமாகவே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் அலுவலகம் தென் ஆப்பிரிக்கா சுதந்திரம் அடையும் வரை டெல்லியில் செயல்பட்டு வந்தது.
எனவே, தென் ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் மற்றும் இன்றைய இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளை வேறு வேறாகப் பார்க்கக் கூடாது.

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜாக்கப் ஜீமா அவர்களின் கைதுக்குப் பிறகு, நடைபெற்று வரும் போராட்டங்களை இந்திய வம்சாவளியினர் மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் என தவறுதலாகப் பார்க்கக் கூடாது. அப்போராட்டங்களின் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணிகளை முழுமையாகவும், ஆழமாகவும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதை விடுத்து கருப்பின-இந்திய ஒடுக்கப்பட்ட இரண்டு இனங்களுக்கிடையேயான போராட்டமாகக் காட்ட முற்படுவதோ, சித்தரிப்பதோ தவறானதாகும்.

பல நூறாண்டுக்கால இன ஒதுக்கலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் அதனால் வறுமைக்கும் ஆளான அந்நாட்டு கறுப்பின மக்கள் நிற வெறி அரசிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் மற்றும் வறுமைகள் நீங்கி தங்கள் வாழ்வில் வளமும், வசந்தமும் வந்து சேரும் என எதிர்பார்ப்போடு இருந்திருப்பார்களா இல்லையா? அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது அவர்களின் கோபம் எப்போதாவது, எங்கேயாவது எதாவது ஒரு விதத்தில் வெளிப்படும் அல்லவா? அவர்கள் வெறும் நிறத்தை மட்டுமா மாற்ற போராடியிருப்பார்கள்? தங்களுடைய வாழ்வாதாரத்தின் தரத்தையும் மாற்ற தானே போராடியிருப்பார்கள்? ஆனால் ஆட்சி-அதிகாரம் வெள்ளையினத்தவர்களிடமிருந்து கறுப்பினத்தவர்களிடம் மாறியது உண்மைதான். ஆனால் வேறு எந்த வளங்களும் மாறியதாகத் தெரியவில்லை. அதைத்தான் ”White Face With Black Mask” என இன்று அங்கு ஆட்சிகளை பற்றி குறிப்பிடுகிறார்கள்.

1990-க்கு பிறகு, தென் ஆப்பிரிக்க மக்களுக்கு கிடைத்த சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமையை மட்டும் வைத்துக் கொண்டு எத்தனை ஆண்டுக் காலத்திற்கு வெற்று புகழ்ச்சி பாடிக் கொண்டிருக்க முடியும்? இது போன்று பல வருடங்கள் போராடி சுதந்திரம் பெற்ற நாடுகளில் மக்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லையெனில், அந்த அரசுகளை மக்கள் தூக்கி எறிந்திருக்கிறார்கள். ’ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பதே இதற்கு பொருத்தமான பழமொழியாகும்.

சுதந்திரம் பெற்று 30 ஆண்டுகள் ஆன பின்னரும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள இளைஞர்களுக்கு முறையான திறன் வளர்ப்பு கல்வி இல்லை; 50% மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை; எவ்வித வருமானமுமின்றி பசியோடும், பட்டினியோடும், நோயோடும் எத்தனை ஆண்டுக்காலத்திற்கு அவர்களால் பொறுமையாக இருக்கமுடியும்?

எனவே, பொதுவாக அந்நாட்டில் நிலவக்கூடிய இந்த அசாதாரணமான சூழலே அம்மக்களை வீதிக்கு வர தூண்டியுள்ளது. பசியோடும், பட்டினியோடும் இருந்தால் அதற்காகக் கொள்ளையடிக்கலாமா? என்ற சட்டரீதியான கேள்வி நியாயம்தான். வெள்ளையின நிறவெறி ஆட்சி ஒழிந்து தங்களுடைய-கறுப்பின ஆட்சி அமைந்த பிறகும், தங்களுடைய வாழ்க்கைத் தரத்தில் எவ்வித மாற்றமும் அடையாமல் ஏமாற்றம் அடைந்த அவர்களை நல்வழிப்படுத்துவதற்கோ; ஒரு சரியான பாதைக்கு அழைத்துச் செல்வதற்கோ சமூக அமைப்புகள் அடிமட்ட அளவில் இல்லாத போது, இது போன்ற சமூக குற்றங்கள் தவிர்க்க முடியாதவைகள் ஆகின்றனவே.

