கோயில் எதிரில் மீன்மார்க்கெட் அமைக்க இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு.

சீர்காழி கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் எதிரில் நகராட்சி மீன் மார்க்கெட் அமைப்பதை கைவிடக்கோரி இந்து மக்கள் கட்சியினர் சீர்காழி நகராட்சி ஆணையர்

அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் க.பாலாஜி, மாவட்ட செயலாளர் அரு.செல்வம், நகர தலைவர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் கண்ணன், அமைப்பாளர் அய்யப்பன் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது..

சீர்காழி – மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உப்பனாற்றங்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீலஸ்ரீ கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம். உலகம் முழுவதும் உள்ள பல கோடி இந்துக்கள் குருநாதராக போற்றி வணங்கி வருகின்றனர்.

இந்த அதிஷ்டானத்திற்கு எதிரில் நகராட்சியின் சார்பில் மீன் மார்க்கெட் அமைக்கும் முயற்சிகள் நடப்பதாக அறிகிறோம்.


இதற்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் எங்களது எதிர்ப்பையும், வருத்தங்களையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மேலும் சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பிரதிஷ்டை செய்து மக்களால் வழிபட்ட விநாயகர் திருமேனிகள் விசர்ஜனம் செய்யப்படும் இடமும் இதுவே.


இந்துக்களின் வழிபாட்டிற்குரிய புனிதமான மேற்படி இடத்தில் மீன் மார்க்கெட் அமைப்பது எங்களது வழிபாட்டு உரிமையை மறுப்பதாகும்.


ஆகவே, ஸ்ரீ ல ஸ்ரீ கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானத்திற்கு எதிரே விநாயகர் திருமேனிகள் விசர்ஜனம் செய்யும் இடத்தில் மீன் மார்க்கெட் அமைக்கும் முடிவினை கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.


இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version