ஆயிரம் ஆயிரம் தலைகளை கொடுத்து வாங்கிய சுதந்திரம்! 500க்கும் ,1000க்கும் விலை பேச அனுமதிக்கக்கூடாது!

சுதந்திரத்தின் இலட்சியம் குறித்து புதிய தமிழகம் ஓராண்டு பிரச்சாரம்!!

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்ட பழம்பெரும் பாரத தேசம் தன்னை இறுதியாக ஆண்ட ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் 140 கோடி இந்தியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நாம் சுதந்திரமாக வாழ தங்களுடைய இன்னுயிரையும், வாழ்க்கையையும் அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் எமது வீர வணக்கம்!

ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளிலே தேசியக் கொடி ஏற்றி தேசிய கீதம் பாடுவதும், இனிப்புகளை வழங்குவதும் என்ற ஒரு சம்பிரதாயமாகவே ஆகஸ்ட்-15 நமது சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டு வருவது ஏன் என்று தெரியவில்லை? பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், மாவட்ட ஆட்சியாளர்கள் அலுவலகங்களிலும் மட்டும் கொண்டாடப்படக்கூடிய விழா அல்ல அது.

தேசத்தின் கடைக்கோடி வரையிலும் பரந்து கிடக்கக்கூடிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் இல்லங்களிலும் கொண்டாடப்பட வேண்டிய விழா ஆகும். வேறு தேசங்களுக்கு அடிமைப்பட்டு கிடந்து அதிலிருந்து விடுபட்ட ஒவ்வொரு தேசமும் அதன் சுதந்திர தினத்தை விமர்சையாக கொண்டாடி வருகின்றன.

பிரிட்டிஷிடமிருந்து விடுதலை பெற்ற அமெரிக்கா ஒவ்வொரு ஜூலை 4 ஆம் தேதியை இன்று வரையிலும் விமர்சையாக கொண்டாடி வருகிறது. இனியாவது இந்திய சுதந்திர தினம் மக்களுடைய திருநாளாகக் கொண்டாடப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தான், புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தமிழகமெங்கும் அனைத்து கிராமங்களிலும் நாளை (15.08.2021) காலை 08.30 மணிக்கு பொது இடத்தில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை மக்கள் விழாவாகக் கொண்டாட உள்ளோம்.

சுதந்திரத்தின் பலனையும், இன்பத்தையும் அனுபவிக்கிற நாம் அதைப் பெற நமது முன்னோர்களுக்கு ஏற்பட்ட வலிகளையும், துன்பத்தையும் இப்போதாவது நினைவு கூற வேண்டும். அதுவே சுதந்திரத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அம்மாமனிதர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய மரியாதையாகும்.

இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து ’சுதந்திரம்’ பெறக் கொடுத்த விலை அளவிடற்கரியது. இலட்சோபலட்சம் பேர் தங்களது இன்னுயிரை நீத்து இருக்கிறார்கள். 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள இன்றும் நினைவுச் சின்னமாக விளங்கும் ’அந்தமான் செல்லுலார்’ சிறைகளில் அடைப்பட்டு தங்களுடைய வாழ்க்கையை முழுமையும் முடித்துக் கொண்டவர்கள் ஆயிரமாயிரம் பேர்.

இந்தியாவிற்கு சுதந்திரம் ஏதோ கேட்டவுடன் கிடைத்து விட்டது போல பலரும் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், சுதந்திரத்திற்காக நடைபெற்ற சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவை அகிம்சை போராட்டங்கள் தான். இந்த சத்தியாகிரக போராட்டத்திற்குப் பின்னால் உயிர்த்தியாகம் செய்தோரின் எண்ணிக்கை ஒன்றிரண்டு அல்ல, பல கோடிகளைத் தாண்டும்.

ஆம், 1608-ல் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் நுழைந்த நாள் முதல் அவர்கள் வெளியேறிய 1947-ஆகஸ்ட்-14 ஆம் நாள் வரையிலும் இந்திய மக்கள் மீதான ஆங்கிலேயர்களின் நேரடி மற்றும் மறைமுக மனிதநேயமற்ற போர் முறைகளால் 350 வருடத்தில் 180 கோடி மக்களை இழந்திருக்கிறோம் என்று சொன்னால் நம்மில் பலரும் நம்புவது கடினம்.

