ஒரு கோடு – ஒரு கூடாரம் – இரு நாடுகள்!சண்டையா?சமாதானமா?
எதுவாகினும் இப்போழுதே முடிவு செய்ய வேண்டும்.

எது நடக்கக்கூடாது என்று விரும்பினோமோ? அது இப்பொழுது நடந்தேறியிருக்கிறது. கடந்த 15-ம் தேதி லடாக் மாகாணத்தின் அருகே ‘லே’ பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரம் இந்தியா, சீனா ஆகிய இரண்டு மிகப்பெரிய நாடுகளுக்கு இடையே பெரும் மோதலின் தொடக்கமாக அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஏகாத்திபத்திய அரசின் வெளியுறவு செயலாளராக இருந்த ”மக்மகன்” என்பவரால் வரையறுக்கப்பட்ட ஒரு கோடுதான் 1962-ல் இந்திய – சீன போர் நடைபெறக் காரணமாக இருந்தது. அதற்கு பிறகு, இந்தியாவிலும் சீனாவிலும் எண்ணற்ற மாற்றங்கள் நடந்திருக்கின்றன. சீனா பொருளாதாரத்திலும், இராணுவ ரீதியாகவும் மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்து உலக வல்லரசு என்று கருதப்படக்கூடிய அமெரிக்காவிற்கு சவாலாக நிற்கிறது.

கரோனா ஐரோப்பா கண்டத்திற்கு பரவும் வரையிலும் ஐரோப்பிய மக்களிடையே சீன தேசம் தான் உலகின் பலம் பொருந்திய நாடு என்ற மிகப்பெரிய கருத்துருவாக்கம் பரவலாக பரவியிருந்ததுண்டு. இந்திய நாடும், அன்று போல இன்று பலவீனமாக இல்லை. பொருளாதாரத்தில் முழுமையாக சுயசார்பு பெறாவிட்டாலும் வலுவான கட்டமைப்பை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் கணிசமான முன்னேற்றங்களை கண்டிருக்கிறது. அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் முன் எப்போதைக்காட்டிலும், இப்பொழுது ஒரு வலுவான தலைமையின் கீழ் இயங்குகிறது.

எனினும், 130 கோடி இந்திய மக்களில் 60 சதவிகிதத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் மத்தியத் தர வர்க்கத்திற்கு கீழ், ஏழ்மை நிலையிலேயே இருக்கிறார்கள். கரோனா முழுமுடக்கத்தின் போதும், அது தளர்த்தப்பட்ட பின்னரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பட்ட அவலங்கள் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. சுதந்திர நாட்டில் சுதந்திரமாக எந்தவொரு சிறு அம்சத்தை கூட சுவாசிக்க இயலாமல் மாண்டு போனவர்கள் எண்ணற்றோர். இன்னும் தேசத்தின் பல கோடி பூர்வீகக் குடிமக்கள் கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், சமூகக் கொடுமைகளுக்கும், பொருளாதாரச் சுரண்டலுகளுக்கும் ஆட்பட்டு கிடக்கிறார்கள். அரசு உதவி செய்தாலொழிய, இரண்டு வார முழுமுடக்கத்தை கூட, தாங்கிக் கொள்ள முடியாத அவல நிலையிலேயே பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். முழுமுடக்க நேரத்திலும் அசுர வேகத்தில் அம்பானிகளும், அதானிகளும் வளர்ந்து கொண்டு போகிறார்கள். ஆனால், அதள பாதாளத்திற்கு இன்னொரு திசையில் ஏழை, எளிய மக்கள் வறுமையை நோக்கி பயணிக்கிறார்கள்.

ஒரு நாட்டினுடைய பலத்தை அந்நாடு வைத்திருக்கக்கூடிய அணு ஆயுதங்களையும், துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்து தீர்மானிக்கக் கூடாது. மக்கள் பசி, பஞ்சம், பட்டினி, பிணி ஆகியவற்றிலிருந்து நீங்கி எந்த அளவிற்கு வளமாக இருக்கிறார்களோ? அதுவே அந்த நாட்டின் உண்மையான பலமாகக் கருதப்படும். நாட்டு மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தாமல், ஆயுத பலத்தை மட்டுமே கணக்கில் கொண்டு, எந்த நாடும் நிரந்தரமாக வலுவான தேசம் என்று முரசு கொட்டிக் கொள்ள இயலாது.

