பா.ஜ.க சார்பில் 4 லட்சம் பேர் கொண்ட ‘சுகாதார தன்னார்வலர்கள் படை’ – வானதி சீனிவாசன் MLA

oredesam Vanathi Srinivasan

பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மகளிரணியை பலப்படுத்தி வருகிறார். அவர் பயணங்கள் குறித்த சுவராஸ்ய தகவல்களை அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். நேற்று கர்நாடக பயணத்தை பற்றி அவர் கூறியுள் ளதாவது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி இந்தியாவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பொதுமுடக்கம் ஏதாவது ஒரு வடிவில் இருந்து கொண்டே இருக்கிறது.

130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு, மக்கள் அடர்த்தியாக வாழும் நாடு என்பதால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாக இருக்கும். பல கோடி மக்கள் உயிரிழப்பார்கள் என்றெல்லாம் வளர்ந்த நாடுகளும், மேற்கத்திய ஊடகங்களும், இடதுசாரி கருத்தியல் கொண்ட ஊடகவியலாளர்களும் கணித்தனர்.

ஆனால் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு எடுத்த உறுதியான, போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் மூலம் கொரோனா முதல் அலையை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் எதிர்பார்த்ததைவிட மிக மிக அதிகமாக இருந்தது. ஆனாலும் மத்திய பாஜக அரசு எடுத்த நடவடிக்கைகளால் அந்த நெருக்கடியையும் வெற்றிகரமாக எதிர்கொண்டோம்.
பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளால் தடுப்பூசிகள் தயாரித்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றானது.

நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கோவாக்சின்’, இங்கிலாந்து நிறுவன உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு” ஆகிய இரு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16-ம் தேதியே இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இது மோடி அரசின் மகத்தான சாதனை.

முன்கள பணியாளர்களுக்கு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதயம், சிறுநீரக நோய்கள் என்று இணை நோய் உள்ளவர்களுக்கு என்று படிப்படியாக தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

ஜுலை மாத இறுதிக்குள் இந்தியாவில் 40 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும் என்று கடந்த ஜனவரியில் மத்திய பாஜக அரசு அறிவித்த போது, அது எப்படி சாத்தியமாகும் என்று எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தன. சில ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்பின.

ஆனால் ஜூலை மாதம் முடிவதற்குள்ளாகவே 40 கோடி தடுப்பூசிகளை செலுத்தி, உலக அளவில் அதிக தடுப்பூசிகளை செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. ஆகஸ்ட் 6ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 50 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன. உலகில் வேறு எந்த நாடும் நிகழ்த்தாத சாதனை இது. கொரோனாவை எதிர்கொள்ள மோடி அரசு என்ன செய்தது? என்று கேட்டவர்களுக்கு இதுதான் பதில்.

பிரதமர் நரேந்திர மோடி எப்போதுமே ‘சொல்லால்’ அல்ல, “செயலால்’ தான் பதில் கொடுப்பார்.
இப்போது கொரோனா மூன்றாவது அலை உலகின் பல நாடுகளை தாக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய பாஜக அரசு தயாராகி வருகிறது.

புதிய மருத்துவ மனைகளை உருவாக்குதல், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தல், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களை தேவையான அளவுக்கு பணியமர்த்துதல் என்று பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுத்து வருகிறது.

சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருப்பதால் இந்த வசதிகளை ஏற்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

3-வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 2 லட்சம் கிராமங்களில் 4 லட்சம் பாஜகவினருக்கு பயிற்சி அளித்து அவர்களை ‘சுகாதார தன்னார்வலர்களாக’ செயல்பட வைக்கும் மாபெரும் இயக்கத்தை கடந்த மாதம் பாஜக தேசியத் தலைவர் திரு. ஜெ.பி.நட்டா தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 4 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டெல்லியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மாவட்டத்திற்கு 4 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாநில அளவில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) பெங்களூரு வந்தடைந்தேன்.

பாஜக மகளிரணி தேசியத் தலைவரான பிறகு முதல் முறையாக பெங்களூரு வருவதால் பெரிய அளவில் எனக்கு வரவேற்பு அளிக்க கர்நாடக மாநில மகளிரணியில் முடிவு செய்திருந்தனர். ஆனால், எனது வருகை திடீரென முடிவானதால் அவர்களால் வரவேற்புக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை.

விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்த மகளிரணி நிர்வாகிகள் இதனை வருத்தத்துடன் தெரிவித்தனர். ஆனால், “நான் மகளிரணி நிகழ்ச்சிக்காக வரவில்லை. கட்சி நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறேன். எனவே, பெரிய அளவிலான வரவேற்பு அவசியமில்லை” என்று அவர்களை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.

சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி எனக்கு முற்றிலும் புதிய அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். பயிற்சி முகாமை நான் தொடங்கி வைத்தேன். இதில் கர்நாடக முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற திரு. பசவராஜ் பொம்மை அவர்களும் கலந்து கொண்டார். அவரும், நானும் தொடக்க விழாவில் பேசினோம். சாதாரண கட்சித் தொண்டர்கள் வரை எளிதில் அணுகக் கூடியவர் அவர் என்பதை இந்நிகழ்வில் அறிய முடிந்தது.

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள், உடற்பயிற்சிகள் குறிப்பாக யோகா, கரோனாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, அதற்கான உபகரணங்களை கையாள்வது, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு, ஆரம்ப நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் என்று பல்வேறு அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அதற்காக நிபுணர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். உடல் வெப்ப நிலை, ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவிகள் உள்ளிட்ட அடிப்படை கருவிகள், மருந்துகள் அடங்கிய ‘கிட்’ தன்னார்வலர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

2 லட்சம் கிராமங்கள், 4 லட்சம் சுகாதார தன்னார்வலர்கள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் இந்த எண்ணிக்கை 5 லட்சம் கிராமங்கள், 10 லட்சம் சுகாதார தன்னார்வலர்கள் என்ற அளவிற்கு விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு பாஜகவினர் மத்தியில் ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் இருப்பதை காண முடிகிறது.

இதற்கான இணையதள பதிவு முறை நடைபெற்று வருகிறது. கரோனா 3-வது அலையில் இருந்து மக்களைக் காப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்றாலும் ஒரு அரசியல் கட்சியாக அரசுக்கும், மக்களுக்கும் உதவ, சுகாதார தன்னார்வலர்கள் படையை உருவாக்கும் பணியை பாஜக தொடங்கியது. இந்தப் பணியை செய்வது உலகிலேயே பாஜகவாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன். அரசியல் அதிகாரத்தை தாண்டி மக்கள் நலனில் பாஜகவுக்கு இருக்கும் அக்கறையை இதன் மூலம் உணர முடிந்தது.

பயிற்சி முகாம் தொடக்க விழா முடிந்ததும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் திரு. கட்டா சுப்பிரமணியம் அவர்களை சந்தித்தேன். சட்டமன்றத் தேர்தலில் நான் வென்ற கோவை தெற்கு தொகுதி பொறுப்பாளராக கட்டா சுப்பிரமணியம் இருந்தார்.

அவர் பெரும் படையுடன் வந்து எனக்கு தேர்தல் பணியாற்றினார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவரை சந்திக்க முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன். எனக்காக தேர்தல் பணியாற்றிய மற்ற பாஜக நிர்வாகிகளும் வந்திருந்தனர். அவர்களுக்கும் நன்றி தெரிவித்தேன்.

பின்னர் பாஜக நிர்வாகிகள் சிலரை சந்தித்து விட்டு ‘குமார கிருபா’ என்ற அரசினர் விருந்தினர் இல்லத்திற்கு வந்தேன். அங்குதான் நான் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். நட்சத்திர விடுதி மிகச் சிறப்பாக அரசினர் விடுதி பராமரிக்கப்படுவது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்ததும்.

தமிழகத்திலும் அரசினர் விடுதிகள் பராமரிக்கப்பட்டால் அரசின் செலவுகள் குறையும் என்று நினைத்துக் கொண்டேன். பெங்களூரு பயணத்தை முடித்துக் கொண்டு மகளிரணி மாநில செயற்குழுவில் பங்கேற்க கோவா புறப்பட்டேன். அந்த பயண அனுபவங்களை பிறகு பகிர்ந்து கொள்கிறேன். வானதி சீனிவாசன்.

Exit mobile version