சிறையில் அடைத்தும், துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியாக்கியும், பல்லாண்டுகளுக்கு மேலாகப் பட்டினி போட்டும் இந்திய மக்களை மெல்லமெல்ல கொன்ற பிரிட்டிஷ் ஆட்சியின் முழு அவலங்களை இன்று வரையிலும் கூட இந்திய மக்களுக்குத் தெரியப்படுத்தாதது ஏன்? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு பக்கம் லட்சக்கணக்கான இந்திய மக்களைப் பட்டினி போட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் இந்திய வளங்களை எல்லாம் கொள்ளையடித்தார்கள். இந்தியா அதற்கு முன்பே பல பேருடைய ஆட்சி-அதிகாரங்களுக்கு ஆட்பட்டும், சுரண்டப்பட்டும் இருந்த நிலையிலும் மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்ற வளங்களிலும்; நெசவு, வேளாண்மை, உலோகம் போன்றவற்றிலும் உலக அளவில் இந்தியா தலை சிறந்து விளங்கிக் கொண்டிருந்தது

. ’மஸ்லீன்’ என்ற ஒரு அரிய வகை நூலால் செய்யப்பட்ட மகளிர் அணியும் ஒரு சேலையை ஒரு மோதிரத்திற்குள் நுழைத்து வெளியே எடுத்து விடும் அளவிற்கு அன்றைய இந்தியத் தொழில்நுட்பம் உயர்ந்ததாக இருந்தது.

1700-களில் ஐரோப்பாவில் உள்ள ஒட்டுமொத்த நாடுகளின் பொருளாதாரத்தின் மதிப்பும், இந்தியத் தேசத்தின் உற்பத்தி மதிப்பும் (GDP) சமமாக இருந்தது. அதாவது, அக்காலக்கட்டத்தில் உலக பொருளாதார மதிப்பில் இந்தியா 24.4 சதவிகிதத்தை உள்ளடக்கி முதல் நிலையில் இருந்தது.

வேளாண் துறையிலும், தொழிற்துறையிலும் உலகளவில் முன்னேறி இருந்த இந்தியத் தேசத்தை 250 வருடம் கிழக்கிந்திய கம்பெனியும், 100 வருடம் நேரடியாக பிரிட்டிஷ் அரசும் சுரண்டியதால், 1947 சுதந்திரம் பெறுவதற்கு முன்பு எடுத்த கணக்கீட்டின்படி, இந்தியாவின் பொருளாதாரம் வெறும் 4.2 சதவிகிதமாக தரை மட்ட அளவிற்கு சுருக்கி விட்டார்கள்.

ஒரு புள்ளி விவரப்படி ஆங்கிலேயர்கள் ஆட்சியிலிருந்த அந்த காலகட்டத்தில் இந்தியாவில் அவர்கள் கொள்ளையடித்த மதிப்பு 45 ட்ரில்லியன் டாலர்கள் என குறிப்பிடப்படுகிறது. ஒரு ட்ரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி ஆகும்.

45 ட்ரில்லியன் டாலர் என்றால் 45 லட்சம் கோடி டாலார்கள் ஆகும். ஒரு டாலரின் இன்றைய இந்திய மதிப்பு ரூபாய் 75 என்று கணக்கிட்டால் கூட, இன்றைய மதிப்பின் படி ரூ 3,336 இலட்சம் கோடிகளை ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்று இருக்கிறார்கள்.

இந்தியாவின் தற்போதைய பட்ஜெட் ஒரு ஆண்டுக்கு ரூ 34.50 லட்சம் கோடி. அக்கணக்கீட்டின் படி, ஆங்கிலேயர்கள் கொள்ளை அடித்தது இந்தியாவின் நூறு வருட பட்ஜெட் மதிப்பிற்கு சமம்.
இந்தியாவில் பெரிய அளவிற்குத் தொழிற்சாலைகளையும் உருவாக்கவில்லை.

மாறாக பருத்தி, சணல், உலோகங்கள் போன்ற பல கச்சா பொருட்களைக் கப்பல் கப்பலாக இங்கிலாந்திற்கு ஏற்றிச் சென்று, அவர்களது தொழிற்சாலைகளில் அவற்றை துணிகளாகவும், இயந்திரங்களாகவும் மாற்றிக் கொண்டு வந்து இந்தியாவிற்கு எவ்வித வரியும் செலுத்தாமல், இந்திய மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

வற்றா ஜீவ நதிகளான சிந்து, கங்கை சமவெளி பிரதேசங்களின் வளமிக்க நிலங்களையெல்லாம் பிரிட்டிசாரே சொந்தமாக்கிக் கொண்டு ஜமீன்தாரி மற்றும் ரயத்துவாரி முறைகளை உருவாக்கி, விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து, உழைப்பின் பெரும்பகுதியை வரியாகக் கட்ட வைத்து அவர்களைச் சொந்த மண்ணிலேயே பஞ்ச பரட்டைகளாக்கினார்கள்.