உலக அளவில் வெளியில் தெரிந்து பல நாடுகளும், தெரியாமல் பல நாடுகளும் அணு ஆயுதங்களை வாங்கி, குவித்து வைத்திருப்பார்கள். ஆனால், அவைகளெல்லாம் மக்கள் ஒற்றுமைக்கும், உறுதிக்கும் முன்னால் வெறும் காகிதப் புலிகளே ஆகும். ஒரு தேசம் எந்த அளவிற்கு அண்டை நாடுகளுடன் நேசமாக இருக்கிறதோ? அதைப் பொறுத்தே அந்நாட்டில் அமைதி நிலவும், வளர்ச்சியும் அடையும். உலக அளவில் எப்பொழுதும் எல்லைப் பிரச்சனையை சந்திக்கும் ஒரே நாடு, இந்தியா மட்டுமே.

இந்திய தேசம் பிரிவினைக்கு ஆளான பிறகும், பாகிஸ்தானோடு நமக்கு பிரச்சனை தீர்ந்த பாடில்லை. கடந்த 73 ஆண்டுகளில், பாகிஸ்தானோடு மூன்று பெரிய போர்களையும், அதன் எல்லைப் பகுதியிலும், காஷ்மீரிலும் தினம் தினம் ”தீவிரவாதிகள் ஊடுருவல்” என்ற அக்கப்போர்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 1914-ல் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்தியாவிற்கான வெளியுறவு பிரதிநிதியாக செயல்பட்ட மக்மகன் என்பவர் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே வரைந்த கோடுதான் ”மக்மகன் எல்லைக்கோடு” என்பதாகும். அந்த கோடு வரையபட்டபோது இந்தியாவினுடைய அதிகாரம் பெற்ற பிரதிநிதிகளோ, சீனப் பிரதிநிதிகளோ குழுவில் இடம் பெறவில்லை.

