இந்து இயக்கங்களின் பிதாமகன் இராம.கோபாலன்-வானதி சீனிவாசன் புகழாரம்!

இந்து இயக்கங்களின் பிதாமகன் தெய்வத்திரு.இராம.கோபாலன் அவர்கள் இன்று (செப்டம்பர் 19) இந்து முன்னணியின் நிறுவனர் அமரர் திரு. இராம.கோபாலன் அவர்களின் 95-வது பிறந்த நாள். தமிழகத்தின் இந்து இயக்கங்களின் பிதாமகன். சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் 19-9-1927-ல் பிறந்த அவர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரியங் படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்.

தமிழக அரசின் மின்சாரத் துறையில் பொறியாளராகப் பணியாற்றிய இராம.கோபாலன் அவர்களின் வாழ்வில் தேசப் பிரிவினையின்போது நடந்த துயரச் சம்பவங்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.அப்போதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் ஏற்பட்ட தொடர்பால் ‘ஷாகா’வுக்கு செல்லத் தொடங்கியிருந்தார். ஒருநாள் தனது ‘ஷாகா’ நண்பர்களுடன் ஆவடியில் தங்கியிருந்த தேசப் பிரிவினையின்போது நிகழ்ந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். அவர்களின் துயரங்களை கேட்டவர், அரசுப் பணியை துறந்து, ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியரானார்.

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஒரு அடித்தளத்தை உருவாக்கினார். இன்றைய மணிப்பூர் ஆளுநர் திரு. இல.கணேசன், மேகலாயா மாநில முன்னாள் ஆளுநர் திரு. சண்முகநாதன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் என்று தமிழகத்தில் இந்து இயக்கங்களிலும், பாஜகவிலும் இருக்கும் பலரை உருவாக்கியவர் இராம.கோபாலன் அவர்கள்.

தமிழகத்தின் சூழலுக்கேற்ப தனி அமைப்பு தேவை என்பதை உணர்ந்து 1980-ல் இந்து முன்னணி அமைப்பை தொடங்கினார். மாவட்டந்தோறும் இந்து எழுச்சி மாநாட்டை நடத்தி இந்து முன்னணியை குறிப்பிடத்தக்க அமைப்பாக வளர்த்தெடுத்தார். 1984 ஜூலை 18-ம் தேதி மதுரை ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகளால் வெட்டப்பட்டு இறைவன் அருளால் உயிர் பிழைத்தார். ஓடாத திருவாரூர் ஆழித்தேரை ஓடச் செய்தது, கன்னியாகுமரி மண்டைக்காடு கலவரத்தை தொடர்ந்து அன்றைய முதல்வர் எம்ஜிஆரை சந்தித்து விசாரணை ஆணையம் அமைக்க வழி செய்தது, வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமியை பிரதிஷ்டை செய்தது, தமிழகம் முழுவதும் விநாயகர் சிலை ஊர்வலம் மூலம் இந்து எழுச்சியை உருவாக்கியது என்று இராம.கோபாலன் அவர்கள் நிகழ்த்திய சாதனைகளை சொல்லி கொண்டே போகலாம்.

இந்து சமுதாயத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட இராம.கோபாலன் அவர்கள் நினைத்திருந்தால் அரசியலில் உயர் பதவிகளைப் பெற்றிருக்கலாம். ஆனால், கடைசிவரை ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியராகவே வாழ்ந்து மறைந்தவர். பொதுவாழ்க்கையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இராம.கோபாலன் அவர்களின் வாழ்க்கை ஒரு பாடம். ஏபிவிபியில் இருந்தது முதல் நானும், எனது கணவர் திரு. சீனிவாசனும் அவரிடம் கற்றுக் கொண்டது ஏராளம். தெய்வத்திரு.இராம கோபாலன் அவர்களே.. உங்கள் உழைப்பும், தியாகமும் ஒருநாளும் வீணாகாது. தமிழகத்தில் ஒரு நாள் பாஜக ஆட்சியில் அமரும்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் MLA புகழாரம்.

Exit mobile version