இந்தியாவை 300 வருடம் ஆண்ட இங்கிலாந்து அரசு வெறும் 16% பேருக்கு மட்டுமே கல்வி அறிவை கொடுத்து இருந்ததது.1939-40 ஒரு வருடத்தில் மட்டும் பதினைந்து இலட்சம் இந்திய மக்களைப் பட்டினி போட்டுக் கொன்றடித்து இருக்கிறார்கள். இதற்கும் அந்த வருடம் வங்கம் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் இயற்கை பொய்க்கவில்லை. செயற்கையாக நிலங்கள் பாழ் படுத்தப்பட்டு இருக்கின்றன.

இந்திய மக்கள் உணவுக்கு திண்டாடும் பொழுதே நமது தேசத்தில் விளைந்த அரிசி, கோதுமை போன்ற தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அன்றைய பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளும், பெண்களும் பசியால் மடிந்த போது உலகத்தில் பெரும்பான்மை நாடுகளை ஆண்டு கொண்டிருந்த அன்றைய பிரிட்டிஷ் அரசு கோதுமையையோ, அரிசியையோ இறக்குமதி செய்யவில்லை.

இறக்குமதி செய்யப்பட்ட தானியங்களையும் இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் ராணுவத்திற்காக பதுக்கியும், ஒதுக்கியும் வைத்துக் கொண்டார்கள். அன்றைய காலகட்டங்களில் வங்காளம், பீகார், ஒரிசா, பஞ்சாப் போன்ற பகுதிகளில் ஏறக்குறைய 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்து இருக்கிறார்கள்.

அன்றைய காலகட்டங்களில் சராசரி இந்தியர்களின் வயது வெறும் 27 ஆக மட்டுமே இருந்ததுள்ளது. வங்காளத்தில் ஏற்பட்ட அந்த பஞ்சத்தை அக்காலத்தில் மட்டுமல்ல இன்று வரையிலும் ’Bengal Famine’ என்றே குறிப்பிட்டு வருகிறார்கள். ஒருவேளை மிகப்பெரிய ராணுவத்தை கட்டமைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுத்து இருந்தாலும் கூட நாம் இவ்வளவு உயிர்களை இழந்திருக்க மாட்டோம்.

ஆங்கிலேயரின் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கங்களை முன்னெடுத்தார்கள். ஒரு புறம் காந்தி அகிம்சை வழியிலும், இன்னொரு புறம் நேதாஜி இந்தியத் தேசிய ராணுவத்தையும் கட்டியமைக்க முயற்சி செய்தார்;

பகவத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்கள் ஆங்கிலேயர்கள் அமைத்த சட்டமன்ற, பாராளுமன்ற கட்டிடங்களுக்குக் குண்டு வைப்பது போன்ற அதி தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள். ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் சாதாரணமாக உணவிற்கு பயன்படுத்தக்கூடும் ’உப்பைக் கூட இந்தியாவில் தயார் செய்யக் கூடாது; அதையும் இங்கிலாந்திலிருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டும்’ எனச் சட்டம் போட்டார்கள்.

அதைத்தான் ” ’ம்’ என்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்” என கிராமங்களில் இன்றும் சொல்வதுண்டு.
இந்தியத் தேசத்தின் அத்தனை வளங்களையும் கொள்ளையடித்து கொண்டு போனதையும், மக்கள் பட்டினி போட்டுக் கொல்லப்பட்டதையும், சிறு எதிர்ப்பு காட்டினாலும் சிறை அல்லது கொலை என்று இருந்த நிலைகளையும் எதிர்த்து பஞ்சாபிலும், வங்கத்திலும் மக்கள் அணி அணியாகச் சுதந்திரப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

1857 இல் மீரட்டில் ஏற்பட்ட சிப்பாய் கலகத்தைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற கலகத்தில் 2000 வெள்ளையர்கள் மட்டுமே கொல்லப்பட்டார்கள். ஆனால், அதற்கு பதிலாக 20 லட்சம் இந்தியர்கள் பலி வாங்கப்பட்டார்கள். அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக் பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஜெனரல் டயர் 3000 பேரைக் கொன்று குவித்தான்.