இந்தியா 1947-ல் சுதந்திரம் பெற்றது. சீனா 1950- ல் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்ற துவக்கத்திலிருந்தே இரு நாடுகளும் அந்த எல்லைக் கோட்டை முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை. லடாக்கில் துவங்கி, அருணாச்சல பிரதேசம் வரையிலும் இந்தியாவும் சீனாவும் சந்திக்கும் தூரம் 4057 கி.மீ ஆகும். 1947 சுந்திரத்திற்கு முன்பு, சுதந்திர போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களுக்கு, அந்த சூழலில் 4057கி.மீ இருக்கக்கூடிய எல்லைகளை முறையாகக் கண்டறிந்து கொள்வதற்கான நிர்வாக அமைப்போ, நேரமோ இருந்திருக்க வாய்ப்பில்லை. பாரம்பரியம் மிக்க ஒரு நாட்டையே துண்டாட ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்பந்ததில் இருந்த அவர்களுக்கு, வடக்கு எல்லையைத் துல்லியமாக கணக்கிட வாய்ப்பு இருந்திருக்காது. நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தால் பல பிரச்சினைகளுக்கு இன்றும் விடிவு வரவில்லை. ஒரு நாட்டினுடைய எல்லைகள் வகுக்கப்படுவதற்கு பல்வேறு அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படும். மக்களுடைய பழக்கங்கள், பண்பாடுகள், அவர்கள் பேசக்கூடிய மொழி, இனங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள், அதுமட்டுமின்றி இயற்கையாக அமைந்த கடல், மலை, ஆறுகள் கணக்கிலே கொள்ளப்படும். இந்தியாவிற்கு மேற்கே அரபிக்கடல், தெற்கே இந்திய பெருங்கடல், கிழக்கே வங்காள விரிகுடா, வடக்கே இயற்கையாக அமைய பெற்ற இமயமலை இவைகளே இந்திய தேசத்தின் எல்லைகள். மலைகள் என்றால் மலை முகட்டின் ஒரு பகுதி ஒரு நாட்டிற்கும், மற்றொரு பகுதி இன்னொரு நாட்டிற்கும் கணக்கில் கொள்ளப்படும். ஆறுகள் என்றால் கரைகளே எல்லைகளாக கணக்கில் கொள்ளப்படும், ஆனால், 29,000 அடி உயரம் கொண்ட சிகரங்களை உள்ளடக்கிய இமயமலைத் தொடரில் எதை அடிப்படையாக வைத்து இந்தியாவிற்கும், சீனாவிற்குமான எல்லைக்கோடு தீர்மானிக்கப்பட்டது என்பது குறித்து எந்த விதமான தெளிவும் இல்லை. இந்தியாவிற்கும், சீனாவிற்குமான எல்லைக்கோட்டைத் தீர்மானித்தவர்கள் இரு நாட்டுக்கும் சொந்தமானவர்கள் அல்ல, இருநாட்டுக்கும் அந்நியமானவர்கள். இரு தேசத்தையும் அடக்கி ஆண்டவர்கள். ஆனால், நம்முடைய கேள்விகள் எல்லாம் இரு தேசங்களுக்கும் இந்த எல்லைக்கோடுதான் பிரச்சினையாக இருக்கிறபோது அதைப் பேசித் தீர்க்க இரு நாடுகளும் முன் வராதது ஏன்? ”தூரத்து வீட்டு நட்பைக் காட்டிலும், பக்கத்து வீட்டுப் பகை மோசமானதாகும்”. இந்திய எல்லையைப் பாதுகாப்பதற்காக, 10 இலட்சத்திற்கு மேற்பட்ட இந்திய வீரர்கள் கடல் மட்டதிலிருந்து 15000 – 16000 அடி உயரத்தில் உறைபனி குளிர் நிலையிலும், உண்ணாமலும், உறங்காமலும் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பாதுகாக்க கூடிய பகுதிகள் எல்லாம் ஆயிரக் கணக்கிலே மக்கள் வாழக்கூடிய பகுதிகள் என்று நினைத்து விடக்கூடாது, அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் கிடையாது, புல் பூண்டு கூட கிடையாது. எல்லைகளை பாதுகாப்பதற்காக, இந்தியாவின் ஒட்டு மொத்த பட்ஜெட்டில் ஆண்டுதோறும் 25% நிதியை ஒதுக்குகிறார்கள். இந்த நிதி இருந்தால், வீடற்ற கோடான கோடி மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கலாம். வேலை வாய்ப்பு கொடுக்கலாம், உணவளிக்கலாம். ஆனால், இந்தியாவினுடைய இறையாண்மை – எல்லைப் பாதுகாப்பு என்ற ஒரே நோக்கத்திற்காக ஆண்டுதோறும் மிகப்பெரிய விலையைக் கொடுத்து வருகிறோம்.