இந்திய வம்சாவளியினரின் நிறுவனங்கள் தாக்கப்பட்டு விட்டதே என இந்தியர்கள்-தமிழர்கள் எல்லாம் வருத்தமடைகின்ற போது, அது குஜராத்திலிருந்து வணிகம் செய்யச் சென்ற ’குப்தாஸ்களின் நிறுவனங்கள்’ தானே தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறது என்று சுய இன்பம் அடையும் ’திராவிட ஸ்டாக்கிஸ்ட்கள்’ மனநிலையை என்னவென்று சொல்வது? இது குப்தாஸ்களுக்கு மட்டுமல்ல; மாமன், மச்சான், உற்றார், உறவினர் என்ற கோதாவில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவிப்பவர்களுடைய நிறுவனங்களும், இது போன்ற சம்பவங்களில் குறிவைக்கப்படுவது தமிழகத்திலும் உண்டு; இந்தியாவிலும் உண்டு.

தென் ஆப்பிரிக்காவில் நடக்கக்கூடிய பிரச்சினைகளை ஒரு குறிப்பிட்ட இந்திய நிறுவனத்திற்கு எதிராக நடப்பதாக கருதி புளகாங்கிதம் அடைவதும் தவறு; பூர்வீக கறுப்பின-இந்திய வம்சாவளி ஆப்பிரிக்க மக்களுக்கும் இடையே நடைபெறும் இன மோதலாகச் சித்தரிப்பதும் தவறு. இவையனைத்திற்கும் இன்றும் தென் ஆப்பிரிக்க மக்களிடம் நிலவும் வேலையின்மை, வறுமை, ஏழ்மை போன்ற ஏற்றத்தாழ்வுகளைப் போக்கிட எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அந்நாட்டு அரசியல்வாதிகளே காரணமாகும்.

சுதந்திரமும், சமத்துவமும் பெயரளவில் இருப்பதால் என்ன பிரயோஜனம். சமத்துவமும், சம தர்மமும் அந்நாட்டின எல்லா குடிமக்களின் வாழ்வாதாரத்திலும் பிரதிபலிக்க வேண்டுமல்லவா? 1990-ல் சுதந்திரம் பெற்ற தென்னாப்பிரிக்காவில் இன்று வரையிலும் 80% விளை நிலங்கள் 2% மட்டுமே உள்ள வெள்ளையர்களிடத்திலேயே குவிந்து கிடக்கிறது; அவை பெரும்பாலும் வேறு வேறு நாடுகளிலும் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமே இருக்கிறது.

அதேபோல தங்கம், வைர நிறுவனங்களின் வருமானமும் பிற நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே போய்க் கொண்டிருக்கின்றன. Equality என்பது கருத்து அளவிலான சமத்துவம்; Equity என்பது எல்லா வளங்களிலும் உள்ள சம உரிமையும், சம பங்குமாகும். அனைத்து விதமான வளங்கள் இருந்தும் அவர்கள் பசியோடும் பட்டினியோடும் இருப்பதே அவர்களின் கோபத்திற்கு அடிப்படை காரணமாகும். இது ஜீமாவுக்காக நடக்கக்கூடிய போராட்டம் அல்ல; இது சம பங்கிற்கான போராட்டமாகும்.

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, மொத்த இந்திய நிலப்பரப்பில் 3ல்1 பகுதி நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக இருந்தது. ஆனால், சுதந்திரம் பெற்ற பத்தே வருடத்தில் ஆட்சி-அதிகாரத்தின் அருகாமையிலிருந்தவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினரும் அந்த அரசு நிலங்கள் அனைத்தையும் தங்களுடைய பெயரில் அபகரித்து பட்டா போட்டுக் கொண்டார்கள். இந்தியாவிலும் பெரும்பாலான காப்பி, தேயிலைத் தோட்டங்கள் பெரும் முதலாளிகளிடம் மட்டுமல்ல, இந்தியாவில் குடியில்லாத பெரும் முதலாளிகளிடத்திலேயே அதிகம் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 10,000 ஏக்கர், வால்பாறையில் 30,000 ஏக்கர், கூடலூரில் 30,000 ஏக்கர் அரசு வன நிலங்கள் BBTC என்ற நிறுவனத்தின் உரிமையாளரான இந்தியாவின் பிரஜை அல்லாத ஜின்னாவின் பேரனும், லண்டன் பிரஜையுமான நுசில்வாடியாவின் கையில் இன்றுவரை உள்ளது. இந்த நிலத்தில் தான் அங்கு பாடுபடும் ஒரு தொழிலாளியின் வீட்டிற்கு முன்பாக 3 சென்ட் நிலத்தில் காய்கறி தோட்டம் அமைக்க வலியுறுத்தி மூன்று வருடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் தான் தாமிரபரணியில் 17 பேரை இழந்தோம். இது போன்று இலட்சக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் இன்னும் பலரிடம் குவிந்து கிடக்கின்றன.