எனவே, இந்தியச் சுதந்திரப் போராட்டம் என்பது வெற்று முழக்கங்களால் வந்து விடவில்லை. அதற்காக இந்திய மக்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும் எண்ணிலடங்கா. இந்தியர்களை நேரடியாக அடக்கி ஆள முடியாது, அவர்களை தந்திரமாகத்தான் ஆளமுடியும் என முடிவெடுத்த ஆங்கில அரசு கவுன்சில் சட்டத்தைக் கொண்டு வந்து, மிட்டா மிராசுகளுக்கும், ஜமீன்களுக்கும் வாக்குரிமை அளித்து, ஆட்சி-அதிகாரத்தில் அமர்த்தி, சட்டமன்றங்களைப் போன்ற அமைப்புகளை உருவாக்கி தங்களுக்கு வெண்சாமரம் வீசிய ’ஸ்டாக்கிஸ்டு’ களை பதவியில் அமர்த்தினார்கள். அன்றைய கால கட்டத்தில் ஆங்கிலேயரின் அடிவருடிகளுக்கு மட்டுமே பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை இருந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பே, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கருத்துரிமையும், பேச்சுரிமையும், எழுத்துரிமையும் சட்ட ரீதியாக உறுதி அளிக்கப்பட்டது. ஆண், பெண், படித்தவர், படிக்காதவர் என எவ்வித பேதமும் இன்றி 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்தது. இந்த மகத்தான சுதந்திர தினத்தை கொண்டாடத் தான் நமது மக்கள் இன்னும் மலைப்பு காட்டுகிறார்கள்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியர்கள் என்ற ஒரே அடையாளத்தோடு ஒன்று சேரவிடப்படவில்லை. மாறாக, மதங்களாகவும் மொழிகளாகவும், சாதிகளாகவும் முடிந்த அளவிற்கு பிரித்து வைக்கப்பட்டார்கள். இதையும் மீறி இந்திய மக்களை ஆட்கொண்ட சுதந்திர வேட்கையால் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் ஆங்கிலேயர்கள் வெளியேறினார்கள்;

நாம் சுதந்திர புருஷர்கள் ஆனோம். அவர்கள் ஆட்சியிலிருந்த போது ஊன்றிய பிரிவினை விதை, அதற்கு அவர்கள் ஊற்றிய நீர், போட்ட உரம் தேசத்தை மதரீதியான பிரிவினைக்கு வித்திட்டது. எந்த மக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுக் காலம் இந்திய இரத்தத்தாலும், கலையாலும், கலாச்சாரத்தாலும், பண்பாடுகளாலும் ஒன்றிப்போய் இருந்தார்களோ, அந்த மக்கள் மத ரீதியான பிரிவினைக்கு ஆளாகி முதலில் மாநிலம் கேட்டு, பின் தேசமாகப் பிரிந்து சென்றார்கள்.

1947 ஆகஸ்ட் 15 சில மாதங்களுக்கு முன்பு வரையிலும், இந்தியா ஒன்றுபட்ட தேசமாக இருக்கும் என்று சொல்லி வந்த ஆங்கில அரசு திடீரென பிரிவினை சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அதை மவுண்ட் பேட்டன் மூலம் அமலாக்கிக் கொண்டது. இந்தியத் தேசத்தின் வரலாற்றில் பிரிவினை ஒரு நிலையான வடுவாக இருந்தாலும் கூட, பிரிந்து சென்ற அவர்களுக்கும் சேர்த்து தான் ஒட்டுமொத்தமாக இந்தியத் தேசம்-பாரதத்தாய் இன்றும் உலகிலே உயர்ந்து நிற்கிறது.

இந்தியத் தேசம் நாடாக சுதந்திரம் பெற்றாலும் கூட நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு விதமான சமூக பிரச்சினைகளிலிருந்து இன்னும் முழு சுதந்திரம் பெறவில்லை. சாதி, மத, இன, மொழி, அரசியல் ரீதியான பல்வேறு சமூக ஆதிக்கங்களிலிருந்து முற்றான சுதந்திரம் பெற வேண்டும். அனைத்து மக்களும் வறுமை நீங்கி, பிணி நீங்கி, பொருளாதார சுதந்திரமும் பெற வேண்டும். இந்த 75வது சுதந்திர நாளில் நம் சுதந்திரத்தையும் விட்டு விட மாட்டோம்; நமது வாக்குகளையும் விற்க மாட்டோம் என சூளுரைப்போம்!
இந்தியத் தேசம் நமது தேசம்; இந்திய மண் நமது மண்!

நாம் பெற்ற சுதந்திரமும், வாக்குரிமையும் விலைமதிப்பற்றது!! ஆயிரமாயிரம் பேர் தங்களது இன்னுயிரை நீத்து பெற்றுக் கொடுத்த சுதந்திரம்!
அதை ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் விற்பது என்பது, அச்சுதந்திரத்தையே விற்பதற்கும், சுதந்திரப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தியாகிகளுக்கு செய்யும் துரோகத்திற்கும் சமம்.சுதந்திரத்தின் இலட்சியம் குறித்து இந்த ஆண்டு முழுவதும் புதிய தமிழகம் மக்கள் இயக்கம் மேற்கொள்ளும்!!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, நிறுவனர்& தலைவர், புதிய தமிழகம் கட்சி.

Exit mobile version