சில வாரங்களுக்கு முன்பு, ’லே’ பகுதியில் கல்வான் பள்ளதாக்கில் அமைக்கப்பட்ட கூடாரங்கள் தான் இப்போதைய மோதலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. எப்போதுமே எல்லைப் பிரச்சனைகளைப் பொறுத்தமட்டிலும் எந்த நாடும் பல்வேறு காரணங்களைக் கூறி உண்மைத் தன்மைகளை வெளியிடுவதில்லை. இது உலகெங்கும் ஆட்சியாளர்களிடத்தில் இருக்கக்கூடிய தவறான நடவடிக்கை ஆகும். 1962-ல் சீனா, இந்திய எல்லை பகுதிகளில் பல மைல்கள் ஊடுருவி வந்த பிறகுதான், இந்திய நாடாளுமன்றத்தில் சீனப் படையெடுப்பு குறித்து அறிவித்தார்கள். அதற்காக எல்லையில் நடக்கக் கூடிய சிறுசிறு சம்பவங்களை தினம், தினம் அறிவிக்க வேண்டும் என்பது அவசியமற்றது. ஆனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறி நடைபெறுகின்ற பொழுது என்ன பிரச்சனை? எதனால் பிரச்சனை? என்பதை கண்டிப்பாக நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா? Line of Actual Control (LAC) என்று மட்டும் இப்பொழுது அடிக்கடி பேசப்படுகிறது. LAC-க்கும், BORDER-க்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. BORDER என்றால் இருதரப்பும் சட்டரீதியாக ஒப்புகொண்ட எல்லைக்கோடு ஆகும். LAC என்றால் அந்த பகுதி யாருக்கு சொந்தம் என்று முழுமையாக வரையறுக்கப்படவில்லை என்றே கருத வேண்டும். இதுபோல இருநாடுகளுக்கும் இடையே இதுதான் எல்லைக்கோடு என்று தீர்க்கமாக முடிவு செய்யப்படாத பல பகுதிகள் உண்டு. குறிப்பாக அந்த பகுதிகள் எல்லாமே ”PASSES – கணுவாய் பகுதிகள்” ஆகும். இவைகள் தான் இரு தேசங்களுக்கும் இடையே போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்திருக்கின்றன. அவற்றில் சில பகுதிகள் இன்று வரையிலும் யாருக்குச் சொந்தம் என வரையறுக்கப்படவில்லை, அவைகளே பிரச்சினைக்குரியவைகளாக இருக்கின்றன. 1962-ல் சீனாவுக்கும், நமக்கும் இதே எல்லைக் கோடு சம்பந்தமாக மட்டுமே பிரச்சினை வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இரு நாடுகளிலும் பல அரசியல மாற்றங்கள் நடந்திருக்கின்றன. இரு நாடுகளுக்கிடையே 4057 கி.மீ தூரத்தில் 5 அல்லது 6 இடங்களில் மட்டுமே தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினைகள் தொடர்கின்றன. அவற்றை ஏன், இருநாடுகளும் பேசி தீர்க்க முன் வரவில்லை? என்பதே நம்முடைய கேள்வியாகும்.

2019 அக்டோபர் 11-ஆம் தேதி சீன பிரதமர் ஜி ஜின் பிங் அவர்களும், மோடி அவர்களும் மட்டுமே கலந்து கொண்ட இரண்டு நாட்கள் உச்சி மாநாடு தமிழகத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அதை ஓர் அரிய சந்திப்பாகவே எல்லோரும் கருதினார்கள். இரு நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக நீடித்து வந்த எல்லைப் பிணக்குகள் நீக்கப்பட்டு, ஆசியாவில் இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவிகரமாக வளர்வதற்கு ஒரு நல்ல அடித்தளமாக அமையும் என்று நாமெல்லாம் கருதினோம். ஆனால், அது பற்றி எதுவும் பேசியதாக தெரியவில்லை? இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இருக்கக்கூடிய ஒரே பிரச்சினை எல்லை பிரச்சினை மட்டுமே. அது குறித்து பேசாமல், வேறு எதற்கான சந்திப்பு என்ற கேள்வி எழுகிறதே? அந்த சந்திப்பின் பலன்தான் என்ன?

ஏழு வார காலமாக சிப்பாய் அளவில், ஹவில்தார் அளவில், கேப்டன் அளவில் பேசி தீர்வு காணாத நிலையில், இறுதியில் கர்னல்கள் அந்தஸ்த்தில் உள்ள இராணுவ அதிகாரிகள் வந்து கற்களாலும், கட்டைகளாலும் தாக்கிக் கொண்ட கொடிய மனித நேயமற்ற செயல் நடந்திருக்கிறது. இரு தரப்பிலும் இருநாட்டு வீரர்களும் பெரிய உயிரிழப்புக்கு பிறகு, இப்பொழுது மேஜர் ஜெனரல்கள் பேசி வருகிறார்களாம். இப்பொழுதுதான் வெளியுறவுச் செயலாளர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை துவங்கியதாக சொல்லப்படுகிறது, இதற்கு பெயர்தான் “RED TAPISM” என்பதாகும். DIPLOMACY என்ற பெயரில் நாட்டு மக்கள் வதைக்கப்படுவது நியாயமா?

பிரச்சினை துவங்கி நாளுக்கு நாள் அது வளர்ந்து வந்த பொழுதே, இரு நாட்டு தலைவர்களும் அது குறித்து பேசி இருந்தால், இரு நாடுகளும் தங்களது வீரர்களை இழந்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காதே?

கல்வான் பள்ளத்தாக்கு, தனது இறையாண்மைக்கு உட்பட்டது என்று சீன நாடு சொல்கிறது. இந்திய நாடு, தனது இறையாண்மைக்கு உட்பட்டது என்று அறிவித்து இருக்கிறது. ஆனால், கல்வான் பள்ளத்தாக்கு தற்போது யார் கைவசம் இருக்கிறது? என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை நமக்கு சொந்தமான அப்பகுதி அவர்களிடத்தில் இருந்தால் அதை நாம் கண்டிப்பாக மீட்டெடுக்க வேண்டும். ஒருவேளை அவர்களுடையதை நாம் வைத்திருந்தால் அவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் வரலாம். நமக்குச் சொந்தமானது என்று உறுதியாகக் கருதுகின்ற போது, அதை பெறுவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று பேச்சுவார்த்தை, மற்றொரன்று இராணுவ ரீதியான நடவடிக்கை. பேச்சுவார்த்தை என்ற அணுகுமுறையை கையாண்டாலும் ’லே’ பகுதியில் தொடங்கி, சிக்கிம், நாத்துலா, அருணாச்சலப்பிரதேசம் வரையிலும் உள்ள எல்லாவிதமான சிக்கலான எல்லைப் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும். இராணுவ நடவடிக்கை என முடிவெடுத்தால் அது ஒரு முழு யுத்தமாகத்தான் மாறும். அது இரண்டு நாடுகளுக்கிடையேயான போராக இருக்காது, அது பரந்துபட்ட அளவிலான யுத்ததிற்குக் கூட வித்திடலாம். போரின் முடிவில் எவற்றையெல்லாம் பெறுவோம்? என்பதெல்லாம் இப்பொழுது அறுதியிட்டுச் சொல்ல முடியாது. போர் என்பது அவ்வளவு எளிதானது அல்ல, அதற்கு மிகுந்த ஆயத்தமும், எச்சரிக்கையும் தேவை. இது மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். இந்தியாவைத் தளமாக பயன்படுத்த சில வல்லரசுகள் திட்டம் தீட்டி வருகின்றன.

அமெரிக்கா 1947-லிருந்து ஏறக்குறைய 60 வருடங்கள், பாகிஸ்தானுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்து, இந்தியாவை நிம்மதி இழக்கச் செய்து வந்தது. அண்மையில் கூட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவில மதச் சுதந்திரம் இல்லையென்று என்று கூப்பாடு போடுகிறார்கள்? அமெரிக்கா எப்போதுமே இந்தியாவிற்கு நம்பிக்கைக்குரிய நண்பனாக இருந்ததில்லை. இருப்பினும், இப்பொழுது இந்தியா மீது அமெரிக்காவிற்கும், ட்ரம்பிற்கும் திடீர் பாசம் வந்திருப்பதை போல காட்டுகிறார்கள். இந்தியாவும் ரஷ்யாவும் மிக நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் அதை உடைக்கவும், தெற்காசியாவில் ஒரு நிம்மதியற்ற சூழலை உருவாக்கவும் பாகிஸ்தானை கைப்பாவையாக அமெரிக்கா பயன்படுத்தியது. அந்நாடு தீவிரவாதிகளின் முகாம்களாக மாறிவிட்ட நிலையில் ”சட்டி சுட்டதடா! கை விட்டதடா!!” என பாகிஸ்தானை கைகழுவி விட்டு, இந்தியா பக்கம் தன்னுடைய பார்வையைச் செலுத்துகிறது. இந்திய நாடு, ஏற்கனவே RIC என்ற அழைக்கப்படக்கூடிய ரஷ்யா, இந்தியா, சீனா என்ற கூட்டமைப்பிலும், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா என்ற BRIC அமைப்பிலும், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா என்ற BRICS எனும் அமைப்பிலும் முக்கியத்தும் வாய்ந்த நாடாக இருக்கிறது. இந்தியா சர்வதேச அளவில் ”அணிசேரா நாடு” என்ற நல்ல பெயருடன் இன்றும் விளங்கி வருகிறது.

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நகரின் ஹிரோசிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களின் மீது குண்டுகளை வீசி, இலட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கி, சாதாரண அப்பாவி மக்களை கொன்று குவித்து, இராணுவத்தால் தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவிக் கொண்ட அமெரிக்கா, ஆயுத வியாபாரம் செய்வதற்காக பல நாடுகளில் சண்டையை மூட்டி விடும். ஒரு நாட்டில் சண்டை முடிந்தால், மறு நாட்டில் சண்டையை உருவாக்கும். பாலஸ்தீனத்தில் ஆயுத வியாபாரம் முடிந்த பிறகு, ஆப்கானிஸ்தான், சிரியா, எகிப்து, ஈராக், ஈரான், நாடுகளிலும் ஆயுத வியாபாரம் முடிவுற்ற நிலையில், தற்போது ஒரு புதிய சந்தை அவர்களுக்கு தேவைப்படுகிறது. தனக்கு நிகராக எந்த நாடும் வளரக்கூடாது என்று எண்ணிய அமெரிக்காவிற்கு ஈடாக, ரஷ்யா ஆயுத பலத்தில் வளர்ந்திருந்தாலும், பொருளாதார பலத்தில் அவ்வளவு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆனால் சீனா 25 ஆண்டுகளில் மிகப்பெரிய வலுவான உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டமைத்து எல்லாவிதமான பலத்தோடும், அமெரிக்காவிற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமலும், பல தளத்தில் அமெரிக்காவை மிஞ்சும் அளவிற்கும் வளர்ந்து நிற்கிறது. இதை அமெரிக்காவால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இப்பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான களம் அமைக்க, சீனாவின் ஒரு பகுதியான தைவானை தவிர அமெரிக்காவிற்கு வேறு எந்த நாடும் கிடையாது. எனவே இந்தியாவை எப்படியாவது தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா திட்டமிடுகிறது.

கடந்த 73 ஆண்டுகளில் இந்தியாவிற்கு அமெரிக்காவால் எந்தவிதமான பலனும் கிடையாது. ஈரானில் இருந்து இந்தியாவிற்கு குழாய்கள் வழியாக மிக குறைவான செலவில் எரிவாயுவை கொண்டுவர அமெரிக்கா தடையாக நிற்கிறது. அதுபோல அந்நாட்டிலிருந்து குறைந்த விலையில் பெட்ரோலிய கச்சா பொருட்களை வாங்குவதற்கும் அமெரிக்கா முட்டுக்கட்டை போடுகிறது. இப்பொழுது அமெரிக்காவில் இருந்து பெட்ரோலிய பொருட்களை அதிகமாக வாங்கும் நாடாக இந்தியா மாற்றப்பட்டிருக்கிறது. எப்படி பிரிட்டிஷ் 1700-களில் கிழக்கிந்திய கம்பெனிகள் மூலமாக வர்த்தகத்தை தொடங்கி, இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தியதோ? அதேபோல ஒரு துவக்கத்தை அமெரிக்கா கையாண்டு வருகிறது. இந்தியா சுயசார்பு பொருளாதாரத்தோடு வளர்ந்து வந்தால்; இந்தியாவும், சீனாவும் நட்பு பாராட்டும் பட்சத்தில் அமெரிக்கா ஏகாதிபத்தியம் காணாமல் போய்விடும் என்ற அச்சத்தில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பகையை வளர்ப்பதில் அமெரிக்கா மும்முரமாக இருக்கிறது.

அண்மைக்காலத்தில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடையே ”QUAD” என்ற இராணுவ கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய நோக்கம் என்ன? இந்த கட்டமைப்புகள் எந்த விதத்தில் இந்தியாவினுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கப் போகிறது? என்பது பற்றி தெரியவில்லை. மாறாக, சீனாவை ஆத்திர மூட்டுவதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா தனது பெருமை அறியாமல் அமெரிக்கா விரித்த வலையில் விழுந்து விட்டதாகவே கருதத் தோன்றுகிறது. இந்தியாவுக்கு வெளியிலிருந்து எந்த நாட்டினுடைய இராணுவ பலமும் அவசியமில்லை. தன் சுயசார்பிலும், இந்திய மக்களின் ஒற்றுமையிலுமே இந்தியாவினுடைய பலமும், வெற்றியும் அடங்கியிருக்கிறது.

வளரும் பிரேசில், நட்புடன் விளங்கும் ரஷ்யா, அண்டை நாடு சீனா, வெள்ளை இனத்திற்கு அடிமையாக இருந்து, விடுதலை பெற்று கருப்பின மக்களால் ஆளக்கூடிய தென் ஆப்பிரிக்கா ஆகிய இந்த அற்புதமான கூட்டணியுடன் முன்னேறிச் செல்வதற்கு பதிலாக, ஏகாதிபத்திய அமெரிக்காவுடனும், ஜப்பானுடனும், ஆஸ்திரேலியாவுடனும் கூட்டு சேர்வது எதைப் பெறுவதற்காக?

கரோனா உச்சகட்டம் இந்திய மக்களை வாட்டி வதைக்கின்ற நேரத்திலும் இந்திய பிரதமர் ஆஸ்திரேலிய பிரதமருடன் 5 அம்ச ஒப்பந்தங்களை போடுகிறார். ஆனால் இவைகளெல்லாம் அண்டை நாடான சீனாவுக்கு எதிரானது என்பதை அந்த நாடு உணர்ந்திருக்காதா? இந்திய – சீன நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் ஏகாதிபத்திய அமெரிக்கா சந்தோஷப்படும். ஏனென்றால், அதனுடைய விமானங்களை இங்கே விற்றுக்கொள்ளலாம், ஆயுத விற்பனை ஜோராக நடைபெறும். கரோனா முடக்கத்தால் உலகில் இலட்சக்கணக்கில் மக்கள் மாண்டு கொண்டிருக்கக்கூடிய இவ்வேளையில், வேறு எந்த நாடாவது உதவிக்கு வரும் என்று எண்ணினால் அது தவறாகப் போய்விடும்.

இந்தியாவும், இந்திய இராணுவமும் முன் எப்போதைக்காட்டிலும் பலமாகவும், வலுவான தலைமையின் கீழும் செயல்படுகிறது. இப்பலத்தை அடிப்படையாக வைத்து சீனாவை பேச்சுவார்த்தைக்கு கொண்டு செல்வதே சரியான யுத்த தந்திரமாக இருக்க முடியும். பலவீனமாக இருந்தால் சண்டையை தேர்ந்தெடுக்கலாம். நாம் பலமாக இருக்கிறோம், அதனால் சமாதானத்தை முதலில் முன்வைப்போம். சீன தேசத்தின் 150 கோடி மக்களின் வாழ்வாதாரங்களும், இந்திய தேசத்தின் 130 கோடி மக்களின் வாழ்வாதாரங்களும், எப்போதோ? யாரோ? வரைந்த கோடுகளாலும், ஏதோ ஒரு மூலை முடக்கில் போடப்பட்ட கூடாரங்களாலும் பாதிப்புக்கு ஆளாகலாமா?, போதாக்குறைக்கு இந்தியா வசம் இருக்கும் பகுதிகளை உள்ளடக்கி, நேபாளம் தனது எல்லையை மறுசீரமைத்துள்ளது. எல்லா நாட்டிலும் மக்கள் அமைதியையும், வளர்ச்சியையும் மட்டுமே விரும்புவார்கள். போர்களின் முடிவில் பல தேசங்கள் காணாமல் போயிருக்கின்றன. பல தேசங்கள் மீண்டெழ பல காலம் பிடித்திருக்கின்றன. இந்திய மக்கள் சகிப்புத்தன்மைக்கு பெயர் பெற்றவர்கள் என்ற வரலாறு உண்டு. ஆனால் அது எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தாது என்பது வேறு விஷயம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, தூரத்தில் உள்ளோரை நம்பி அண்டை வீட்டாரோடு சண்டை போட வேண்டியதில்லை.

சண்டை போடுவதற்கு உண்டான வலுவான காரணம் இருக்கிறது என்றால் சண்டையை தொடங்குங்கள் ! அல்லது சமாதானத்திற்கான பேச்சுவார்த்தை பாதையை தேர்ந்தெடுங்கள்!!

எதை தேர்ந்தெடுத்தாலும் அது நிரந்தரமாக, என்றும் தொல்லை தராத எல்லைகளைத் தீர்மானிக்கக் கூடிய நடவடிக்கையாக இருக்க வேண்டும்!!!

டாக்டர்.க.கிருஷ்ணசாமி M.D,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
19/06/2020

Exit mobile version