வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான காலக்கட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக பலகோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2002-ல் வழக்கு தொடரப்பட்டது.அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து வேலூர் நீதிமன்றம் 2007-ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 2013-ல் அதிமுக ஆட்சியில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார்.லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகைகளை விளக்கி வாதிட்டார்.
துரைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும், அவரது குடும்பத்தினர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறை மறு ஆய்வு மனுவை ஏற்று, அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்து, சாட்சி விசாரணையை துவங்க, வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, 1996-2001 காலத்தில் சொத்து சேர்த்த வழக்கு என்பதால், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், தி.மு.க பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடைய இடத்திலிருந்து 11.5 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தது வருமான வரித்துறை. அது தொடர்பாகப் பதிந்த வழக்கில்தான், கடந்த ஜனவரி 3-ம் தேதி காட்பாடியிலுள்ள கதிர் ஆனந்த்தின் வீடு, தி.மு.க பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், சீனிவாசனின் மைத்துனர் தாமோதரன் உள்ளிட்டோரின் இடங்களில் அதிரடியாகச் சோதனையிட்டது அமலாக்கத்துறை.
கதிர் ஆனந்த் குடும்பத்துக்குச் சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியும் சோதனையிலிருந்து தப்பவில்லை. கிட்டத்தட்ட மூன்று நாள்கள் தொடர்ந்த அந்த ரெய்டில், ஏராளமான ஆவணங்களும், ஒரு கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கும் கைப்பற்றப்பட்டன.மேலும் துரைமுருகன் மகன் “கதிர் ஆனந்த், தி.மு.க பொதுச்செயலாளரின் மகன் மட்டுமல்ல… தி.மு.க-வின் சிட்டிங் எம்.பி. அவர்மீது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதையும், விசாரணை செய்ததையும் இதுவரையில் தி.மு.க பேருக்குக்கூடக் கண்டிக்கவில்லை.எனவே துரைமுருகனின் கட்டமைப்பு உடைத்தெறியப்படுகிறது என அவரின் ஆதரவாளர்கள் பொங்கி வருகிறார்கள்.