நாடுகளிலுள்ள வளங்கள் எவ்வளவு வேகமாக அனைத்து மக்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படுகிறதோ; மக்கள் பொருளாதார சமத்துவம் அடைகிறார்களோ அப்பொழுது மட்டுமே உண்மையான அமைதி நிலவும். தென் ஆப்பிரிக்கப் போராட்டக் களத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் பொருட்சேதங்களை அடிப்படையாகக் கொண்டு கறுப்பின மக்கள் மீது தற்காப்பு என்ற பெயரில் துப்பாக்கி தாங்கிய குழுவினரை வாடகைக்கு அமர்த்தி அவர்களைச் சுட்டுக் கொல்வதும், அவர்களை அரைகுறை ஆடையுடன் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துவதும் மனிதநேயமற்ற செயலாகும்.

இதனால் காலம் காலமாக இந்தியத் தேசத்திற்கு இருந்து வரும் ’சகிப்புத்தன்மை கொண்டவர்கள்’ என்ற நற்பெயருக்கு அவப்பெயர் வந்து சேரும். இந்த விஷயத்தில் இந்திய அரசு இந்திய வம்சாவளி ஆப்பிரிக்க மக்களுக்கும்-பூர்வீக கறுப்பின மக்களுக்குமான உறவுகள் பாதிக்கப்படாத வகையில் அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நல்லெண்ண குழுவை விரைந்து தென்னாப்பிரிக்கா அனுப்புவதே சரியானதாக இருக்கும் என கருதுகிறேன்.

பர்மாவில் பல நூறாண்டுக்காலம் வாழ்ந்த ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட இந்தியர்கள் 1942-ல் வெளியேற்றப்பட்டு அசாமில் குடியேறியதையும்; 1962 மற்றும் 1964-ல் வட்டி கடைகள் நடத்திய தமிழர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட நிகழ்வுகளையும்; இலங்கை நாடு சுதந்திரம் பெற்றவுடன் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் குடியுரிமை, வாக்குரிமை மறுக்கப்பட்டு ஆடுமாடுகளைப் போலக் கப்பலில் அடைக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கொடுமையான வரலாறுகளையும் மனதிலே கொண்டு, பல நூறாண்டுக்காலம் இன-நிற வேற்றுமைக்கு ஆட்பட்டு தற்போது இணக்கமாக வாழ்ந்து வரும் இரண்டு இனங்கள் மோதிக்கொள்ளும் நிலைக்கோ, அவர்கள் மனதில் வேறுபாடுகள் மற்றும் காழ்ப்புணர்வுகள் உருவாகும் நிலைக்கோ தள்ளிவிடக்கூடாது என்பதும்; ’இரண்டாவது இந்தியா’ என்று போற்றப்படக் கூடிய ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரும் அந்நாட்டுப் பூர்வீக கறுப்பின குடிமக்களும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் சூழல் உருவாக வேண்டும் என்பதுமே தமிழர்கள்-இந்தியர்களின் உயரிய நோக்கமாக இருக்கட்டும்!

நிறம் மாறியது தரம் மாறவில்லை !சமத்துவம் கிடைத்தது, சம தர்மம் கிடைக்கவில்லை! தென் ஆப்பிரிக்க கலவரம் இன ரீதியான போராட்டமல்ல குப்தாஸ் தாக்குதலிலும் ’திராவிட ஸ்டாக்கிஸ்டுகள்’ குளிர் காயக் கூடாது டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, நிறுவனர் & தலைவர்,புதிய தமிழகம் கட்சி.

Exit mobile version