சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.இந்த சோதனையின்போது ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்திருந்தது.
இதையடுத்து, அமலாக்கத்துறையின் இந்த திடீர் சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், இந்த சோதனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தனிதனியாக வழக்குகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் 6 நாட்கள் விசாரித்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று பிறப்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சட்டவிரோத பண பரிமாற்றம் முறைகேடு என்பது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் நிதி உரிமைக்கு எதிரானது. இதுபோன்ற குற்றச்செயல்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையை ஏற்படுத்தும்.இந்த குற்றத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதேநேரம், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதுபோன்ற சோதனையை அமலாக்கத்துறை மூலம் நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டை ஒரு நல்ல நீதிபதிகள் ஏற்க மாட்டார்கள். நீதிபதிகளை பொறுத்தவரையில், நிதி முறைகேடு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா? என்பதைத்தான் பார்க்க முடியுமே தவிர, அரசியல் உள்ளதா என்பதை பார்க்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிரான அமலாக்கத்துறை கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது.அதனால், அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்கத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது அமலாக்கத்துறை. சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமானை இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சி.ஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சிஆர்பிஎப் உதவியுடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அசோக் நகரில் உள்ள என்சிஎஸ் டெக்னாலாஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழில் அதிபர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவனம் மருத்துவத்துறை சார்ந்த உபகரணங்கள் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதா என்ற கோணத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதேபோன்று விருகம்பாக்கம், சாலிகிராமம், தி. நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல நிறுவனத்தின் இயக்குநர் ஏகே நாதன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கோயம்பேட்டில் உள்ள குணசேகரன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்யப்பட்ட நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் காலை முதலே நடைபெற்று வரும் இந்த அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை தொடர்பாக விரிவான தகவல் அமலாக்கத்துறை தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை.